நக்கீரன் செய்திப்பிரிவு : இலங்கையில் வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்குப் பங்குச்சந்தைகளை மூட, பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நிலவிவரும் மோசமான பொருளாதார சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசைக் கண்டித்துப் போராட்டம் நடைபெறும் இடங்களின் முன்பாக காவல்துறை வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இதில் முக்கியமாக தலைநகர் கொழும்பில் அதிபர் மாளிகை அருகே கலிமுகத் திடலில் மக்கள் நடத்தி வரும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு, கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் அல்லாத மக்கள் ஒன்றிணைத்து நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
மக்கள் அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, அரசு எதிராகப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இச்சூழலில், இந்த இடத்திற்கு அருகே திடீரென ஏராளமான காலி ட்ரக் வண்டிகள் கொண்டு வரப்பட்டன.
இதனால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் அரசின் போக்குக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டக்காரர்களை விரட்ட நினைத்தால், பின்விளைவுகளை அரசுச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பிய நிலையில் வாகனங்கள் அங்கிருந்து திரும்பினர்.
இப்படி போராட்டம் நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில், வரும் ஏப்ரல் 18- ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு வர்த்தகத்தை நிறுத்தி வைக்குமாறு, இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பங்குதாரர்கள் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு இயக்குநர் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக