மின்னம்பலம் : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இன்று 69ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில்... பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு தேசிய அளவிலான தலைவர்களும் மாநில அளவிலான தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஸ்டாலினின் உடன்பிறந்த அண்ணனான முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி இன்று (மார்ச் 1) பகல் சென்னை சென்று, முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார்.
2014ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கலைஞரால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி அதன் பிறகு அவ்வப்போது சலசலப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து திமுக பெரும்பான்மை பெற்று ஸ்டாலின் முதல்வரான நிலையில்... பழைய கசப்புகளை எல்லாம் மறந்து எனது தம்பி ஸ்டாலின் நல்லாட்சி கொடுப்பார் என்று வாழ்த்து தெரிவித்தார் அழகிரி.
அதன்பின் அழகிரியும் ஸ்டாலினும் சந்தித்துக் கொள்வார்கள் என பல்வேறு யூகங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. முதல்வராக பொறுப்பேற்ற பின் மதுரைக்கு சென்ற ஸ்டாலின் அங்கே அழகிரியை சந்திப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் அப்போது, "முதல்வரான உன்னை நானே தேடி வந்து சந்திக்கிறேன்" என அழகிரி சொல்லிவிட்டதாக அவரது தரப்பிலேயே தெரிவித்தனர்.
அதற்கு பிறகு ஸ்டாலின் அழகிரி சந்திப்பு வெளிப்படையாக நடக்காத நிலையில் இன்று தனது தம்பியான ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் செல்கிறார் அழகிரி.
அழகிரி ஸ்டாலின் சந்திப்பு கலைஞர் குடும்பத்திலும் திமுகவிலும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் குடும்ப பிரமுகர்கள்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திமுக தலைவர் ஸ்டாலினை, கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரி சந்திப்பதன் மூலம்... அவர் மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக