மாலைமலர் : கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றபோது மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.
பெங்களூரு: கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.
அப்போது, இந்த சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. இச்சட்டம் மக்கள் விரோதமானது, மனிதாபிமானமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது, கொடுமையானது என கூறியது. அத்துடன், இந்த சட்ட மசோதாவை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றக் கூடாது, திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த மசோதாவை எதிர்த்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, மசோதாவுக்கு எதிராக முழக்கமிட்டபடி அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மதச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோதமாக ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடுத்து உரிய சிறைத் தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக