நூல்: ஆதி இந்தியர்கள் - நூலாசிரியர்: டோனி ஜோசஃப் - வாசிப்பும் விமர்சனமும்: முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 4
இன்றைக்கு ஏறக்குறைய 65,000 ஆண்டுகள் காலகட்டத்தில் நவீன மனிதர்கள் இந்தியாவை அடைந்த போது அவர்கள் சிறு குழுக்களாக இந்தியாவின் கடற்கரையோர பகுதிகள் வழியாக இடம்பெயர்ந்து, சில பகுதிகளில் தங்கி வாழ்ந்து, மீண்டும் இடம்பெயர்ந்து, என்ற வகையில் கடந்து சென்றிருக்கக்கூடும்.
முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் என்று தேடினால் அந்தமான் தீவுகளில் இருக்கும் ஓங்கே பழங்குடியினரை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்று நம் கண்முன்னே இருக்கும் முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் இவர்கள் என்று மரபணுவியல் ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
ஓங்கே இனத்தவர்களைப் போல அந்தமான் தீவில் வசிக்கும் ஜரவா மக்களும் இன்றைக்கு ஏறக்குறைய 55,000 ஆண்டுகள் கால வாக்கில் இடம்பெயர்ந்தவர்கள். இவர்கள் தெற்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதியில் வசிக்கின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையே இன்று இருக்கின்றனர்.
இன்றைய இந்திய நிலப்பகுதியில் நமது மூதாதையர்களான தொல் மனிதர்கள் பல்வேறு காலகட்டங்களில் உட்புகுந்திருக்கின்றனர். ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் பரவலாக்கம் என்றில்லாமல் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி குழுக்களாக வந்து சேர்ந்திருக்க வேண்டும். இவர்களுள் பண்டைய மனிதர்கள் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கக்கூடும் என நூலாசிரியர் தன் கருத்தை குறிப்பிடுகின்றார். நமது மூதாதையர்களான நவீன மனிதர்கள் கடற்கரையோரமாக தங்கள் நகர்வை ஏற்படுத்திக்கொண்டே ஏனைய தொல் மாந்தர்கள் இருந்த பகுதிகளில் அவர்களோடு கடும் தாக்குதலில் ஈடுபட்டு அவர்களை வீழ்த்தி புதுப் புது பகுதிகளுக்குப் பரவியிருக்க வேண்டும்.
இந்தியாவின் இன்றைய நவீன மனிதகுலம் இந்தியாவிற்குள் நுழைந்த போது அங்கு ஏற்கனவே காலூன்றி இருந்த ஏனைய தொல் மாந்த இனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு நிலைபெற்றது. தெற்காசியாவில் பண்டைய மனிதர்களின் புதைப் படிமம் ஓர் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஓரளவு முழுமையான மண்டையோடு கிடைத்தது என்றும் அது ஹோமோ ஹெய்டல்பர்ஜன்சிஸ் வகை என்றும் ஆய்வில் அறியப்பட்டது.
நூலின் இரண்டாம் அத்தியாயம் `விவசாயம் உழவர்கள்` என்ற கோணத்தில் விரிவாக அலசுகிறது. தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் பரிசோதனைகளில் பழமையானது மெஹெர்கர் என்ற கிராமத்தில் தொடங்கியது. இப்பகுதி இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் உள்ள போலன் கணவாய் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கிராமம். கிமு 7000லிருந்து கிமு 2600 வரை மக்கள் வாழ்ந்த ஒரு நிலப்பகுதி இது. தெற்காசியாவில் வேளாண்மை எவ்வாறு தொடங்கி பரவியது என்பது குறித்த ஆய்வுக்கு இந்த ஆய்வு உதவியது. இதன் அடிப்படையிலேயே ஹரப்பா நாகரிகம் தொடர்பான ஆய்விற்கும் இது வித்திட்டது என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழுவினர் இப்பகுதியில் அகழாய்வு செய்த போது கண்டறியப்பட்ட அனைத்து வீடுகளும் பல அறைகளைக் கொண்டவையாக இருந்தன என்றும், கைகளால் தயாரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு அவை அமைக்கப்பட்டிருந்தன என்றும், மேலும் விரிவாக பல தகவல்களை இந்த அத்தியாயத்தில் மெஹெர்கர் வாழ்விடப் பகுதி பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
மத்திய யூப்ரடீஸ் பகுதியில் முர்ரேபிட் என்ற இடத்திற்கு அருகே அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் படி அங்கு வசித்து வந்தவர்கள் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே கோதுமையையும் 'ரை' எனப்படும் புல்லரிசியையும் சாகுபடி செய்திருந்தனர் என்றும் கிமு 10,700 ஆம் ஆண்டு வாக்கிலேயே 'ரை' சாகுபடி செய்யப்பட்ட அறிகுறிகள் தோன்றியதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். மெஹெர்கர் தொடர்பான விரிவான அலசல், அங்கு மேற்கொள்ளப்பட்ட விவசாய முறைகள், தட்பவெட்பநிலை ஆகியன பற்றிய செய்திகள் இப்பகுதியில் நன்கு ஆராயப்படுகின்றன.
இந்த அத்தியாயம் மேலும் ஒரு முக்கிய செய்தியை விரிவாக ஆராய்கிறது. தற்காலத்து இந்திய மக்கள் குழுவின் ஒட்டுமொத்த மரபணு தொகுதியையும் வரிசைப்படுத்தி இந்திய மக்களின் வரலாற்றை மறு நிர்ணயம் செய்யும் நோக்கத்தில் 2009ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் நிகழ்த்தப்பட்ட இரண்டு ஆய்வுகளை இப்பகுதி மிக விரிவாக ஆராய்கிறது. முதல் ஆய்வின் தலைப்பு Reconstructing Indian Population History. இரண்டாவது ஆய்வின் தலைப்பு Genetic Evidence for Recent Population Mixture in India. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளுமே கீழ்க்காணும் விஷயங்களை வலியுறுத்துகின்றன் :
1) இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் கலப்பினத்தை சேர்ந்தவர்களே; கலப்பு விகிதாச்சாரத்தில் மட்டுமே வேற்றுமை இருக்கிறது
2) இந்திய மக்களின் பரம்பரை குறைந்தபட்சம் இரண்டு குழுக்களோடு தொடர்பு கொண்டுள்ளது 1) முதல் இந்தியர்கள் 2) மேற்கு யுரேசியர்கள்.
இந்த ஆய்வின் முடிவுகள் எப்படிப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொண்டன என்பதை டேவிட் ரைட் 2018-ஆம் ஆண்டில் வெளியிட்ட Who we are and How we got here என்ற நூலில் விவரிக்கும் செய்தியையும் நூலாசிரியர் இப்பகுதியில் வழங்கி அதனை விவரிக்கின்றார். மிக சுவாரசியமானதும் முக்கியமானதுமான செய்தி என்னவென்றால், இந்த ஆய்வறிக்கையின் படி தென்னிந்திய மூதாதையர் முதல் இந்தியர்களின் வம்சாவளியினர் ஆவர் என்ற பதிலே!
ஜாக்ரோஸ் மலைப் பகுதியைச் சேர்ந்த ஈரான் வேளாண் குடியினரின் தொடர்புகள், மரபணு ரீதியிலான பங்களிப்புகள், சிந்து சமவெளி பகுதியில் இம்மக்களது தாக்கம் ஆகிய கூறுகள் முக்கிய கவனத்தோடு இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தெற்காசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலகட்டத்தில் ஈரானிய வேளாண்குடியினர் பெரும் எண்ணிக்கையில் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்; அவர்களுடைய மரபியல் சுவடுகள் இன்றைய இந்தியர்களிடம் அளக்க முடியாத விதத்தில் பதிந்து போய் உள்ளன.
இந்த அத்தியாயத்தின் இறுதி பகுதியில் பின் குறிப்பாக ஒரு முக்கிய செய்தியை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதாவது கிமு 1900 ஆண்டு வாக்கில் ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சி அடைந்த போது அதைக் கட்டி எழுப்பி பல நூற்றாண்டுகள் பேணிக்காத்தவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவினர்; குறிப்பாக, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு அவர்கள் சென்றனர்!
தொடரும்..
-சுபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக