tamil.indianexpress.com :
திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட
செயலாளரும் அக்கட்சியின் தணிக்கை குழு உறுப்பினருமான எல்.பலராமன் கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். பலராமன் மறைவுக்கு...திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளரும் அக்கட்சியின் தணிக்கை குழு உறுப்பினருமான எல்.பலராமன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். பலராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளரும் தணிக்கை குழு உறுப்பினருமான எல்.பலராமன் சென்னையின் திமுக முகங்களில் ஒருவர். சென்னை துறைமுகம் தொகுதி மற்றும் வட சென்னை மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்தியவர். பலராமன் திமுக தலைவர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். எம்.எல்.ஏ-வோ எம்.பி-யாகவோ இல்லாத போதும் அவர் திமுகவின் வெற்றிக்காக உழைத்தவர். 1991-ம் ஆண்டு தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வெற்றி பெற பணியாற்றியவர் என்று திமுகவினரால் நினைவு கூரப்படுகிறார்.
சென்னையில் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த எல்.பலராமன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி தயாநிதிமாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பலராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர்- போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்திற்கு நிற்கும் தைரியசாலி.
கழகத் தலைவராக இருந்து நம்மையெல்லாம் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அவர்களும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி – ஒரு இயக்கத்தின் தலைவரையும், பொதுச்செயலாளரையும் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றும் பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டும் அவரை- ஏன், ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும்- கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவரை இன்றைக்கு கழகம் இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது.
எல்.பலராமன் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும்- அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில், “முன்னாள் வடசென்னை மாவட்டக் கழகசெயலாளரும், தணிக்கை குழு உறுப்பினருமான அருமை அண்ணன் எல்.பலராமன் அவர்களின் மறைவு என்பது கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளர் எல்.பலராமன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamil.oneindia.com - mathivanan-maran : சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் திமுகவின் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்ததாக லோக்சபா எம்.பி. கனிமொழி தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் இரங்கல்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் வட சென்னை மாவட்டச் செயலாளர் அண்ணன் பலராமன் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கழகத்தின் மூத்த முன்னோடியான அவரது மறைவு, மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக