சாவித்திரி கண்ணன் :
கிரிமினல் தண்டணை கொடுக்கப்படும் ஜாக்கிரதை…! பேரிடர் காலத்தில் உயிரைக்
கொடுத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஒழுங்கா
சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தால் அதை நாங்கள் வேடிக்கை பார்க்க
முடியாது…!’’ இப்படியொரு எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் ,மாநில அரசையும் பார்த்துச் சொல்வது வரலாற்றிலேயே இது தான் முதன்முறையாக இருக்க கூடும் என நினைக்கிறேன்!
சமூக அந்தஸ்த்தின் மிக உயர்ந்த தளத்தில் வைத்து மதிக்கப்பட்டு வருபவர்கள் மருத்துவர்கள்! செவிலியர்கள் எனப்படுபவர்களை மற்றொரு தாயாக பாவிக்கும் சமூகம் இது! அதே போல அடித்தளத்தில் அயராது பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இல்லையென்றால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் ஸ்தம்பித்துவிடும்!
உயிரைக் கொடுத்து ஊழியம் செய்யும் தன் ஊழியர்களான இவர்களுக்கு கூட சரியாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்றால், இந்த அரசுகளின் யோக்கியாம்சம் தான் என்ன? நம்பகத்தன்மை என்ன?
தமிழகத்தில் பல போஸ்ட்கிராஜ்வேட் மருத்துவர்கள் கடுமையாக கசக்கி பிழிந்து வேலை வாங்கப்பட்டு, பத்து,பனிரெண்டுமாதகாலமாக ஊதியம் பெறாமல் அவதிப்படும் செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன!
மருத்துவர்கள் எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள் என்பதும் ,சுகாதாரப் பணியாளர்களின் கால்களைக் கழுவி வணங்குவதும்…..இதெல்லாம் என்ன? வெறும் பாசாங்கா? கபட வேஷமா?
உயிரைக் காப்பாற்றுவர்களையே மதிக்காத அரசாங்கம் உயிருக்கு போராடும் ஏழை,எளிய நோயாளிகள் விஷயத்தில் எப்படி ஒழுங்காக நடந்து கொள்ளமுடியும் என்ற கேள்வி வருகிறதல்லவா?
தமிழகத்தில் சில நகராட்சி மருத்துவமனைகளில் கொரானாவுக்காக சில சுகாதாரப் பணியாளர்களை தினக் கூலி அடிப்படையில் அவுட் சோர்சிங் முறையில் எடுத்தார்கள்! அவர்களுக்கு தினசரி ஊதியம் ரூபாய் 550 என வாக்குறுதி தரப்பட்டு இன்னும் வழங்கப்படாத நிலையில்,அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, ரூ 550 தரமுடியாது ரூ 450 தான் தரமுடியும் என்று கட்டபஞ்சாயத்து நடந்துள்ளது!
எளிய மனிதர்களிடம் ஆபத்தான காலகட்டதில் வேலை வாங்கிவிட்டு வயிற்றில் அடிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?
சமீபத்தில் கொரானா பணிகளுக்கென்று இரண்டாயிரம் செவிலியர்கள் தமிழக அரசால் பணிக்கெடுக்கப்பட்டர்கள்! அவர்களின் மாத ஊதியம் வெறும் 14,000 தான்! இது கொரானா கால வறுமையில் தவிக்கும் ஏழை,எளிய சகோதரிகளை ’எக்ஸ்பிளாய்டேசன்’ செய்வதல்லாமல் வேறென்ன? இப்படி எளியவர்களை ஏய்த்து பிழைக்கத் தானா ஒரு அரசாங்கம்!
தற்போது இதைவிடக் கொடுமையாக, ஜெண்டில்மேன் என்ற ஒரு தனியார் நிறுவனம் மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த பணியிடங்களையும் நிரப்பும் அதிகாரம் பெற்று விளம்பரம் செய்தது..அந்த நிறுவனம் சென்னையில் உள்ள மிக முக்கிய ஐந்து அரசு மருத்துவமனைகளுக்கான 13 பிரிவுகளில் மொத்தம் 2,355 பணியாளர்கள் போஸ்டுகளுக்கு தன்னிடம் விண்ணக்கலாம் என விளம்பரம் தந்தது.
விண்ணப்பிப்பவர்களிடம் அது, வெறும் மூன்றுமாதகால தற்காலிகவேலைக்கு ஒரு மாத ஊதியத்தை கமிசனாகக் கேட்டுள்ளது.இது குறித்து,அந்த நிறுவனம் நடத்தும் பேரத்தை நியூஸ்18 தொலைகாட்சி அம்பலபடுத்தியது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கேன்சல் ஆனது!
கொத்துக் கொத்தாக தொற்று நோயால் மனிதர்கள் செத்துமடியும் ஒரு பேரிடர் காலத்தில் எவ்வளவு கெத்தாக ஊழல்களை தொடர்ந்து செய்கிறார்கள் பாருங்கள்! ஒரு அரசு நேரடியாக வேலை தராமல் அதை அவுட்சோர்சிங் முறையில்,தரகர்களைக் கொண்டு நிரப்புவது படு கேவலம்!
இந்த ஆட்சியில் சுகாதாரத்துறையில் அமைச்சர் விஜயபாஸ்கரும்,அவருக்கு அனுசரணையான உயர் அதிகாரிகளும் செய்யும் ஊழல்கள் பற்றி எத்தனை செய்திகள் வந்தாலும், அதனால், சம்மந்தப்பட்டவர்களுக்கு சிறிதளவேனும் குற்றவுணர்வு ஏற்பட்டதாகவோ,அல்லது அவர்கள் தண்டிக்கப்பட்டதாகவோ வரலாறில்லை!
சமீபத்திய நக்கீரனீல் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் கட்டியுள்ள ஆடம்பர பங்களா பற்றிய செய்திகளும்,புகைப் படங்களும் வந்துள்ளன! ஒரு நடுத்தரவர்க்க குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒருவர் சுகாதாரத்துறை செயலாளராகிய குறுகிய கால கட்டத்தில் பிரிட்டிஸ் பேரரசியின் அரண்மனையைப் போல வீடு கட்டுகிறார் என்றால், அந்த துறையில் நடக்கும் ஊழல்களுக்கு இதைவிட வேறு உதாரணம் என்ன வேண்டும்?
அரசாங்கம் என்றால் அது, ’’நம்மை பாதுகாப்பதற்கானது’’ என்ற உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால்,அது இன்று ஏய்பவர்களின் பாதுகாவலனாகவும், எளிய மக்களை நிர்கதியற்றவர்களாகவும் நிறுத்திக் கொண்டிருக்கிறது!
ஆகவே தான், உச்ச நீதிமன்றமே அதிரடியாக தலையிட வேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது! இன்னும் கூட கூடுதலாக நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கும் போலத் தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக