மொத்தம் 2,343 ஹெக்டேர் மற்றும் 10,000 கோடி!!! இது இத்தோடு நின்று விடாது, இது வெறும் தொடக்கம்தான்!!!
nakkheeran.in -kamalkumar :
தற்போது உயர்நீதிமன்றம் பசுமை
வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. பசுமை
வழிச்சாலை என்றால் என்ன, அதை ஏன் மக்கள் எதிர்க்கின்றனர் என்று
பார்ப்போம்...
பசுமையை அழித்து போடப்படும் சாலைதான் பசுமை சாலை திட்டம். சேலம்
மாவட்டத்திலுள்ள அயோத்தியாப்பட்டணம், அரமனூர், ஆச்சாங்குட்டப்பட்டி,
ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், உடையாப்பட்டி, உத்தமசோழபுரம், எருமாபாளையம்,
கத்திரிப்பட்டி, குப்பனூர், குள்ளம்பட்டி, சித்தனேரி, சுக்கம்பட்டி,
பாரப்பட்டி, பூலாவரி அக்ரகாரம், மஞ்சுவாடி, மாசிநாயக்கன்பட்டி,
மின்னாம்பள்ளி, மூக்கனூர், வெள்ளையப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு.
இதனால் சேலத்திலுள்ள கிட்டதட்ட ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்படும் என்று
கூறினர் விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்.இதற்கு அரசு சார்பில் கூறப்பட்ட பதில் “நாங்கள் சாலையை பசுமையாக வைத்துக்கொள்வோம்” என்பதுதான். ஆனால் இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. பசுமை சாலை திட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் நிலங்களில் உங்களால் விவசாயம் செய்ய முடியுமா?
இந்த பசுமை சாலை திட்டம் இதோடு
நின்றுவிடாது. சாலை வசதி நன்றாக இருக்கிறது என்பதால் அதைத்தொடர்ந்து சில
நிறுவனங்கள் அங்கு தன் கிளையை நிறுவும். அங்கு இருக்கும் வளங்களை கொஞ்சம்,
கொஞ்சமாக அழிக்கும். இது ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது, அதற்கு
இணையான பாதையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கு
இடம் தேவைப்படும். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி விளைநிலங்களை பணம் கொடுத்து
வாங்கும் அல்லது தரமறுப்பவர்களிடம் தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி
பறிக்கும். அதற்குபின் என்ன வீடுகள் அதிகரிக்கும், அங்கு பள்ளி, கல்லூரிகள்
வரும். இப்படி அது ஒரு குட்டி நகரமாக மாறிவிடும். இது நடைமுறையில்
சாத்தியமே. சென்னையைச் சுற்றியுள்ள 20 முதல் 40 கிலோமீட்டர்கள்
தூரம்வரையிலும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு மாறியவைதான். இதற்கு
எடுத்துக்காட்டு சென்னைக்கும், செங்கல்பட்டிற்கும் இடைப்பட்ட தூரம்தான்.
அப்படிதான் தாம்பரம் இன்று முழு நகரமாகவே மாறியுள்ளது. தனியாருக்காக
பாடுபடும் அரசு, மக்களுக்காகவும் பணிசெய்தால் நன்றாக இருக்கும். சாலையும்,
வளர்ச்சியும் அவசியமாக இருக்கலாம், ஆனால் உணவு இன்றியமையாத ஒன்று
என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.<">
போராடுவது என்பது ஒவ்வொருவரின் உரிமை.
தனிமனித உரிமைகளுக்காக போராடுபவர்களைத் தடுக்கவே இங்கு யாருக்கும் உரிமை
இல்லை. அப்படி இருக்கையில் பொதுநலனுக்காக போராடுபவர்களை ஒடுக்குவது என்பது
ஜனநாயகத்தை கொலை செய்யும் செயல். பியுஸ் மனுஷ், வளர்மதி போன்ற
செயற்பாட்டாளர்களையும், மன்சூர் அலிகான் போன்றவர்களையும், பல
விவசாயிகளையும், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய
துடிக்கும் அரசு, சட்டத்தை சட்டை போல பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும்
சண்டாளர்களை எப்போது கைது செய்யும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக