வியாழன், 25 ஜனவரி, 2018

அமீர் : ரஜினி டெல்லியில்தான் அரசியலை தொடங்கவேண்டும் ,,, சிஸ்டம் சரியில்லை என்றால் முதலில் அங்குதான்

அச்சமில்லை அச்சமில்லைவிகடன் : அலாவுதின் ஹுசைன்
பிரியங்கா.பவிகடன் :  வழக்கமாக சினிமா விழாக்களில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று சம்பந்தப்பட்ட படக்குழுவினரை வாழ்த்திப் பேசுவார்கள். சமயத்தில் அதில் சினிமா சார்ந்த பிரச்னைகள் பற்றி காரசாரமாக விவாதிக்கப்படுவதும் உண்டு. ஆனால் இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு சின்ன மாற்றம். சினிமாவால் அரசியலில் பல நிகழ்வுகளும், அரசியலால் சினிமாவில் பல நிகழ்வுகளும் நடந்து வரும் இந்தச் சூழலில் சுப.உதயக்குமார், டிராஃபிக் ராமசாமி, கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி ஆகிய சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

கார்டூனிஸ்ட் பாலா பேசுகையில், "விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செய்யக் கூடாது. நான்கு படங்கள் நடித்துவிட்டு இன்று நாட்டையே ஆளத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உங்களுடைய திரைபிம்பத்தை எங்களை ஆட்சிசெய்ய அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
அடுத்து பேசிய பொதுநல மாணவர்கள் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த வளர்மதி, "போராட்டங்கள் எங்களைப்போன்ற ஆட்களால் நடைபெறவில்லை. மக்களை அரசாங்கம்தான் தூண்டுகிறது. 'இருபது ரூபாய் பஸ் டிக்கெட்டை நாற்பது ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். எங்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழிதெரியவில்லை' என்று மதுரை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சொல்கிறார். இப்படி சாலைக்கு வரும் மக்களை லத்தியால் அடித்து விரட்டுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம் என்கிற தைரியம். நிச்சயமாக இந்தச் சூழல் மாறும்.
கார்டூனிஸ்ட் பாலா
தினசரி உழைக்கும் மக்களுக்கான சினிமாவாக இங்கே எத்தனை சினிமாக்கள் வருகின்றன? அவற்றை பூதக் கண்ணாடி போட்டுத்தான் தேடவேண்டும். விவசாயிகள் பிரச்னையை எடுத்துக்கூறும் 'அச்சமில்லை அச்சமில்லை' போல எத்தனை சினிமாக்கள் இங்கு உள்ளன. எத்தனை பெண்களுக்கு சினிமாத் துறையில் வாய்ப்பளிக்கிறீர்கள்? அவர்கள் ஒரு கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். இங்கு சாமன்ய மக்களின் வலியை, வேதனையைப் பேசக்கூடிய படங்களை எடுங்கள்; அதற்கான தீர்வுகளைப் படமாக எடுங்கள். அத்தகைய படங்களை நாங்கள் கடன் வாங்கியாவது பார்த்துவிடுவோம்” என்றார்.
“மக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த 84 வயதில் இப்படியான போராட்டங்களை மேற்கொள்கிறேன். இது எனது ஆசான் ராஜாஜி எனக்குக் கற்றுகொடுத்தது. பயமின்மை, தைரியம், தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் ராஜாவாக வாழலாம்” என்று பேச்சைத் தொடங்கிய டிராஃபிக் ராமசாமி தொடர்ந்து பேசியவை அனைத்தும் அதிரடி ரகம்.
வளர்மதி
“இந்த அரசு அவர்களுடைய அம்மாவுக்கு நினைவு மண்டபம் வேறு கட்டப் போகிறார்களாம். ஒரு குற்றவாளிக்கு அரசியல் சாசனத்துக்கு எதிராக நினைவு மண்டபம் கட்டுகிறார்கள். அதற்கு எதிராக வழக்குப் போட்டுள்ளேன். யாராக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் அவர்களுக்கு நான் வேலை செய்ய கத்துத்தருகிறேன். நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை செய்ய வைக்க வேண்டும். கவர்னரே ஊர் ஊராகப் போய் பெருக்குகிறார். இரண்டு பெண்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு இருக்கார். அவருக்கு அதுவா வேலை? உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை வாங்கணும் ஆளுநர்.
"தமிழக அரசியல் நிலைமை மாறப் போகிற நாள் வெகு விரைவில் உள்ளது. அதற்கு மக்கள் அனைவரும் முன்வந்து போராட வேண்டும். உங்கள் பின்னால் என்னைப்போன்ற ஆட்கள் இருப்பார்கள். இன்று அரசியல்வாதிகளால் ட்ராஃபிக் ராமசாமி என்ற பெயரிலேயே ஒரு படம் வர இருக்கிறது. சினிமாவில் உங்க வேலையை நல்லவிதமாகச் செய்யுங்கள். ஜெயலலிதா ஆணவத்தால் அழிந்தார். மக்களும் நல்லவர் யார் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று பரபரவென பேசினார் டிராஃபிக் ராமசாமி.
டிராஃபிக் ராமசாமி
சுப. உதயகுமார் பேசுகையில், "ஒகி புயலால் 2000 பேர் காணாமல் போனார்கள். புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் தரவில்லை. இன்று அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியர் ஒரு வாரம் கழித்து வருகிறார், முதல்வர் இரண்டு வாரம் கழித்து வந்தார், பிரதமர் மூன்று வாரம் கழித்து வருகிறார், மத்தியக்குழு நான்கு வாரம் கழித்து வருகிறது. மக்களைக் காப்பாற்றுவதுதானே அரசாங்கத்தின் வேலை. இது யாருக்கான அரசு? யாருக்கோ லாபம் தரும் திட்டங்களை வெறும் தரகு வேலை செய்யும் ஒரு அமைப்பாகத்தான் மத்திய மாநில அரசுகள் வேலை செய்கின்றன.
சு.ப. உதயக் குமார்
அமீர்தமிழகத்தில் இனி சினிமா அரசியல் வேலைக்கு ஆகாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலே போட்ட சத்துணவிலே முட்டை போட்டதுதான் புரட்சித் தலைவர் ஆட்சி. இலவச ஆடு, மாடு கொடுக்கிறோம் என்பதுதான் புரட்சி தலைவி ஆட்சி. அதேபாணியில் வருகிற சினிமா அரசியலை தமிழக மக்கள் ஏற்கக் கூடாது. ரஜினி, கமல்ஹாசன் யார் வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். தமிழக மக்களை இந்திய ஏகாதிபத்யத்தின் அடிமைகளாக மாற்றும் வேலையைத்தான் இந்த நடிகர்கள் செய்ய இருக்கிறார்கள். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதில் கலைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. பொழுதுபோக்குக்காக இருக்கும் சினிமாவிலிருந்து வருபவர்கள் கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. திரைப்படங்களை மக்கள் விழிப்பு உணர்வுக்காக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

      
அமீர் பேசுகையில், "ஒரு நல்ல கருத்தையும் கதையையும் கொண்டுள்ள படம், 'அச்சமில்லை அச்சமில்லை'. இது பாதியில் நின்று இருந்தது. அதை நிறைவு செய்ய தயாரித்து நடித்துக் கொடுத்துள்ளேன். பாமரர்களுக்கான நடுத்தர மக்களுக்கான சினிமாவை எடுத்துள்ளோம். இங்கு மேல்தட்டு மக்கள் சினிமாவும் பார்ப்பதில்லை, வாக்குப் பதிவும் செய்வது இல்லை. அரசியலுக்கு சினிமாக்காரர்கள் வரட்டும் என்றே நான் நினைக்கிறேன். கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று கூறும் நிலைக்கு இருக்கும் தலைவர்களுக்கு இவர்கள் பரவாயில்லை. இதனால்தான் ஜெயலலிதா அம்மையார் இவர்களைப் பேசவிடாமல் வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது என்றால், டெல்லியிலிருந்துதான் கெட்டுப்போயிருக்கிறது. அதனால ரஜினி வரும் 2019 தேர்தலில் டெல்லியில்தான் போட்டிப்போட வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை: