மின்னம்பலம் :வருமான
வரித்துறை சோதனையில் விவேக் வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான காலிப்பைகள்
மட்டுமே கிடைத்தன என்று வருமான வரித்துறையிடமிருந்து தகவல்
வெளியாகியுள்ளது.சசிகலா குடும்பத்தினரை மையமாக வைத்து 190 இடங்களில் கடந்த 9ஆம் தேதி வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை ஆரம்பித்தனர். ஜெயா டிவி சிஇஒ விவேக்கை குறிவைத்து தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய விவேக்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக விவேக் மற்றும் அவரது சகோதரிகள் நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணப் பிரியா," வருமான வரி சோதனை வழக்கமான ஒன்றுதான். இதில் எந்த அரசியலும் இல்லை" என்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 15) வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய தகவலில்," சசிகலாவின் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வருமான வரி சோதனைக்கு தயாரானது போல தெரிகிறது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் எதிர்பார்த்தபடி ரொக்கம், நகைகள் எதுவும் சிக்கவில்லை. 190 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் வரவு-செலவு குறிப்புகளுடன் தனித் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்," சோதனையில் 7 கோடி ரூபாய் பணமும், 5கோடி மதிப்புள்ள நகைகளும் மட்டுமே கைப்பற்றப்பட்டன. சசிகலா குடும்பத்தினரை மையப்படுத்தி நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக அமையவில்லை. விவேக் வீட்டில் நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கணக்கான காலிப்பைகள் மட்டுமே சிக்கின" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக