subavee.com : "வாழும் கலை" ஒரு பெரிய விழா நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவதே கடினம். நெரிசல் ஏற்படுமா, சுற்றுச் சூழலுக்குக் கேடு வருமா என்பன போன்ற ஆயிரம் வினாக்கள் எழுப்பப்படும். ஆனால் சாமியார் ரவிசங்கர் 'உலகக் கலாசார விழா' நடத்தினால், இராணுவமே அவருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
ஆனால் பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச் சூழலுக்கு மாசு உண்டாக்கினார் என்று கூறி 5 கோடி ரூபாய் தண்டம் விதிக்கிறது. ஒரு காசு கூடக் கட்டமாட்டேன் என்கிறார் சாமியார். சரி என்று சொல்லி அவருக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. (பாவம் ஒரத்தநாடு விவசாயி).
குற்றம் சாற்றப்பட்டுள்ள ஒருவர் நடத்தும் விழாவில், இந்தியாவின் பிரதமரே நேரில் வந்து கலந்து கொள்கிறார். அந்தச் சாமியாருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். அடடா மோடி எவ்வளவு நல்லவர் என்று நம்மவர்கள் பலர் வியந்து பாராட்டுகின்றனர். நடிகர் விஜயகுமார், மோடியால் ஈர்க்கப்பட்டாராம். பா.ஜ.க.வில் உறுப்பினர் ஆகிறார். அவர் உறுப்பினரானவுடன் பா.ஜ.க.விற்குப் பல மடங்கு வலிமை வந்துவிட்டது என்று சொல்லிப் பூரிப்படைகிறார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். ஏற்கனவே 50 லட்சம் 'மிஸ்டு கால்' உறுப்பினர்கள் இக் கட்சியில் உள்ளனர். இப்போது 50,00,001 ஆவது உறுப்பினராக விஜயகுமார் சேர்ந்துள்ளார்.
ஆனால் இவர்களை எல்லாம் ஈர்க்கும் மோடியோ சாமியார்களோடு காட்சி தந்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே பாபா ராம்தேவ் என்று ஒரு சாமியாருடன் மத்திய அரசுக்கு மிக நெருக்கம். பணம், பொருள் இவற்றிலெல்லாம் ஆசையே இல்லாத அந்தச் சாமியார், பெரிய பெரிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.. ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி அனைத்து வணிக நிறுவனங்களையும் மிஞ்சி விட்டது. 2014ஆம் ஆண்டில் 1200 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதிலுமாக பதஞ்சலிக்கு 4000 கடைகள் உள்ளன. 'பிக் பஜார்' போன்ற நிறுவனங்களை நடத்தும் கிஷோர் பியானி போன்றவர்கள் சாமியாருடன் பங்குதாரர்களாக உள்ளனர்.
சாமியார் ரவிசங்கரும் முழு மூச்சாக இப்போது வணிகம் தொடங்கி விட்டார். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத என்பது இவருடைய நிறுவனம். பியானியைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இப்போது ரவிசங்கர் உள்ளார். இவர்கள் பேசுவதெல்லாம் ஆன்மிகம். செய்வதெல்லாம் நேர்மையற்ற வணிகம். "வாழும் கலை" என்றால் என்னவென்று நம் மர மண்டைக்கு இப்போதுதான் புரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக