சனி, 6 பிப்ரவரி, 2016

வரலாற்றுப் பார்வையில் ஜல்லிக்கட்டு ஆதரவும் எதிர்ப்பும்

மிழர்களின் கலாச்சாரம்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் கேட்க விரும்புவதுமில்லை.
ஒருபுறம். ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம். இந்த இரண்டு பிரிவினர் தான் இவ்விசயத்தில் இருதுருவங்களாக இருந்து மோதிக் கொள்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரம் அனைத்து ஊடகங்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. ஆனால், இந்த இரு முகாம்களுடனும் முரண்பட்டு ஜல்லிக்கட்டை விமர்சிக்கும் இன்னொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள்தான் தலித் அமைப்பினர், பெரியார் அமைப்பினர்,  இடதுசாரியச் சிந்தனையாளர்கள் (CPI, CPM அல்ல) மற்றும் மார்க்சிய-லெனினிய அமைப்பினர்.
ஜல்லிக்கட்டு விசயத்தில் மட்டுமல்ல , வேறு எந்த அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்த விவாதங்களிலும் இந்த மூன்றாம் தரப்பினரின் வாதங்களை எந்த ஊடகமும் (சில விதிவிலக்குகள் தவிர) கேட்பதில்லை.
சரி, யாரெல்லாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள்? சீமான் போன்ற தமிழினவாதிகள், தமிழ்க் கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் சாதியத்தைக் காக்கும் இடைநிலை ஆதிக்கசாதி அமைப்புகள், அனைத்து ஓட்டுகட்சிகள் (தங்களைக் கம்யுனிஸ்டுகள் என்று கூறிக் கொள்ளும் CPI மற்றும் CPM ம் இதில் அடங்கும்), தமிழினவாத்தை எதிர்க்கும், தங்களை முற்போக்கு-ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்வோர்  சிலரும் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றனர்.
jallikattu-9
பெட்டா காமடியர்கள் அல்லது பாசிஸ்டுகள்
யாரெல்லாம் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள்? ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பெரும்பான்மையானவர்கள் ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் இயங்கும் பார்ப்பன மேல்சாதியினர்/மேட்டுக்குடியினர் தான். இவர்கள் இயல்பாகவே ஆ.எஸ்.எஸ்-பி.ஜே.பி-இந்துத்துவ ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். மேலும், இவர்களில் பெரும்பாலோனோர் மாட்டுக் கறி உணவுத் தடைக்கு ஆதரவாகவும், மாடுகள் பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைகளைக் கூட ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவற்றில் இன்னொரு சுவையான விஷயம் என்னெவென்றால், போன வருடம் வரை “ஜல்லிக்கட்டு மேற்கத்தியக் கலாச்சாரம். ஜல்லிக்கட்டில் மாடுகள் வதைக்கபடுகின்றன” என்று கூறி ஜல்லிக்கட்டை மூர்க்கமாக எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி என்ற பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் ஜல்லிக்கட்டில் பெரும்பாலும் ஈடுபடும் முக்குலத்தோர் வாக்கு வங்கியைக் குறிவைத்து அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றலாம் என்ற நோக்கோடு இந்த வருடம் ஜல்லிக்கட்டு-ஆதரவு அவதாரம் எடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இருந்து இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்பது பா.ஜ.க. முன்கூடியே அறிந்ததுதான். அவர்கள் விரும்புவதும் அதைத்தான்.
ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் ஒரு அரசாணையைக் கொண்டு வந்ததன் மூலம் “ஜல்லிக்கட்டை அனுமதிக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதித்துவிட்டது. இப்போது நாங்கள் என்ன செய்யமுடியும்? மற்ற படி நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள்தான்” என்ற ஒரு சித்திரத்தை உருவாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. இதற்கு பெயர்தான் பார்ப்பன நரித்தனம் என்பது. இதே வேலையைத்தான் ஏழு தமிழர்கள் விடுதலை செய்வது தொடர்பாக ஜெயலலிதாவும் செய்தார். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ஆயள் தண்டனையாகக் குறைக்கும் நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பு வந்தவுடனே, அவசர அவசரமாக, அவர்களை விடுதலை செய்யப்போகிறேன் என்று நாடகமாடினார்.
ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாடு இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ஜல்லிக்கட்டு தமிழ் பண்பாடு இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
முதலில், ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் கூறும் வாதங்களைப் பார்ப்போம். ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பெரும்பாலாக சொல்லப்படுவது “தமிழ்க்கலாச்சாரம்”, “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு”, “பாரம்பரியக் காளை இனங்களை ஜல்லிக்கட்டு மூலமாக பாதுகாப்பது” ஆகியவைகள்தான்.
முதலில் “ஜல்லிக்கட்டு” தமிழ்க் கலாச்சாரமா? இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு பதில் இல்லை. பெரும்பாலனவர்கள் இதைத் தமிழ்க் கலாச்சாரம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள் சங்க இலக்கியம் மற்றும் வேறு சில தமிழ் இலக்கிய நூல்கள். ஆனால், கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு இதை மறுக்கும் ஆய்வாளர்களும் உள்ளனர். உதாரணமாக, தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மாட்டை அடக்கும் “ஜல்லிக்கட்டு” அல்ல. மாறாக “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” தான் உண்மையான தமிழ்ப் பாரம்பரியம்” என்று கூறுகின்றனர்.
மஞ்சு விரட்டு என்பது மாடுகளை அடக்குவதல்ல. ஆய்வாளர்கள் கூறுவது போல “பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது”. நீலகிரி மற்றும் மதுரை-திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கல்வெட்டுகளிலும், குகை ஓவியங்களிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். இக்கல்வெட்டுகள் ஏறத்தாழ 3500 ஆண்டுகள் பழமையானவை. இந்த “மஞ்சு விரட்டு” தான் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சிக்காலத்தில், நிலபிரபுத்துவ (சாதி) ஆணவத்தின் சின்னமாக மாட்டை அடக்கும் “ஜல்லிக்கட்டாக” மாறியது என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிழதலில் வெளியான கட்டுரை.
jallikattu 3
மஞ்சுவிரட்டுதான் தமிழர்களின் பண்பாடு: தஞ்சை மாவட்டம் ஒன்றில் மஞ்சு விரட்டு
ராஜ் கௌதமன் போன்ற ஆய்வாளர்கள் ஜல்லிக்கட்டு என்பது அனைத்து தமிழர்களுக்கும் பொதுவான விளையாட்டாக என்றுமே இருந்ததில்லை என்று கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு வரலாறு முழுவதும் ஒரே மாதிரி இருந்து வந்தது இல்லை. அதற்கு பல வடிவங்கள்-பெயர்கள் (எருது அணைதல், எருது கட்டுதல், ஏறு தழுவுதல்) இருந்திருக்கின்றன. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு என்ற தற்போதைய வடிவம் பிரபலமாகி, ஒரு பொதுவான தமிழ் அடையாளமாக மாற்றப்பட்டு, இப்போதுவரை அவ்வாறே சொல்லப்பட்டும் வருகிறது. இப்போதும் கூட ஜல்லிக்கட்டு தமிழகத்தின் சில மாவட்டங்களில் தான் விளையாடப் படுகிறது, அனைத்து மாவட்டங்களிலும் விளையாடப்படுவதில்லை. சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு குறித்த பாடல்கள், ஜல்லிக்கட்டு (மாட்டை அடக்குதல்) என்பது வீரத்தின அடையாளமாகவும், மாட்டை அடக்கும் இளைஞர்கள் மீது பெண்கள் காதல்வயப்படுவது குறித்தும் விவரிக்கின்றன.
முதலில், காளையை அடக்குவதை வீரத்தோடு தொடர்புபடுத்துவது என்பது நிலப்புரபுத்துவ சமூக-பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கிய கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தை இப்போது விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது கருத்தியல் ரீதியாக ஒரு சரியான நிலைப்பாடாக இருக்கமுடியுமா? மேலும், சங்ககால ‘வீரம்’ என்ற கருத்தாக்கம் இப்போது வேறு வடிவில் இருக்கிறது. இப்போது தமிழரின் வீரம் என்ற பெயரில் முன்னிறுத்தப்படுவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவும் இடைநிலை ஆதிக்க சாதியினரின் ‘வீரம்’ தானே. இந்த வீரம் நடைமுறையில் நலிந்த மக்கள் மீது வன்முறையை ஏவுவதாகவும், ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு அடிபணிந்து போவதுமாகத்தானே இருக்கிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் பொங்கும் இந்த ‘வீரம்’ பார்ப்பன பாசிச ஜெயா அரசு 2003-ம் ஆண்டு கிடா வெட்டுத்தடைச் சட்டம் கொண்டுவந்த போது ஏன் பொங்கவில்லை? பொங்காது. ஏனென்றால், அந்த வீரத்தின் அடிப்படை நிலபிரபுத்துவ ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமைதான்.
உண்மையான வீரம் என்பது காளையை அடக்குவதோ, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறையை ஏவுவதோ அல்ல. மாறாக அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் கருத்திலும், களத்திலும் சமரசமின்றி எதிர்ப்பதாகும். இவ்வீரம் உடல் வலிமை சார்ந்ததல்ல; அரசியல் சார்ந்தது, கருத்தியல் சார்ந்தது, அந்தக் கருத்தியலின்பாற்பட்ட நடைமுறை சார்ந்தது.
jallikattu-7
காளையை அடக்குவதுதான் உண்மையான வீரமா?
பாரம்பரியம், கலாச்சாரம் என்பவை நிலையானவை அல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்கிறது என்பதற்காக எதையும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது என்பது ஒரு சரியான பார்வையாக இருக்கமுடியாது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இருக்கிறது என்பதற்காக, கடவுள்-மத நம்பிக்கைகள் என்ற பெயரில் தொடரும் சாதித் தீண்டாமை, குழந்தைத் திருமணம், பெண்ணடிமைத்தனம் போன்ற கொடிய பழக்கவழக்கங்களை ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன?
ஜல்லிக்கட்டில் இருக்கும் சாதியக் கூறுகள் பற்றி ஆதாரத்துடன் பல பேர் பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிவாதத்தில் ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் கூட சில நேரங்களில் தடுமாறிவிடுகிறார்கள். அப்படி தான், அப்பட்டமாக சாதி ஆதிக்கம் தெரியும் ஜல்லிக்கட்டை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அவர்கள், ஒன்று, ஜல்லிக்கட்டில் சாதிஆதிக்கம் இருக்கிறது என்பதை அடியோடு மறுக்கிறார்கள், இல்லையென்றால் அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு பற்றிய விவாதம் பொறி பறக்கும் இதே காலகட்டத்தில் தான், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநாள்கொண்டசேரி என்ற கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற இறந்த முதியவரின் உடலை ஊரின் பொதுப் பாதையில் கொண்டு செல்ல அங்குள்ள ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். உயர்நிதிமன்ற உத்தரவையும் மீறி, அவரது உடல் பொதுப் பாதையின் வழியே கொண்டு செல்லப்படாமல் திருட்டுத்தனமாக காவல் துறையினரால் வேறொரு பாதையில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. தமிழ்க் கலாச்சாரத்தையும், வீரத்தையும் பற்றி நரம்புகள் புடைக்கப் பேசும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பெரும்பான்மையோர் இந்தச் சாதிவெறியைக் கண்டிக்காதது தற்செயலானதல்ல.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முன்வைக்கும் இன்னொரு வாதம்: “ஜல்லிக்கட்டு மூலம் தான் பாரம்பரிய காளை இனங்களைப் பாதுகாக்க முடியும். ஜல்லிக்கட்டை எதிர்க்கும் விலங்கு நல ஆர்வலர்கள் பாரம்பரிய காளை இனங்களை அழிக்க சதி செய்யும் ஏகாதிபத்திய நிறுவனக் கைக் கூலிகள்” என்பது. பெரும்பாலான விலங்கு நல ஆர்வலர்கள், அவர்கள் வைத்திருக்கும் அமைப்புகள் பெரும்பாலும் பன்னாட்டு ஏன்.ஜி.ஓ-க்களோடு தொடர்பு கொண்டிருப்பதும், அப்பன்னாட்டு நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவதும் மறுக்க முடியாத உண்மை. ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் அவர்கள் நடத்தும் பார்ப்பன மேல்சாதி, பன்னாட்டு ஏகாதிபத்திய அரசியலை கண்டிப்பாக அம்பலப்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டை ஆதரித்தால்தான் காளை இனத்தை பாதுகாக்க முடியுமா?
ஜல்லிக்கட்டை ஆதரித்தால்தான் காளை இனத்தை பாதுகாக்க முடியுமா?
ஆனால், ஜல்லிக்கட்டு மூலம் தான் பாரம்பரிய காளையினங்களை பாதுகாக்க முடியும் என்பது எந்த அளவுக்குச் சரி? இதைச் சரியென்று வைத்துக் கொண்டால், ஜல்லிக்கட்டு நடக்காத மற்ற மாவட்டங்கள், மற்ற மாநிலங்களின் உள்ள பாரம்பரிய காளையினங்களை எப்படிப் பாதுகாப்பது? பாரம்பரிய காளையினங்களின் அழிவு என்பது விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்துவரும் உள்நாட்டு, பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொடூரமான சுரண்டலோடு தொடர்புடையது. 80 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்திருப்போர் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17 சதவீதம். நாடு ‘சுதந்திரம்’ அடைந்தது முதல் இன்று வரை இந்தியாவின் பொருளாதாராக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும்தான் இருக்கின்றன. உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளிடமிருந்து விவசாயத்தை மீட்டெடுக்காமல், பாரம்பரியக் காளையினங்களை மட்டும் எப்படிப் பாதுகாக்க முடியும்?
jallikattu-10
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் மேட்டுக்குடி பெட்டாவின் பிரச்சாரம்
தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு ஆதரவின் பின்னுள்ள சாதி ஆதிக்கத்தை எந்த அளவுக்கு அம்பலப்படுத்துகிறோமோ, அதே அளவுக்கு, அதைவிட இன்னும் அதிகமாக ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும். ஏனென்றால், முன்னவர்களை விட இவர்களது அரசியல் மிகவும் ஆபத்தானது.
PETA (People for the Ethical Treatment of Animals) போன்ற ‘விலங்குகள் நலன்’ என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பன ‘உயர்’ சாதி, மேடுக்குடியினராக இருப்பது எதேச்சையானதல்ல. இவர்கள் ‘விலங்கு நலன்’ என்ற பெயரில் முன்னிறுத்துவது சக மனிதர்கள் மீது கருணை காட்டாத, விலங்களின் மீது மட்டும் கருணை ‘ஜீவ காருண்யம்’ என்ற இத்துப்போன பார்ப்பனியக் கருத்தாக்கம் தான்.
இவர்கள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கான ஒரே காரணம் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதுதான். விலங்குகளுக்காகப் பொங்கும் கனவான்கள்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் ஒரு பகுதியினரை தீண்டத்தகாதவர்களாக விலங்கினும் இழிவாக நடத்தியவர்கள். இன்றும் நடத்துபவர்கள். இவர்கள்தான் அசைவம் உண்ணுபவர்களை அசுத்தமானவர்களாகச் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள். சமீபத்தில் கூட PETA என்ற நிறுவனத்தைப் பற்றி ஒரு ஆய்வு வந்துள்ளது? விலங்கு நலன் என்ற பெயரில் பல விலங்குகளை அந்நிறுவனத்தினர் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு. கடந்த 11 வருடங்களில் நாய், பூனை, முயல் உள்ளிட்ட 29,426 வீட்டு விலங்குகளை கொன்றிருக்கின்றனர் PETA அமைப்பினர்.
இவர்கள் ஜல்லிக்கட்டை இத்தனை தீவிரமாக எதிர்ப்பதற்கு இன்னொரு காரணம், அனைத்து தேசிய இனங்களின் பண்பாட்டையும் அழித்து ஒற்றைப் பார்ப்பனிய இந்து மத அடையாளத்தைப் புகுத்துவதுதான். அதுவும் பார்ப்பனிய எதிர்ப்பிற்கு, சுயமரியாதை இயக்கத்திற்குப் புகழ்பெற்ற தமிழகம் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த அடிப்படையில்தான் கேரளாவின் கோவில்களில் யானையைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போது ஜல்லிக்கட்டு வழக்கை இத்தனை அவசரமாக எடுத்து அதற்கு எதிராக தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
jallikattu 2
மாட்டை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் மதவெறி அரசியல்!
தேசிய இனங்களின் பண்பாட்டை அழிப்பது என்ற வகையில் பார்ப்பனியம் என்ன செய்கிறதோ, அதைத்தான் உலகமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியம் இன்னொரு வகையில் செய்கிறது. ஆனால், இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. ஏனென்றால், இவை இரண்டுக்கும் அடிநாதமாக இருப்பவை ஏற்றத்தாழ்வு, சுரண்டல். அதனால்தான் சாதித் தீண்டாமை ‘நவீன’ உலகமயக் கலாச்சாரத்தில் கரைந்து போகாமல் தன்னை மறுவார்ப்பு செய்துகொண்டு வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்கிறது. பார்ப்பனியமும், ஏகாதிபத்தியமும் சேர்ந்தியங்குவதும் இப்படித்தான்.
இறுதியாக, கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் இடைநிலை ஆதிக்க சாதிகளின் சாதி ஆணவத்தைப் பாதுகாக்கும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதும், விலங்கு நலன் என்ற பெயரில் பார்ப்பனியக் கண்ணோட்டத்துடன் ‘ஜல்லிக்கட்டை’ எதிர்ப்பது என்ற இரண்டுமே உழைக்கும் மக்களுக்கு ஆபத்துதான். இவை இரண்டையும் தவிர்த்து, உழைக்கும் மக்களின் அரசியல், சமூக விடுதலை எனும் கண்ணோட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு போன்றவை பற்றிய புதிய சிந்தனையை வளர்ப்பதுதான் இப்போதைய தேவை.
-இரணியன்  vinavu.com

கருத்துகள் இல்லை: