இந்தியாவில் மாவோயிஸ்டு இயக்கத்தினர் சுமார் 8,500 பேர் உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மாநிலங்களவையில் புதன்கிழமை கூறியதாவது:அரசுக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் மாவோயிஸ்டு இயக்கத்தில் சுமார் 8,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனினும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தும்போது ஏ.கே. 47 போன்ற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.
சமீப காலமாக அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், தீவிரமான தாக்குதல் நடத்தும் அளவுக்கு மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுத பலத்தை இன்னும் தக்கவைத்துள்ளனர்.
ஆண்டு தோறும் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் மாவோயிஸ்டு இயக்கத்தில் இணைகின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 433 பேர் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்டு இயக்கம், வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் இயக்கத்தை அமைப்பு ரீதியாக நிறுவதற்கு முயற்சித்து வருகிறது.
ஆயுத தேவை, தகவல் தொடர்பு போன்றவைக்காக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள உல்ஃபா, புரட்சிகர மக்கள் முன்னணி போன்ற தீவிரவாதக் குழுக்களுடன் மாவோயிஸ்டுகள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்று கிரண்
ரிஜிஜு தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் கூடுதலாக 1,000 பிஎஸ்எப் வீரர்கள்: இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தின் கன்கெர் மாவட்டத்தில் நக்சல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வசதியாக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) சிறப்புப் பயிற்சி பெற்ற 1,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக