விஜயவாடா: புதிய ஆந்திர மாநிலத்தின் முதலாவது, முதல்வராக தெலுங்கு
தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்றிரவு பதவியேற்றார்.
தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர மாநிலத்தில் நடைபற்ற சட்ட சபை தேர்தலில்
தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சட்டசபை கட்சி
தலைவராக அதாவது முதல்வராக சந்திரபாபு நாயுடுவை அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்
தேர்வு செய்திருந்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு நேற்றிரவு 7.27
மணிக்கு ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். விஜயவாடா-குண்டூர் இடையே உள்ள
நாகார்ஜுன நகரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அவர் தொடண்டர்களின் பலத்த
கோஷத்துக்கு நடுவே, கடவுளின் பெயரால், பதவி பிரமாணம் செய்தார். அம்மாநில
ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து
வைத்தார்.
சந்திரபாபு நாயுடுவுடன், 19 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர், இவர்களில்
கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்தவர்கள் 2பேர். அமைச்சர்களில் மூவர்
பெண்களாகும். முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த தெலுங்கு அன்னையின்
சிலையை சந்திரபாபு நாயுடு வணங்கினார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: பயிர் கடனை தள்ளுபடி
செய்து முதல் கையெழுத்து
முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான
கோப்பில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார். மதுக்கடைகளை மூடுவதற்கான
கோப்பு, என்.டி.ஆர்.கஜாலா திட்டத்தின்கீழ் கிராமங்களுக்கு குடிநீர்
வழங்குவதற்கான கோப்பு ஆகியவற்றிலும் அவர் கையெழுத்திட்டார். இன்பிறகு பேசிய
அவர் ஏழைகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1000 வழங்கும் திட்டம் அக்டோபர்
2ம்தேதி தொடங்கப்படும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 60 வயதாக
உயர்த்தப்படும் என்றார். சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற
நிகழ்ச்சியில், வெங்கய்யா நாயுடு, அனந்தகுமார், கல்ராஜ் மிஸ்ரா, பிரகாஷ்
ஜவடேகர், நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா, பியூஷ் கோயல், பஞ்சாப் முதல்வர்
பிரகாஷ்சிங் பாதல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கோவா முதல்வர் மனோகர்
பாரிக்கர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய பிரதேச
முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல்,
சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், நாகாலாந்து முதல்வர் ஜெலிங், பாஜக
தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர்
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து
கடிதம் அனுப்பியிருந்தார். அதில், பணிச்சுமை காரணமாக தன்னால் பதவியேற்பு
விழாவுக்கு வர முடியாவிட்டாலும், நகர வளர்ச்சி துறை அமைச்சர்
ஆர்.வைத்தியலிங்கம், போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
ஆகியோரை தனது சார்பாக விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியிருந்தார்.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக