சென்னை திருவான்மியூரிலுள்ள குடிசைப் பகுதியைச்
சேர்ந்த செல்வம், சக்தி ஆகிய இருவரும் இ.பி.கோ. 385-வது பிரிவின் கீழ் கைது
செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நபரையேனும் பணம்
பறிக்கும் நோக்கில் தாக்கிக் காயப்படுத்துவதாக மிரட்டினால் தொடரப்படும்
வழக்கின் பிரிவுதான் 385 என்பதாகும். இந்த வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு
சிறைவாசம் விதிக்கமுடியும்.
குற்றமும் தண்டனையும்
அதே சென்னையில், அடகுக்கடை நடத்தி வந்த நிக்ஷாசந்த் என்பவர் திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறி, அவரிடமிருந்து 203 கிராம் தங்கத்தை நான்காண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றார், மயிலாப்பூர் போலீசு நிலைய தலைமைக் காவலர் சம்பத். இச்செயல் சட்டவிரோதமானதென்றும் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செயவேண்டுமென்றும் நிக்ஷாசந்த் புகார் கொடுத்தார். ஆனால், போலீசாரோ வழக்குப் பதிவு செயாததால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார், அடகுக் கடைக்காரர். 2012-இல் தலைமைக் காவலர் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டாகியும் இதனை போலீசு நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நிக்ஷாசந்த் தொடுத்தார். தங்கத்தை அபகரிக்க முயன்ற வழக்கிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நியாயப்படி தலைமைக் காவலரை கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதை காரணம் காட்டி அவரை மன்னித்துள்ளது, நீதிமன்றம். போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக