வெள்ளி, 20 ஏப்ரல், 2012

இந்தியா எங்கள் எதிரி அல்ல: சீனா அறிவிப்பு

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியு வீமின் கூறுகையில், ""அக்னி-5 ஏவுகணைச் சோதனையை, இந்தியா நடத்தியுள்ளதன் மூலம், ஆசிய பிராந்தியத்தில், மற்றொரு மோதல் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுவது தவறான தகவல். இந்தியா எங்களின் எதிரி நாடு அல்ல. இரு நாடுகளுக்கு இடையே, நல்ல உறவு உள்ளது. டில்லியில், சமீபத்தில் நடந்த "பிரிக்ஸ்' மாநாட்டின் மூலம், இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. அமைதியான சூழல் தொடர்ந்து நீடிப்பதற்கு, ஆசிய நாடுகள் அனைத்தும், முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்றார்.ஆனாலும், சீன அரசுக்குச் சொந்தமான, "குளோபல் டைம்ஸ்' என்ற பத்திரிகையில், "இந்தியாவின் அணு சக்தி திறனை விட, சீனாவின் அணு சக்தி திறன் வலிமையானது. இந்த விஷயத்தில், சீனாவை இந்தியாவால் எப்போதுமே மிஞ்ச முடியாது' என எழுதப்பட்டுள்ளது.
 (பசி , பட்டினி, வேலையின்மை, லஞ்சம், ஊழல்ன்னு பயங்கர ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கு. இதை முறியடிக்க உலகில் எந்த நாடும் கிடையாது).
கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய, நீண்ட தூர ஏவுகணையை, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் வைத்துள்ளன.அக்னி-5 ஏவுகணைச் சோதனை வெற்றியடைந்ததன் மூலம், இந்தியாவும் இந்த நாடுகளுடன் இணைந்துள்ளது.


* இதுபோன்ற ஏவுகணையை வைத்திருக்கும் மற்ற நாடுகள், தங்களிடம் உள்ள ஏவுகணைகள், 8,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் படைத்தவை என்றும், எனவே, இந்தியா இந்தப் பட்டியலில் சேராது என்றும் தெரிவித்துள்ளன. மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம், இதை மறுத்துள்ளது.

* அக்னி-5 ஏவுகணை மூலம், ஆசியா முழுவதும் உள்ள பகுதிகளை, குறி வைத்துத் தாக்க முடியும். குறிப்பாக, சீனாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தாக்க முடியும்.

* கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பகுதிகளையும், வடக்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள பகுதிகளையும் தாக்க முடியும். ஆஸ்திரேலியாவில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளையும் தாக்க முடியும்.

* மத்திய அமைச்சரவைக் குழு (ராணுவம்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே, இந்த ஏவுகணையை ஏவ முடியும்.

பத்து இலக்குகளை தாக்க முடியும்: பிரபல ஏவுகணை நிபுணர் பி.கே.கோஷ் கூறுகையில், ""இந்த அக்னி ஏவுகணை, பன்முகத் தாக்குதல் தன்மை உடையது. ஒரே ஏவுகணையைக் கொண்டு, வேறுபட்ட பல இலக்குகளைத் தாக்க முடியும். குறிப்பாக, ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தி, மூன்று முதல் பத்து இலக்குகளைத் தாக்க முடியும். இலக்குகளைத் தாக்கக் கூடிய ஒவ்வொரு பகுதியுமே, தனித் தனியாகச் செயல்படக் கூடிய திறன் படைத்தவை'' என்றார்.

அக்னி புத்ரி: அக்னி-5 ஏவுகணை வடிவமைப்பில், முக்கிய பங்கு வகித்தவர் கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ். திருச்சூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக்., படித்தவர். ரேடார் மற்றும் ஏவுகணை வடிவமைப்பதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். தற்போது, ஏவுகணைத் திட்ட இயக்குனராக உள்ளார். 500 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவுக்கு, இவர் தலைவராக உள்ளார். ஏவுகணையின், ஆர்.வி.எஸ்., என்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்ததில், இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

பிரதமர் வாழ்த்து: அக்னி ஏவுகணைச் சோதனை, வெற்றிகரமாக நடந்ததை அடுத்து, இதற்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ""உள்நாட்டிலேயே தயாரான இந்த அதி நவீன ஏவுகணைச் சோதனை மூலம், இந்திய ராணுவம், மற்றொரு மைல் கல்லை எட்டியுள்ளது'' என்றார். ராணுவ அமைச்சர் அந்தோணி கூறுகையில், ""இது ஒரு மகத்தான சாதனை. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும், என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: