சனி, 22 அக்டோபர், 2011

புலம்பெயர் கல்வியலாளரின் பங்களிப்புடன் யாழில் தனியார் பல்கலைக்கழகம்


புலம்பெயர் கல்வியலாளரின் பங்களிப்புடன் யாழில் தனியார் பல்கலைக்கழகம்
உலகெங்கும் சிதறி வாழும் தமிழ்க் கல்வியலாளர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க முடியும் என்று கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னைய சூழலிலும் பல கல்வியலாளர்கள், மருத்துவர்கள் தமது பிரதேசத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்ட யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கலாநிதி யமுனானந்தா, இவர்களில் பலர் உலகில் மிகச்சிறந்த பேராசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இவ்வாறு சிதறிப்போயுள்ள தமிழ்க் கல்வியலாளர்களது சக்தியை ஒரு புள்ளியில் குவித்து அவர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அடுத்த சந்ததியினருக்கு கல்வியூட்டுவதற்கு உறுதியான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், விஞ்ஞானபீடத்தின் பௌதீகத்துறை விரிவுரை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக அறிவூட்டும் கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களில் பொதுவாக 5 சதவீதமானோரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். 90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி இருந்தும் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்க அரச பல்கலைக்கழகங்களில் போதிய இடவசதி இல்லை.

இதனால், தனியார் பல்கலைக்கழங்கள் இங்கே அவசியமாகத் தேவைப்படுகின்றன´ என்று சுட்டிக்காட்டிய அவர், கல்விச்சேவையின் செலவுகளை விலை நிர்ணயம் செய்து வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: