புதன், 10 ஆகஸ்ட், 2011

பத்மநாபசுவாமி அறையை திறந்தால் ஆபத்தாம் பார்பனர்களின் ஜோதிட புரளி

 
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை திறந்தால், நாட்டின் பாதுகாப்பிற்கே பெரும் ஆபத்து ஏற்படும். மேலும் கோவில் பொக்கிஷங்களும் கொள்ளை போகும் அபாயம் உள்ளது என, கோயிலில் தேவபிரஸ்னம் பார்த்த ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த ரகசிய அறைகள் சமீபத்தில் திறக்கப்பட்டது. மொத்தமுள்ள 6 அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் எடுக்கப்பட்டது. ஆனால் 6வது அறையைத் திறக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அந்த அறையையை திறக்கவும் முடியவில்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த குழு கூறியிருந்தது.

இந்நிலையில், திருவனந்தபும் பத்மநாபசுவாமி கோயிலில் தந்திரி பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு தலைமையில், தேவபிரஸ்னம் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக நடந்து வந்த தேவ பிரஸ்னம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அப்போது திடுக்கிடும் தகவலை ஜோதிடர்கள் வெளியிட்டனர்.

கோயிலில் நடந்து வரும் சில நடவடிக்கைகளால், மூலவர் கோபமடைந்துள்ளார். இதை மாற்ற பரிகார பூஜைகள் நடத்த வேண்டியுள்ளதாக கூறப்பட்டது.

நேற்று பார்க்கப்பட்ட 3 தாம்பூல பிரஸ்னத்தில், மூன்றிலும் ஏராளமான குறைகள் இருந்ததாக தெரிந்துள்ளது. இதுகுறித்து, பிரபல ஜோதிடர் கூறுகையில், தேவபிரஸ்னம் பார்க்கப்பட்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது. மூல விக்கிரகத்தில் குறைபாடு உள்ளது. கோயிலில் உள்ள கணபதி விக்கிரகம் எந்த பிரதிஷ்டையும் செய்யாமல் வைக்கப்பட்டதால், கணபதி கோபம் ஏற்பட்டுள்ளது.

கோயில் ரகசிய அறைகளில் இருந்த தெய்வீக தன்மை உள்ள பொக்கிஷங்கள் குறித்து வெளி உலகத்துக்கு தெரிய வந்ததால், மூலவர் அதிருப்தி அடைந்துள்ளார். இவை இடமாற்றம் செய்யக் கூடாது. இதற்கு ஏற்ற பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

இந்நிலையில் திறக்கப்படாமல் உள்ள கடைசி ரகசிய அறையை திறந்தால், கோயில் மற்றும் கேரள மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில், அந்த அறையில், தெய்வத் தன்மை மிகுந்த பல பொக்கிஷங்கள் உள்ளன. இதை திறப்பதால், நாட்டில் உள்ள அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஸ்திரத்தன்மைக்கு பெரும் அழிவு உண்டாகும். பொக்கிஷங்கள் கொள்ளை போகும் என்றார்.

இந்நிலையில், கோயிலில் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பை கணக்கிடுவது குறித்து, ஆலோசனைக் கூட்டம் மட்டும் நடந்தது. ஆலோசனைக்கு பிறகு கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள் யாரும் ஈடுபடவில்லை.

கருத்துகள் இல்லை: