யாழ் ஆய்வறிவாளர் அணியம்
கடந்த சனி மாலை, தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு நூலக ஒழுங்கு விதி மீறல் பிரச்சினை, யாழ் பிரதேச பத்திரிகைகளாலும், இவைகளது ஊடக அனுசரணையுடன் - தமிழ் இனவாத அரசியல்வாதிகளாலும், இணையங்களாலும், ஒரு சிங்கள – தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரிக்கப்பட்டு இன விரிசல் ஏற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.
சிங்கள சகோதர மக்களின் யாழ் வருகைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலமாக செய்யப்பட்டுவரும் இன விரிசலை ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் இன்னொரு அங்கமாகவே இச் சம்பவமும் சித்தரிக்கப்பட்டு வருவதை சுய சிந்தனையுள்ள எவரும் இலகுவில் இனங்கண்டு கொள்வர்.
யாழ் பொது நூலகத்தினரின் நிர்வாகத் தவறுகள் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நூலக ஊழியர்கள்மேல் அதிகரித்த வேலைப்பழுவின் விளைவாகவும், நூலக ஊழியர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் இடையில் இருந்த மொழிப் பிரச்சினை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின்மைபாற்பட்டும் எழுந்த இந்தப் பிணக்கு நூலக ஒழுங்கு விதிகள் சம்பந்தமானதொன்று என்பதே சரியான பார்வையாகும். இந் நிலையில், இச் சம்பவமன்றி, இதனை ஒரு சிங்கள-தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரித்து, 1981 யாழ் நூலக எரிப்புச் சம்பவத்துடன் இணைத்து – எழுதி - அறிக்கைகள்விட்டு, தமிழ் இனவெறியை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம்பெற முயல்வதே மிக இழிவான இன வெறிச் செயல் என இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இச் சம்பவம்பற்றி விரிவாக விசாரித்து உறுதியாகத் தெரியவரும் விடயங்களின்படி, மேற்படி சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினம் தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும்;;, துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால் அவர்களால் நூலகத்தை பார்வையிட முடியாதிருந்ததாகவும், இந்நிலையில், நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்படி அவர்கள் சம்பவம் நடந்த தினமான மறுநாள் மாலை நூலகத்தை பார்வையிட வந்தபோது நூலகத்தின் உள்ளே இலங்கை மருத்துவர் சங்க மாநாடு நடப்பதை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் தம்மை உள்ளேவிட அனுமதிக்க வேண்டுமெனக்கோரி சுற்றுலாப் பயணிகள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் தான் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் புரிபவராகையால் தம்மை உள்ளே நுழைய அனுமதிக்கவேண்டுமென வற்புறுத்தியதாகவும், இவருடன் இன்னும் பலரும் இணைந்து தம்மையும் உள்ளே நுழையவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் யாழ் மாநகர முதல்வரின் உத்தரவின் பேரிலேயே உல்லாசப் பயணிகள் அனைவரும் நூலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நூலகத்தினுள் நுழைந்த இவ் உல்லாசப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும் அறியப்படுகிறது. இவை தவிர, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக நடந்ததாகவும், அனுமதியின்றி நுழைந்ததாகவும், நூலகத்தை முற்றுகையிட்டதாகவும் வெளிவந்த செய்திகளும், கண்டனக் குரல்களும், கடிதங்களும், அறிக்கைகளும், இனவெறியூட்டி அரசியல் ஆதாயம்பெற எழுதப்பட்ட வெறும் அவதூறுகளாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.
உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பலர் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக எவ்வித பாரிய பிரச்சினையுமின்றி பொது நூலகத்தை பார்வையிட்டுத் திரும்பிவருகின்றதொரு பின்னணியில், சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று அமைதியாகத் திரும்பிச் சென்றதை கவனத்தில் கொள்ளத் தவறி, வெகு தொலைவிலிருந்து வந்து தரம் குறைந்த தங்குமிட சூழ்நிலையில், தெருவிலும் - திண்ணையிலும் - யாழ் திறந்தவெளியிலும், தங்கி திரும்பும் உல்லாசப்பயணிகளை சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து, தற்செயலான இந்தச் சம்பவத்தை புனைந்து பூதாகரமாக்கி முழுச் சிங்கள மக்களுக்கு எதிராகவும் சேறு பூசி, தமிழ் உணர்வாளர்களை உருவேற்றி அரசியல் ஆதாயம்பெறும் அற்பத்தனமான ஆசையில் ’81 நூலக எரிப்புச் சம்பவத்துடன் இதனை இணைத்து செய்திகளும், அறிக்கைகளும், கடிதங்களுமாக ‘நேர்முக வர்ணணைகள்’ செய்துவரும் யாழ் ஊடகங்களையும், இணையங்களின் ஒன்றியங்களையும், அரசியல் பிரகிருதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.
அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வாசலில் தரித்து நின்ற வேளையில், நூலகத்தைப் பயன்படுத்த வந்திருந்த சில தமிழ் மக்களும், மருத்துவர்சங்க மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் மருத்துவ மாணவர்களும் நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விடயம்; இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான சமிக்ஞைகளை தந்திருக்கும் சாத்தியமுண்டு என்பதையும் இந்தப் பத்திரிகைகளும், கண்டன அறிக்கைகள்விடும் கனவான்களும் கவனத்தில் கொள்ள தவறியுள்ளனர் என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும், முதல் நாள் நூலக காவலாளியின் முடிவை ஏற்று நூலகத்தை பார்வையிடும் ஒரே காரணத்திற்காக மட்டும் மறுநாள்வரை தமது பயண ஏற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எவரும் பின்போட்டிருப்பின், மறுநாளும் அவர்கள் நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது எவ்வாறு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஆத்திரத்தை ஊட்டியிருக்கும் என்பதையும் இவைகளும் இவர்களும் எண்ணிப்பார்த்திருக்காதது கவலைக்குரியது. இது தவிர, நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அசாதாரண நடத்தையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அதுவும் நூலகத்திற்கு எதுவித சேதத்தையும் இவர்கள் எவரும் ஏற்படுத்தியிருக்காதபோதும், உல்லாசப் பயணிகள் அனைவரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக செய்திகளை பத்திரிகைகள் திட்டமிட்டு திரித்து வெளியிட்டுவரும் தர்மத்தையும் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.
இலங்கையிலுள்ள இனங்களுக்கு இடையிலான அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆக்கபூர்வமாகத் தீர்க்கப்பட சகல இனங்களுக்கு இடையிலான உறவும் மிக ஆரோக்கியமாக பேணப்படவேண்டியது அத்தியாவசியமானதொரு தேவையாகவுள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இன வெறியை எண்ணை ஊற்றி எரிய வைக்கும் வேலை முறைகளை தவிர்க்க வேண்டுமென நாம் சகல தரப்பினரையும் வற்புறுத்துகின்றோம்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொது நூலகத்தை வந்து பார்வையிட இயலுமான சகல ஏற்பாடுகளையும் நூலக நிர்வாகம் உடன் செய்யவேண்டுமென நாம் வேண்டுகிறோம்.
மேலும், நூலகத்தை பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பினால் நூலக ஊழியர்களின் மேல் வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் நடவடிக்கைகளையும் நூலக நிர்வாகம் உடன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
30 ஒக்டோபர் 2010
YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக