ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்
february 13, 2010 Comments Off
—-சபேசன்—-
புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசியாக தனது வெளிநாட்டுப் பொறுப்பாளர் கே. புத்மநாதனுடன் பேசிய வார்த்தைகளில் ஒன்று “அம்மா சத்யமா சொல்லு அமெரிக்கா வராதோ? ” என்பதுதான். இந்த வசனம் உண்மையானதா இல்லையா என்ற விவாதம், அல்லது ஊகிப்புக்கள் நடாத்துவது அவசியமற்றது. ஆனால் இந்த வசனத்தை சொல்லப்பட்டிருக்கக்கூடிய அறிவியல் தளத்திலும் அரசியல் தளத்திலும்தான் பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் இருந்தார்கள் என்பது நிஜம்.

புலிகளின் அரசியல் அறிக்கைகளில் எந்த ஒரு இடததிலாவது அமெரிக்கா அல்லது ஏகாதிபதர்தியம் போன்ற சொற்பதங்கள் பாவிக்கப்படவில்லை. மேலும் உலகெங்கும் லத்தீன் அமெரிக்கா மற்றும் பின்தங்கிய நாடுகளில் எல்லாம் வர்க்க விடுதலைகளை மட்டுமல்ல தேசிய விடுதலைகளை கூட ஒட்டு மொத்தமாக நசுக்கிய அமெரிக்காவையும் ஜரோப்பாவையும் தங்களுக்கு நியாயம் சொல்ல கூப்பிடுகிறார்கள் என்ன பரிதாபம். இதற்காக புலம் பெயர்ந்த அப்பாவி இளைஞர் யுவதிகளை தெருவெங்கும் இறக்கிய கொடுமை யாராலும் மன்னிக்க முடியாதது.

நாங்கள் வாழும் ரொறண்டோ பல சர்வதேச இனங்கள் வாழும் நகரம் அத்தோடு அந்த ஒவ்வொரு சமூகமும் தங்களின் நாடுகளில் நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னிறுத்தி பல போராட்டங்களை ஊர்வலங்களை நடத்தியிருந்தன. அவற்றில் ஒன்றில் கூட புலிக்கொடியை காணமுடியவில்லை. தமது அழிவிற்கு மாத்திரம் சர்வதேசம் துரோகம் செய்ததாக ஓலம் போட்டார்கள்.

உலக அரசில் போராட்ட வரலாற்றில் இந்த நுற்றாண்டிற்கோ அல்லது இதற்கு முந்திய நூற்றாண்டுக்கும் பொதுவாக ஒரு பிழையான பிற்போக்கான தேசிய விடுதலைப் போராட்டம் தனது இயக்கத்திற்கும் தான் சார்ந்திருந்த மக்களுக்கும் அழிவையே தேடிக் கொடுக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விடுதலைப் புலிகளின் முடிவுதான்.

இந்த உதாரணத்திலிருந்து கூட எமது அழிவிற்கான காரணங்களை கண்டறிய தேவையில்லை என்று அடம்பிடிக்கும் எமது சமூகம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

முக்கியமாக இந்த பேரழிவிற்கான காரணங்கள் தோல்விக்கான காரணங்கள் விடுதலைப் புலிகள் செய்த பிரதானமான தவறுகளை வழக்கமாக நாங்கள் அல்லது மாற்றுக்கருத்தாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பட்டியலிடுவோம.

ராஜுவ் காந்தியின் கொலை

முஸ்லிம் மக்களின் படுகொலையும் அவர்களை இடம் பெயர்த்ததும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளும்.

மற்றைய இயக்கங்களை தடை செய்ததும் கொன்றொழித்ததும்

அப்பாவி சிங்கள மக்களை கொன்றது

புத்தி ஜிவிகள் அரசியல் தலவைர்களை கொன்றது

தனித்தலமைத்தும்

இவை போல இன்னமும் தொடர்ந்து கொண்டு போகலாம் இங்கே கேள்வி என்னவென்றால் இந்த தவறுகளை விடுதலைப் புலிகள் தவிர்த்திருந்தால் அல்லது செய்யாமல் விட்டிருந்தால் தமிழ் தேசியத்திற்கு விடுதலை கிடைத்திருக்குமா? அல்லது தமிழ் ஈழம் கிடைத்திருக்குமா?

அல்லது விடுதலைப்புலிகளிலும் பார்க்க முற்போக்கான இயக்கம் ஒன்று இந்த தவறுகளை தவிர்த்திருக்க கூடிய ஒரு அமைப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தால் தமிழ் தேசியத்திற்கு விடுதலை அல்லது தமிழ் ஈழம் கிடைத்திருக்குமா?

ஒரு பகுதியினர் நினைக்கலாம் தமிழ் ஈழம் கிடைத்திருக்காவிட்டாலும் ஒரு தீர்வு கிடைத்திருக்கும் என்று.

தமிழ் ஈழம் தவிர்ந்த அனைத்து தீர்வுகளையும் குழப்பியதற்கு பெரும் பொறுப்பை விடுதலைப் புலிகள்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.. இதில் எந்த கேள்வியும் இல்லை.

இவைகளிற்கும் அப்பால் சில விடயம்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இந்த வாசிப்பின் நோக்கம் புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு . . .என்ற எம் ஜி ஆர் ஆ ,அல்லது சிவாஜியா என்ற பாணியிலான வாதங்களை தவிர்த்து ஒட்டுமொத்தமான சமூகஅக்கறையுடன் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.

இதில் முக்கியமாக நான்கு விடயங்கள்.

இந்தியா – அதன் பிராந்திய நலன்கள்

சர்வதேசத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்லரசுகளின் நலன்கள்

தொழில் நுட்ப வளர்ச்சியும் அது மனிதகுல வரலாற்றில் ஏற்படுத்திய பாதிப்புகளும்.

முக்கியமாக எங்களுடைய தேசியவாதம் பற்றிய கருத்துருவாக்கம் பற்றியது.

தேசிய வாதம் பழங்கால கிரேக்க கடவுள் சிலையை போன்றது என்று பரா குமாரசாமி அடிக்கடி சொல்லுவார். அது இரண்டு முகங்களைக் கொண்டது என்று சொல்வார்கள். சூழ்நிலை, காலகட்டம், அதை முன்னெடுப்பவர்கள் போன்ற விடயங்கள் சார்ந்து இது முற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறதா இல்லை பிற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறதா என்பதை தீர்மானக்கிறது. வரலாற்று இயங்கியல் போக்கில் பார்ப்போமாகில் உதாரணமாக எந்த விடயமும் ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்தால் மட்டுமே அது முற்போக்கானது ஆனால் அதுவே ஒடுக்குமறை செய்யும் அளவிற்கு வளர்ந்த பின்னர் அடுத்து வரும் ஒடுக்கு முறைக்கு எதிரான சக்தியை ஒடுக்க நினைக்கிறது. இங்கே அதே முற்போக்கு பாத்திரம் வகித்த சக்தி பின்னர் ஒரு காலகட்டத்தில் அது பிற்போக்கு பாத்திரத்தை வகிக்கிறது.

ஆனால் எங்கள் தமிழ் ஈழ தேசிய வாதம் ஒரு போதும் முற்போக்கான பாத்த்திரத்தை வகித்ததில்லை. தமிழ்க் காங்கிறஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தொடர்ந்து இதே பாரம்பரியத்தில் வழிவந்தவர்களான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் கடைசியாக ஆயுதம் ஏந்தினர்.

நான் குறிபிடுவது இன்று புலிகளின் தோல்வி இல்லை புலிகளின் தவறுகள் போன்றவற்ரை நேர்முகமாக பார்ப்பதும் விமர்சிப்பதும் என்று பார்த்தால் ஒரு மூர்க்கமான தற்திறுத்தியாகத்தான் அமையும். இன்னமும் முக்கியமானது மேற்குறிப்பிட்ட பாரம்பரியம்தான். அதாவது யாழ்மையவாதமான இந்தப் பாரம்பரியம் தமிழ்க் கொங்கிரஸில் ஆரம்பித்து புலிகளின் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததாக யாரும் சந்தோசப்பட முடியாது. தொடர்ந்தும் வணங்காமண், வட்டுக்கோட்டை, நாடுகடந்ந்த தமிஈழம் என்று கோவணம் கூடத் தேவையில்லை என்று நிர்வாணமாக தனது அசிங்கத்தை வெளிப்படுத்துகிறது எங்கள் பிற்போக்கு தமிழ் தேசியம்.

ஒடுக்குமுறைக்கு எதிரான நோக்கம்தான் எங்கள் தேசிய எழுச்சி என்றால் உண்மையாக மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது தோன்றியிருக்க வேண்டும். அப்போது தோன்றவில்லை. காரணம் எங்களுக்குள் ஒன்றான பிரச்சனையாக அது பார்க்கப்படவில்லை.

மலையக மக்களின் தொழிற்சங்க வலிமை என்பது அன்று வாக்குரிமை வடிவத்தில் இடதுசாரிகளின் பலமாக சிங்கள வலதுசாரிகளின் வீழ்ச்சியை நிர்ணயிக்கும் வகையில் அமைந்த காரணத்தாலேயே அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்து. வர்க்க அடிப்படையில் தமிழ் வலதுசாரிகளும் சிங்கள வலதுசாரிகளுக்கு ஒத்துழைத்து மலைய மக்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்தார்கள்.

இதற்கும் அப்பால் வரலாற்றியல் அடிப்படையில் பார்பபோமாகில் தேசியத்தை ஓரளவுக்கு மதத்துடன் ஒப்பிடலாம். ஊதாரணமாக “மதம்” ஒருகாலகட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்திருக்கிறது. அதே போல குடியாட்சி அல்லது ஜனநாயகம் முதலாளித்துவ ஜனநாயகம் என்பனவும் ஒரு காலகட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் . . . ….. அதாவது நிலப்பிரபுத்துவத்தை உடைத்து சமுதாயத்தை முன்னோக்கி நகரச்செய்திருக்கிறது. ஆனால் அதே ஜனநாயகம் வளர்ச்சியடைந்து முதலாளித்துவத்தின் இன்றைய உச்சநிலையில் ஜனநாயகத்தை முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விட்டு சமுகவியலில் பிற்போக்கு பாத்திரம் வகிக்கிறது. இதே வகையில் பின்தங்கிய நாடுகளில் அதாவது அரைநிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளில் இருந்து மீளாமலே இருக்கின்ற அதாவது சாதியம், பெண்ணியம் என்ற விடயங்களில் மிகவும் மோசமான கலாச்சாரத்துடன் வாழும் பின்தங்கிய நாடுகளின் தேசிய எழுச்சி என்பது மிகவும் கேள்விக்குரியது.

இன்று அடிஒட்டுமொத்தமான தொழில் நுட்டப வளர்ர்சியடைந்த உச்சநிலை முதலாளித்தவ கட்டமைப்பை அடைந்து விட்ட ஒரு நிலையில் முக்கியமாக முழு உலகத்தையும் தன் கையில் ஒரு சிறு பந்தாக கொண்டு திரிகின்ற இந்தக்காலத்தில் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு பாத்திரம் வகிக்கும் எமது தேசியம் என்பது மிகப்பெரிய கேள்விகுறிதான்.

இந்த நான்கு அம்சங்களையும் அவதானிக்காமல் அல்லது படிப்பினைகளை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தில் எந்நவிதமான நகர்வையும் செய்வது உண்மையில் ஒரு வரலாற்றுக் குற்றம்.

காலிஸ்த்தான்; – இந்தியா!

புல வருடங்ஙகளுக்கு முன்னர் இந்தியாவின் செய்திகளில் முக்கிய இடத்தை வகித்தது பிந்தரன்வாலே என்ற பெயர். நீளமான தாடியுடனும் உயரமான தோற்றத்துடனும் கூரிய பார்வையுடனும் இந்திய அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த பஞ்சாப்பின் தீவிவாதி. இறுதியாக அமிர்தசரசில் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான காலிஸ்த்தான் தீவிரவாதிகளில் ஒருவனாக இறந்து கிடந்தான்.

காங்ரஸ் ஆட்சிக்காலங்களில் பஞ்சாப்பில் காலிஸ்த்தான் தேசியவாதம் லோங்கோவால் போன்ற மிதவாதிகாளால் முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவின் சனத்தொகையில் இரண்டு சதவீதமே கொண்ட சீக்கிய இனத்தில் தனித்துவமான பல குணாம்சங்களும் இந்த காலிஸ்த்தான் தேசியஎழுச்சியில் பங்கு வகித்தன. இஸ்லாமிய மதத்திலிருந்தும் இந்து மதத்திலிந்தும் பலஅ ம்சங்களை இணைத்து தேன்றிய இம்மதம் ஒப்பீட்டளவில் மற்றைய மதங்களின் வரலாறறைப் பார்த்தால் மிகவும் புதிய மதமாகும். இந்தியாவில் மொகலாயர்களின் படையெடுப்பின் தொடர்ச்சியாக தொடந்து இந்து முஸ்லிம் போர்களிலும் மதச்சணடைகளிலும் குறிப்பாக இஸ்லாமிய ஆக்கிரமிப்பு காலங்களில் மிகவும் உக்கிரமான போராட்டங்களை நடத்தியவர்கள் இந்த பஞ்சாபியர்கள். பல இந்து முஸ்லிம் அரசியல் சதுரங்கங்களில் வெறுப்படைந்து தமக்கென தனியான மதத்தை தோற்றுவித்தனர்.

சனத்தொகையில் இந்தியாவில் இரண்டு சதவீதமாக இருந்தபோதிலும் இந்திய இராணுவத்தில் மிகக் கூடிய அளவில் பங்குவகித்தனர். மற்றைய இனங்களிலும் பார்க்க அதிகமான சதவீதத்தினர் வெளிநாடுகளிற்கு சென்றனர். கடின உழைப்பாளிகள், போர்க்குணாம்சம் கொண்டவர்கள், இந்தியாவிற்கு தேவையான தானியங்களில் பெரும்பகுதி பஞ்சாப்பில்தான் விளைகின்றது.

பஞ்சாப்பின் இப்படியான சில விசேட அம்சங்கள் லேங்கோவால் போன்றவர்களால் காலிஸ்த்தான் தேசியவாதமாக பஞ்சாப் விவசாயிகளிடமும் இளைஞர்களிடமும் ஊட்டி வளர்க்கப்பட்டது. அனாலும் பஞ்சாப் மாநிலத்திற்கென உரிமைப் போராட்டத்திற்கான நியாயமான தேவைகளும் இருந்தன.

இங்கு ஒப்பிடப்பட வேண்டிய விடயம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் காலிஸ்த்தான் தேசிய விடுதலைப் போராட்முமே.. முக்கிமான விடயம் இரண்டு போராட்டங்களையும் இந்திய அரசு வளர்ப்பதிலும் அழிப்பதிலும் கையாண்ட விதமும் சமாந்தரமானது. ஈழத் தேசியப் பிரச்சனையை இந்தியா தன்னுடைய இன்னுமொரு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனையாகவே கையாள்கின்றது.

எங்களின் தமிழ்த் தேசியத்தின் சில குணாம்சங்கள் அதாவது தமிழன் அதிலும் யாழ்ப்பாணத்தான் படித்தவன், அறிவுகூடியவன், ஆளப்பிறந்தவன், ஆண்டபரம்பரை போன்ற பூர்சுவா மனப்பான்மை கடந்தகால மிதவாதத் தலைவர்களான அமிர்தலிங்கம் பொன்றவர்களால் எப்படி அதீத தமிழ்த் தேசியமாக உருவேற்றுவதற்கு உதவியதோ அதேபோன்று அன்று காலிஸ்தான் தேசியவாதமும் வளர்ந்திருந்தது.

இதன் மறுபக்கம் இலங்கையில் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மை இனங்களுக்கோ இருக்கின்ற எல்லைப்புற குடியேற்றங்கள், பாதுகாப்பு போன்ற நியாயமான பிச்சனைகளை மறுக்கமுடியாது.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கும், பஞ்சாப் சீக்கியர்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதில் மறுப்பில்லை. ஆனால் தென்னாபிரிக்காவின் கறுப்பு இனத்தவருக்கும், பாலஸ்த்தீன மக்களுக்கும் இருக்கின்ற மிக மோசமான ஒடுக்கு முறைகளுடன் ஒப்பிடமுடியாது.

அதிலும் உலகளாவிய அளவில் எத்தனையோ நிலப்பரப்புக்களில் சிறுபான்மையும் பெரும்பான்மையும் தங்களிடையே பொருமிக்கொள்ளும் முறையிலும் வேறுபாடுகள், அடக்குமுறைகள், போராட்டங்கள் என்று நடந்து கொண்டுதான் இருக்கின்றன..

சில விவாதங்களின் அடிப்படையில் பார்த்தால் உலகில நடக்கின்ற தேசிய விடுதலை போரட்டங்களை மிகவும் ஆழமாகவும் வேறுபடுத்தியும் அலசி ஆராய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்..

பாலஸ்த்தீன மக்களை பார்த்து தேசிய விடுதலைக்கு போராடவேண்டாம், வர்க்கவிடுதலை வரும்வரை பொறுத்திங்கள் என்று கூறுவதில் நியாயம் இல்லை. ஆனால் பஞ்சாப், ஈழம் போன்ற போராட்டங்களில் பிராந்திய பொலிஸ்காரனான இந்தியாவின் கையாளலைகூட அறியவில்லை என்றால் அதற்கு அடிப்படை காரணங்கள் யாவை? எங்களின் போராட்டங்களில் நியாயம் இல்லையா? அல்லது இருக்கின்ற நியாயங்களின் அளவுகளுடன் எங்களின் போராட்டம் பொருந்தவில்லையா? இங்கேதான் அதீத தேசியவாதம் அல்லது பாசிசம் தேசியவாதத்தை கையேற்கின்ற நிலமைகள் என்பன ஆராயப்பட வேண்டியவை!

மிதவாதியான லேங்கோவாலுக்கு எதிராக இந்திரா காங்கிரசால் வலுக்கட்டாயமாக வளர்த்து விடப்பட்ட பிந்தரன்வாலே இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமாகின்றான். அதே பிந்தரன்வாலேயும் சகாக்களும் இந்திரா காங்கிரஸ் அரசினால் அழிக்கப்படுகின்றார்கள்.

இலங்கை அரசை தனது ஆளுமைக்குள் வைப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கங்களை குறிப்பாக புலிகளை வளர்க்கிறது இந்திய அரசு, ஆனால் ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தான் வளர்த்தவர்களே தன்னை மீறிப்போகின்றார்கள் என்ற நிலையில், பஞ்சாபில் செய்ததையே செய்யநினைக்கிறார்கள். அதுவும் இனவாத பிரேமதாச அரசுடன் தேனிலவு நடத்திய தந்திரோபாயத்தால் இந்தியாவை வென்ற அதே நடைமுறையை கையாண்டு ராஜபக்ஸவுடன் தேனிலவு கொண்ட இந்திரா கொங்கிரஸ் புலிகளை அழிக்கிறது.

இங்கே நாங்கள் பஞ்சாப்பையும் ஈழத்தையும் ஒரே சமாந்திர அரசியலில் பார்க்க முடியும்.

தொழில் நுட்ப வளர்சி கடந்த 300 வருடங்களில் மனிதகுலம் மிகவும் அபரிதமான வளர்ச்சியை சமுகவியல் அறிவியல் தொழில்நுட்பம் என்று எல்லாத்திசைகளிலும் பெற்றிருக்கிறது. இதை விட முக்கியமானது கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றம் 300 வருடங்களில் கிடைத்ததிலும் பார்க்கவும் அதிகமானவை. ஆனால் கடந்த 3 வருடங்களில் கிடைத்த வளர்ச்சி மாற்றம் என்பது உலகளாவிய அளவில் சமூகவியலை மட்டும் மறுத்து விட்டு மற்றைய எல்லா விடயங்களில் வளர்சியடைந்து விட்டது.

ஊதாரணமாக 83 ம் ஆண்டின் இலங்கை இனக்கலவரங்கள் சட்டடைல்டில் படம் பிடிக்கப்பட்டன. இது 25 வருடங்களுக்கு முந்திய கதை. கூகுல் மைப்பில் ஒவ்வொருத்தர் வீட்டு முற்றத்தில் முளைத்திருக்கும் புல்லைக்கூட தெளிவாக சாதாரண மக்கள் பார்க்கக்கூடிய வகையில் தொழில் நுட்பம் இந்தக்காலத்தில். இதிலிருந்து விளங்க வேண்டும் முள்ளிவாய்க்காலின் தெளிவான வியூகம்களை யார் யார் எப்படி பார்த்திருப்பார்கள்.

தொழில் நுட்ப வளர்ச்சியை பற்றிய ஒரு வகையான பார்வை இது. தொழில்நுட்பம் தனது அபரிதமான வளர்ச்சியில் பொருளாதார சந்தையின் மூலம் ஜரோப்பா மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தேசிய எல்லைகளை உடைத்துவிட்டது 100 வருடங்களுக்கு முன்னர். அதையும்தாண்டி இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகள் மேற்கத்தைய நாடுகளை பொருளாதார ரீதியில் மிரட்டவும் வைத்து விட்டது இன்று. இதற்கும் மேலாக மேற் குறிப்பிட்ட மேற்கத்தைய நாடுகளாகட்டும் அல்லது இந்த நாடுகளை மிரட்டும் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகள் எல்லமே தங்கியிருப்பது இந்த நாடுகள் சாராத பெரு முதலாளிய நிறுவனங்களைத்தான். இந்த உண்மையும் பெரும் பெரும் தேசியங்களையே உடைக்கின்ற காலமும் இது.

கார்ல்மாக்சின் கணிப்பின் படி இனிவரும் காலங்கள்தான் சர்வதேசியத்திலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களை ஒன்றிணைக்க தேடுகின்ற காலமாக அமையும். காரணம் நாடுகள் சாராத பெருமுதலாளிய நிறுவனங்கள் ஒன்றிணையும்போதுதான், நாடுகள் தேசியங்கள் சாராத உழைப்பாழிகள் ஒன்றிணையும் வாய்ப்பை தோற்றுவிக்கும்.

இதுதான் நியுட்டனின் மூன்றாம் விதி “எந்த ஒரு தாக்கத்திற்கும் சமனும் முரணுமான எதிர்த்தாக்கம் ஏற்படும்” என்பது.

இவைகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல் தேசியம் பற்றிய கேள்விகளுக்கு விடைகாணமுடியாது.

இறுதியாக . . இலங்கையில் சிறுபான்மயினரின் பிரச்சனைகளுக்கு அனைத்து சிறுபான்மை மக்கள் பிரிவுகளிற்கும் பொருந்தக்கூடிய பொதுவான அரசியல் தீர்வுதான் அமையவேண்டும். இது மலையகம், முஸ்லிம் மக்களின் பிரிவுகள், வடகிழக்கு என்ற வகையறாக்களுக்கு பொதுமையாக அமைய வேண்டும் வடகிழக்கா இல்லை வடக்கு – கிழக்கா என்பதும் கிழக்கு மக்களின் விருப்பத்தை பொறுத்தே அமைய முடியும்.

இதற்காக புலிகள் மற்றும் இலங்கை அரசு சார்ந்த பினாமிகள் தவிர்ந்த அனைத்து மாற்று தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே கோரிககைகை முன்வைக்க வேண்டும். இது தற்போதைய அவசியம்.

முழுமையான சிறுபான்மை இனங்களின் விடுதலை அல்லது தேசிய விடுதலை அரசியல் விடுதலை என்பது முழு இலங்கயிலும உள்ள உழழைக்கும் மக்களின் பங்களிப்புடன் அனைத்து ஜனநாயக சக்திகள் முற்போக்காளர்கள், இடதுசாரிகள் எல்லோரது பங்கெடுப்புடன் நடத்தப்பட்டால் மாத்திரமே சாத்தியமாகும்.

இதனை பலர் சொல்லுவார்கள் “வடலி வளர்த்தா கள்ளு குடிப்பது” என்று. கள்ளு வேண்டுமென்றால் பனை இல்லாவிட்டால் வடலி வளர்க்கத்தான் வேண்டும். அவசரமாக தேவை என்று வாழை மரத்தை வளர்த்து கள்ளிறக்க முடியாது. இப்படி நினைத்தால் முள்ளிவாய்க்கால்தான் படிப்பினையாக அமையும்.

‘பன்முகவெளியில்’ சபேசன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை

கனடாவில் நடைபெற்ற ‘பன்முகவெளி’ நிகழ்வின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிடப்படும்
Categories: முகப்பு Comments are closed.

powerd by WordPress.
© copyright 2009 thuuu.net

கருத்துகள் இல்லை: