ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

3283 கோடி...2015-16ல் மிடாஸில் அரசு வாங்கிய மதுவின் மதிப்பு.....2002ம் ஆண்டு மிடாஸ் தொடங்கப்பட்டது

12966458_10153559361804677_2102462933_n முதல் தோல்வி....பசப்பு வார்தைகள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.  மதுவிலக்கு சாத்தியமே கிடையாது என்பதை நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் பேசியபோது அதை அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் இந்த ஜெயலலிதா.2011 பொதுத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்து “ஒரு மூட்டையை தூக்கை வைப்பது போல வைக்கிறார்கள்” என்றார் ஜெயலலிதா.  ஆனால் இன்று தனது முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நின்று கொண்டு உரையாற்றக் கூட முடியாமல் நாற்காலியில் ஐக்கியமாகி உரையாற்றினார்.   காலம்தான் ஒவ்வொருவருக்கும் எத்தகைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
ஜெயலலிதாவின் முதல் தேர்தல் பரப்புரையில் பிரதானமாக இடம் பெற்ற விஷயம் மதுவிலக்கு.

“மதுவின் தீமையை மற்றவர் களைவிட முதல்வர் நன்கு அறிவார். இருப்பினும், மது விலக்கு நடைமுறையில் சாத்திய மில்லை. இந்த விஷயத்தில் மதுவை அறிமுகம் செய்த திமுக தலைவர் கருணாநிதி சொன்ன பதிலையே நானும் இரவல் வாங்கிச் சொல்கிறேன். ‘கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கற்பூரத்தை எப்படி பாதுகாப்பது?’.
343w343

அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாதபோது தமிழகத்தில் அமல்படுத்தினால், அரசு கஜானாவுக்கு வரவேண்டிய வருவாய் கள்ளச்சாராயம் விற்போருக்கும் சமூக விரோதிகளுக்கும் போய்விடும். நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவந்து, வருவாயை மத்திய அரசு ஈடுசெய் தால், முதல் மாநிலமாக மது விலக்கை ஆதரித்து தமிழக அரசு அமல்படுத்தும்.  மதுக் கடைகள் நடத்த பல காரணங்கள் உள்ளன. அதில் வருவாயும் ஒன்று. அருகில் உள்ள மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தாத தால், தமிழகத்திலும் அமல்படுத்த முடியவில்லை. இந்த விவகாரத் தில், திமுக தலைவர் கருணாநிதி பேசியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘என் வீட்டு கோழி அடுத்த வீட்டில்போய் முட்டையிட அனுமதிக்கமாட்டேன்’. மது விலக்கு கொண்டு வந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய் அண்டை மாநிலத்துக்குப் போய்விடும். அதை எப்படி அனுமதிக்க முடியும்?
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மதுக்கடைகள் எண் ணிக்கை குறைவுதான். மக்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றப்படு கின்றன. அவ்வாறு ஏதாவது அகற்றப்படாமல் இருந்து, அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்திலும் கேரளா விலும் ஆட்சியில் இருந்தபோது மதுவிலக்கை கொண்டு வர வில்லை. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோருகிறீர்கள். உங்களுக்கு அங்கு ஒரு கொள்கை. இங்கு ஒரு கொள்கையா ?”
இது எப்போதோ பேசிய பேச்சு கிடையாது.   இந்த ஆண்டு ஜனவரி 21 அன்று, சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியது.   இதுதான் தமிழக அரசின் கொள்கை.  இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை.
ஆனால் இன்று தீவுத்திடலில் தன் பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, “தற்போது அனைவரும் மதுவிலக்கு, பூரண மதுவிலக்கு குறித்து பேசி வருகின்றனர். அதிலும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என பேசி வருகிறார்.
பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டுவருவது என்பது இயலாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர்  கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதைத்தொடர்ந்து கடைகளுடன் இணைந்த மதுபானகூடங்கள் மூடப்படும், மேலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களளை மீட்கும் வகையில் மீட்பு நிலையங்கள் திறக்கப்படும்.”  என்று பேசியுள்ளார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பாகக் கூட மதுவிலக்குக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பேச்சாளர்கள் மீது 26 மார்ச் 2016 அன்று தமிழக காவல்துறை தேச விரோத வழக்கு பதிவு செய்துள்ளது.  “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்காக ராஜு, காளியப்பன், டேவிட் ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன் மற்றும் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.
மதுவிலக்குக்கு எதிராக ஒரு பாடலை பாடிய கோவனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும் இதே ஜெயலலிதாதான்.  மதுவிலக்குக்கு எதிராக தமிழகத்தில் எங்கே குரல் எழுந்தாலும் அந்தக் குரலை ஒடுக்குவதற்கான அத்தனை வேலைகளையும் ஜெயலலிதா செய்து வந்தார்.
மதுவிலக்குக்கு ஆதரவாக கூட்டம் போட்டவர்களை ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யலாம்.  ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், அவர்களை தேச விரோத வழக்கின் கீழ், அதுவும் நாடு முழுவதும் தேசவிரோத வழக்குப் பிரிவு துஷ்பிரயோகம் செய்வது குறித்து விவாதம் நடந்து வரும் நிலையில், கைது செய்ய ஜெயலலிதா உத்தரவிடுகிறார் என்றால் எந்த அளவுக்கு கடுமையான வன்மம் இருக்கும்.   இந்த வன்மம் எதற்காக வருகிறது ?    வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
மதுவிலக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று பேசிய ஜெயலலிதாதான் உண்மையில் வேதம் ஓதும் சாத்தான்.
சசிபெருமாள் மரணத்தை ஒட்டி, தமிழகம் முழுக்க மதுவிலக்குக்கு ஆதரவாக பெருங்குரல் எழுந்தபோது கூட மதுவிலக்கு குறித்து வாய் திறக்க மறுத்தவர்தான் இந்த ஜெயலலிதா.  ஆனால் இன்று தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசிய முதல் விவகாரமே மதுவிலக்கு.   இது ஜெயலலிதா எந்த அளவுக்கு தேர்தலைக் கண்டு அஞ்சுகிறார் என்பதையே காட்டுகிறது.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று ஜெயலலிதா அளித்துள்ள வாக்குறுதியை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்பது அவருக்கும் நன்றாகவே தெரியும்.    ஜெயலலிதா இவ்வாறு சொன்னதும் எழும் அடுத்த கேள்வி, ஐந்தாண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதே.   இதற்கு வெளிப்படையாக ஜெயலலிதா பதில் சொல்ல மாட்டார்.  ஆனால், அவ்வாறு அமல்படுத்தாமல் இருந்ததற்காக உண்மையான காரணம், அவர் பினாமி பெயரில் நடத்தும் மிடாஸ் நிறுவனமே என்பது அனைவரும் அறிந்ததே. சசிகலா டிசம்பர் 2011ல் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு உடனடியாக நிகழ்ந்த மாற்றங்களில் ஒரு முக்கிய மாற்றம், மிடாஸ் நிறுவனத்தில் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்துக்கு சோ ராமசாமி நியமிக்கப்பட்டதே.  மீண்டும் போயஸ் தோட்டத்தில் மன்னார்குடி கருநாகம் புகுந்ததும், சோ வெளியேற்றப்பட்டு, ஜெயலலிதாவின் தற்போதைய பினாமியாக உள்ள டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிடாஸ் நிறுவனத்தில் தமிழக அரசு செய்த கொள்முதல் அளவு 2011-12ல் 1404 கோடி.   2012-13ல் 1729 கோடி.  2013-14ல் 2280 கோடி.  2014-15ல் 2736 கோடி.  2015-16ல் மிடாஸில் தமிழக அரசு வாங்கிய மதுவின் மதிப்பு 3283 கோடி    மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் தனது நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு விடுமே என்ற காரணம், மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருந்ததற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று.
டாஸ்மாக் மூடப்பட்டால், மிடாஸ் நிறுவனம் தயாரிக்கும் சரக்குகள் எங்குமே விலை போகாது என்பதுதான் உண்மை.   வழக்கமாக மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், தங்களுக்கு வேண்டிய பிராண்டின் பெயரைச் சொல்லித்தான் வாங்குவார்கள்.   தமிழகம் தவிர்த்த அனைத்து மாநிலங்களிலும் இதுதான் வழக்கம்.  ஆனால் தமிழகத்தில் மட்டும்தான், மதுக்கடைகளில் “நூறு ரூபா குவார்ட்டர், 110 ரூபா குவார்ட்டர்” என்ற குரல்களை கேட்க முடியும்.   பிரபலமாகாத பல ப்ராண்டுகளை தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகள், டாஸ்மாக்கைத் தவிர வேறு எங்குமே விலை போகாது என்ற ஒரே காரணத்தால்தான் மதுவிலக்கை இத்தனை ஆண்டுகளாக அமல்படுத்தாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா.
மது விற்பனையை அரசு கையகப்படுத்திய 2002ம் ஆண்டுல்தான் மிடாஸ் நிறுவனமும் தொடங்கப்பட்டது என்பது மற்றொரு முக்கிய செய்தி.
இப்படி சொந்தமாக மது தயாரிப்பு நிறுவனம் நடத்தி, அதிலிருந்து கொள்ளை லாபம் அடித்துக் கொண்டு, மது விலக்கைப் பற்றி பேச ஜெயலலிதா வெட்கப்பட வேண்டும்.
ஆனால் வேறு வழியேயின்றி இன்று மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா பேசியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் உள்ளது.     நாளை (10 ஏப்ரல் 2016) அன்று, வெளியிடப்பட உள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது என்ற தகவலை அறிந்தே ஜெயலலிதா இன்று மதுவிலக்கு குறித்து பேசியுள்ளார்.
பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது இயலாது என்பதெல்லாம் பசப்பு வார்தைகள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.  மதுவிலக்கு சாத்தியமே கிடையாது என்பதை நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் பேசியபோது அதை அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் இந்த ஜெயலலிதா.
ஆனால் தேர்தல் பயம் அவரை மதுவிலக்கு குறித்தெல்லாம் பேச வைத்துள்ளது.  ஆனால் ஜெயலலிதாவின் இந்த பசப்பு நாடகம் தமிழக மக்களிடம் நிச்சயம் எடுபடப்போவதில்லை.    மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா பேசுவதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.savukkuonline.com

கருத்துகள் இல்லை: