திங்கள், 6 ஜூன், 2011

கலைஞர்: மனைவியை மகளை பேரனை பற்றிக்கூட அவதூறு

மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும்: கருணாநிதி பேச்சு

திருவாரூர்: திருவாரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், நேற்று இரவு நடந்தது.

பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் நான், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, என்னை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் ஓட்டளித்த மக்கள் அனைவரும் என்னுடைய நன்றிக்கு உரியவர்கள். நீங்கள் விரும்பியபடி நான் முதல்வராகவில்லை. உங்கள் எம்.எல்.ஏ.,வாகியுள்ளேன். உங்களுக்கு, நான் நேரடியாகவோ, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலமாகவோ அனைத்து பணிகளையும் செய்வேன். புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் கவர்னர் உரையைக் கூட, அச்சுப் பிழையின்றி தயாரிக்க இயலாதவர்களாக உள்ளனர். அவர்களை அறியாமலே ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளனர். அதில், ஜெ., தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய அரசும், ஏழைகளின் நலனைக் கருதியே செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். தமிழ் தெரிந்தவர்களுக்கு இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியும். பழைய அரசு ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டது போல், இந்த அரசும் செயல்படும் என்று கூறியுள்ளனர். இதை புதிய அரசு கொடுத்த பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

"சட்ட விரோதமான முறையில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறுதாவூரும் அடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
காலாகாலத்துக்கும் மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும். இந்த வார்த்தை, வரும் காலத்தில் ஒலித்தே தீரும். அப்போது மாற்றம் வரும் என்று உறுதியோடு இருக்கிறோம். திருவாரூரில், 1,000 கோடி ரூபாய் செலவில் மத்திய பல்கலை கடந்தாண்டு துவங்கப்பட்டு, 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டட பணிகள் ஓரளவுக்கு நிறைவு பெற்றுள்ளன. இந்த ஆண்டு, 500 மாணவர்கள் மத்திய பல்கலையில் சேர்க்கப்படுவர். புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த பல்கலையை நான் வாதாடி, போராடி, வலியுறுத்தி கொண்டு வந்துள்ளேன். மத்திய அரசின் பல்கலை என்பதால், இதற்கு ஆபத்து வந்துவிடாது என்று நினைக்கிறேன்.
வீடு வழங்கும் திட்டம் பணக்காரர்களுக்கு அல்ல. கடும்வெயில் என்றும் பாராமல் உழைக்கும் பாட்டாளிக்காக அறிவித்தேன். இத்திட்டத்தை கைவிடுவதாக அரசு சொல்கிறது. கைவிடுங்கள் அது உங்கள் பழக்கம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் பாமரர்கள், பாட்டாளி மக்கள் தான்.

பத்திரிகைகளில் என்னைப் பற்றி, என் மனைவியைப் பற்றி, என் மகளைப் பற்றி, பேரன்களைப் பற்றிக் கூட செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செயல்களால், தி.மு.க.,வை வீழ்த்தி விட முடியாது. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்துவிட, வேரை அறுத்துவிட, எந்த கொம்பனும் பிறக்கவில்லை. தி.மு.க., செய்திகளை இருட்டடிப்பு செய்வது, விஷமத்தனமாக செயல்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றுக்கு இடையேதான் கழகத்தை வளர்க்க வேண்டும். கொள்கைக்காக வாழும் என்னை, யாரும் வீழ்த்த முடியாது. திகார் சிறையில் கனிமொழியை நான், மகள் செல்வியுடன் சந்தித்த போது, "இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். இதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தியை தி.மு.க., தந்துள்ளது' என்று கூறினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி ஊழல் என்று சொல்லப்பட்டது. விசாரணையில், 30 ஆயிரம் கோடியாகி, மேலும் மேலும் சுருங்கி, யாராவது ஒரு குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்றால், கனிமொழியை சி.பி.ஐ., சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில், கனிமொழி வாழ்க்கைக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக, கலைஞர் "டிவி'யில் பங்குதாரராக ஆக்கினேன். அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட கேடு, கனிமொழியையும் பாதித்துள்ளது. எதிர்காலத்தில் இதைப் பார்த்து, கனிமொழிக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். வேதனை என்னை மாய்த்துவிடும் முன், நான் தி.மு.க.,வை காக்க, லட்சியங்களை, கொள்கைகளை காக்க என்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டுத் தான் மறைவேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்

கருத்துகள் இல்லை: