வெள்ளி, 9 ஜூலை, 2010

புலம்பெயர் தமிழர்கள் கட்டைப் பஞ்சாயத்து நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்!

புலம்பெயர் தமிழர்கள் கட்டைப் பஞ்சாயத்து நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்!
கேணல் ஹரிஹரன் புத்திமதி!!
கேணல் ஆர்.ஹரிஹரன் இந்திய இராணுவத்தின் முக்கியமான முன்னாள் புலனாய்வு அதிகாரியாவார். அவர் இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக, அவ்வப்போது யதார்த்தபூர்வமான சில கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். அண்மையில் அவர், புலம்பெயர் தமிழ் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த நீணட பேட்டியொன்றில், புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த பகுதியை மட்டும், அதன் முக்கியத்துவம் கருதி கீழே தருகின்றோம். ஆனால் ஹரிஹரன் போன்றவர்களின் இத்தகைய கருத்துக்கள் கூட, சில புலம்பெயர் தமிழர்களின் கண்களைத் திறக்குமா அல்லது வழக்கம் போல எருமை மாட்டில் மழை பெய்த கதைதானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஆரோக்கியத்தன்மை குறித்த உங்களது கருத்து என்ன?
பதில் - ஆரோக்கியம் குன்றிய நிலையில் உள்ளது என்றே தோன்றுகிறது. முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்துவிட்டது.
சென்னைத் தமிழில் சொன்னால் கட்டைப் பஞ்சாயத்து அணுகுமுறை கைவிடப்பட வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல முயற்சிகளை சிலர் எடுத்து வருகிறார்கள். அது வரவேற்கத்தக்கது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மாற்றுக் கருத்துக்களைக் கூறுபவர்களை துரோகி என்றும் விபீடணன் என்றும் வர்ணிப்பதில் காழ்ப்புணர்ச்சியே அதிகரிக்கும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் முயற்சிகளை இலங்கையில் வாழும் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாட்டின் விளைவுகளை அவர்களே அனுபவிக்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சாடுகிறார்கள். விமரிசனம் வரவேற்கத்தக்கதே. ஆனால் வரைமுறை இல்லாமல் சாடுவது பயனற்றது. அதனால் இந்தியாவில் தமிழர் பிரச்சினைகளில் உண்மையான அனுதாபத்துடன் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளை அது எவ்வாறு பாதிக்கும் என்பதை அப்படிச் சாடுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னால் வெற்றுப் பேச்சுப் போதாது, பயனுள்ள செயல்பாடுகளே தேவை.

கருத்துகள் இல்லை: