இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
கடந்த மாதம் 24ம் திகதி தமது ஆரம்ப சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் இம்மாதம் 2ம் திகதி இரண்டாவது சந்திப்பில் திட்ட வரைபுகளை மேற்கொள்ளுமுகமாக சகல கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய உப குழுவொன்றினையும் அமைத்திருந்தனர். கடந்த 4ம் திகதி கூடிய தமிழ்க்கட்சிகளின் அரங்க உபகுழுவினர் தயாரித்த திட்ட வரைபுகள் இன்றையதினம் கலந்தாலோசிக்கப்பட்டு அதன் நோக்கங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் தொடர்பான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக் களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுத்தல் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் மலையக தமிழ் மக்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் நீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுத்தல் என்பன தமிழ்க்கட்சிகளின் பிரதான நோக்கமாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மேற்கூறிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒற்றுமையான அரசியல் செயற்;திட்டத்தினை உருவாக்குதலும் நடைமுறைப் படுத்துதலும் அத்துடன் இந்த நோக்கங்களை அடைவதற்காக இலங்கைத் தீவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் பேசும் மக்களிடமிருந்தும் அவர்கள் மத்தியில் செயற்படும் அமைப்புக்களிடம் இருந்தும் பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுதல் அத்துடன் இந்த நோக்கங்களை அடைவதற்காகத் தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகள் மற்றும் சமூக அமைப்புக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுதல் என்பன அரசியல் வழிமுறைகளாக தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக