வியாழன், 8 ஜூலை, 2010

வட பகுதி பிரயாணங்களுக்கான தற்போதைய நடைமுறை விபரங்களை அறியத்தருகின்றோம்

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வடபகுதிக்கு பிரயாணம் செய்வதற்கான தற்போதைய நடைமுறைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் புதிய முயற்சிகளும்.


 வசந்த கால விடுமுறைக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம் வரவிருக்கும் புலம்பெயர் உறவுகள் பலரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து வட பகுதி நோக்கிய பிரயாணங்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி குறித்த விடயங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன் போது தற்போதைய நடைமுறையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது குறித்த விபரங்களை பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த நடைமுறைகளை மேலும் இலகு படுத்துவது குறித்தும் பாதுகாப்பு அமைச்சுடன் பேசி இணக்கப்பாடு காணும் பட்சத்தில் வட பகுதிக்கான பாதுகாப்பு அமைச்சின் பிரயாண அனுமதியினை முற்றாக நீக்கி புலம்பெயர் உறவுகள் எதிர் நோக்கும் அசௌகரிங்களை போக்குவது குறித்தும் ஆலோசித்து வருகின்றார்.

இதே வேளை புலம்பெயர் உறவுகளின் அவசர தேவை கருதி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது குறித்த தற்போதைய நடைமுறை விபரங்களை அறியத்தருகின்றோம்.

1. யாராவது ஒரு நபர் இலங்கையில் பிறந்தவராகவோ அல்லது இலங்கைப் பிரஜாவுரிமை உடைய நபர் ஒருவராகவோ இருக்கும் பட்சத்தில் அவர் இலங்கையில் வசித்தாலோ அன்றில் வெளிநாடொன்றில் வசிப்பவராக இருப்பினும் வடபகுதிக்கு செல்வதற்கு எவ்வித அனுமதியும் பெறவேண்டியதில்லை.

2. யாராவது ஒரு நபர் இலங்கைக்கு வெளியே பிறந்தவராக இருந்தால் அல்லது இலங்கை பிரஜாவுரிமை அற்றவராக இருப்பின் குறித்த நபர் வடபகுதிக்கு (மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள்) பயணம் செய்வதாக இருப்பின் அவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். (பாதுகாப்பு அனுமதியை பெறுவதற்கு கீழே உள்ள 6ம் பந்தியைப் பார்க்கவும்)

3. யாராவது ஒரு நபர் (மேலே 2ம் பந்தியில் குறிப்பிட்டபடி) இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் அல்லது சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் பணிபுரிபவராக இருப்பின் தமது கடமைக்காலம் முடியும் வரை அந்நபர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளாமல் வடபகுதிக்கு பயணத்தை மேற்கொள்ளமுடியும்.

4. இலங்கையில் பிறந்த நபர் ஒருவர் கீழே உள்ள ஆவணங்களில் ஏதாவதொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

அ. தேசிய அடையாள அட்டை
       ஆ. பிறப்பச் சான்றிதழ்.
     இ. வலுவுள்ளதான இலங்கை கடவச்சீட்டு

ஈ. வெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது பயண அனுதிப்பத்திரத்தில் இலங்கையில் பிறந்தவர் என அச்சிடப்பட்டிருத்தல்

உ.  இலங்கை அரசாங்க நிறுவனம் ஏதேனும் ஒன்றினால் குறித்த நபர் இலங்கையில் பிறந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.

5. 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளை ஒருவர் வெளிநாட்டில் பிறந்திருக்கும் பட்சத்தில் இலங்கையில் பிறந்த தனது பெற்றோருடன் பயணம் மேற்கொள்ளுவாராயின் பயண அனுமதி பெறத்தேவையில்லை.

6. பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது கீழ்வரும் விடயங்களைப் பூர்த்திசெய்து

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சு - சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுப் பாதுகாப்பு பாலதக்ஷ மாவத்தை கொழும்பு
இலங்கை எனும் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    அ.  முழுப்பெயர்
    ஆ.  குடியுரிமை
    இ.  தொழில்
    ஈ.   பிறந்த இடம்
    உ.  தற்போதைய முகவரி
    ஊ.  கடவுச்சீட்டு இலக்கம்.

எ.   இலங்கையின் வடபகுதிக்கு செல்லவேண்டிய இடத்தின் முகவரி

ஏ.   அங்கு தங்கியிருக்கும் கால எல்லை.
 
மேற்படி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்வரும் ஏதாவதோர் வழியில் பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அ. மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்புதல் (இதன்போது விண்ணப்பதாரரின் இலங்கைக்குட்பட்ட தொலைநகல் இலக்கமொன்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.)

ஆ. 0094-11-2328109 எனும் இலக்கத்திற்கு    தொலைநகல் ஊடாக அனுப்புதல் (இதன்போது விண்ணப்பதாரரின் இலங்கைக்குட்பட்ட தொலைநகல் இலக்கமொன்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.)

இ. பாதுகாப்பு அமைச்சில் நேரடியாக விண்ணப்பத்தை   ஒப்படைத்தல். அனுமதி வழங்கப்படுமிடத்து அதேநாளில் பயண அனுமதி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: