சர்வதேச போர் குற்ற நீதிமன்றம் தொடர்பான சாசனத்தில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திடாததையிட்டு அவரை ராஜபக்ஷ குடும்பம் அரசாங்கம் விளக்கேற்றி கும்பிட வேண்டும் என மங்கள சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, சர்வதேச ரீதியில் தோல்வி கண்ட நாடு என்ற நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆட்சியாளரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் சர்வதேச போர் குற்ற நீதிமன்றம் தொடர்பான சாசனத்தில் இலங்கை கைசாத்திடாமையினால் இலங்கையை அங்கு கொண்டு செல்ல முடியாது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோதே இந்த சாசனத்தில் கைச்சாத்திட வேண்டியிருந்தது. எனினும் அவர் கைச்சாத்திடவில்லை. இதனையிட்டு ராஜபக்ஷ அரசாங்கம், குடும்பம் அவருக்கு கடமைப்பட்டுள்ளனர். ரணிலின் தீர்க்கதரிசனமான இந்த நடவடிக்கைக்காக இவர்கள் விளக்கேற்றி அவரை வணங்க வேண்டும்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியிலிருந்த நான்கு வருடகாலத்திலேயே ஐ.நா. செயலாளரினால் இலங்கை தொடர்பிலான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வினால் இலங்கைக்கு பிரச்சினை ஏற்பட்டால் சீனா பார்த்துக் கொள்ளும் என நினைத்து கொண்டிருக்கவேண்டாம். ஏனெனில் சூடானுடன் சிறந்த ராஜதந்திர உறவை சீனா கொண்டிருந்த போதிலும் சூடான் தொடர்பான ஐ. நா. விவகாரத்தில் சீனா தலையிடவில்லை. அதேபோல ஈரான் அணுவாயுத விவகாரத்தில் ஐ.நா.வுக்கு சீனா உதவ வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதனால் இலங்கை அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும்.
அத்துடன் தனக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை போக்கிகொள்வதற்கு ஐ.நா.வுடன் இலங்கை இணைந்து செயற்படுவது அவசியமானதாகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக