ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி தலைமையை எதிர்த்து முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும், எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி "ஆறுதல் யாத்திரை' மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால் கட்சி இரண்டாக உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி(37), கடப்பா தொகுதி காங்., எம்.பி.,யாக உள்ளார். ராஜசேகர ரெட்டிக்கு பிறகு அவரை முதல்வராக்க அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ஆனால், ரோசய்யா முதல்வர் என்பதை மேலிடம் தன் செயலால் அறிவுறுத்தியது. மேலும், தெலுங்கானா தனிமாநில வன்முறை பிரச்னையால் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் விவகாரம் அடங்கிப் போனது. ராஜசேகர ரெட்டி மறைவின் போது உயிர் நீத்த தொண்டர் களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக யாத்திரையை துவக்கினார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த யாத்திரையின் மூலம் ஜெகன், கட்சியில் முக்கியத்துவம் பெறுவதை மேலிடம் ரசிக்கவில்லை. பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த கட்சி மேலிடம், ஜெகன்மோகன் ரெட்டியின் "ஆறுதல் யாத்திரை'க்கு தடை விதித்தது. தனது தாய் மற்றும் மனைவியுடன் சென்று சோனியாவை சந்தித்து அனுமதி கோரினார் ஜெகன்மோகன். ஆனால், கட்சி மேலிடம் திட்டவட்டமாக அனுமதி மறுத்து விட்டது.
மீறல்: இருப்பினும் இந்த தடையை மீறி இன்று, ஜெகன் மோகன் ரெட்டி யாத்திரையை துவக்க திட்டமிட்டுள்ளார். ராஜசேகர ரெட்டியின் ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக கடப்பா பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க் கள், ஜெகன்மோகன் ரெட்டியின் யாத்திரைக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அவரை சந்தித்து உறுதியளித்துள்ளனர். தந்தை பலியான சோகம் தாளாமல் உயிரிழந்த ஆதரவாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும், ராஜசேகர ரெட்டியின் மகனான எனது கடமை. இதைநான் செய்யாமல் இருக்க முடியாது. காரணம் சொல்லாமல் கட்சி மேலிடம் இந்த யாத்திரைக்கு தடை விதிக்கிறது' என, ஜெகன் மோகன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"ஆறுதல் யாத்திரைக்கு கட்சி மேலிடம் தடை விதித்துள்ளதால் அந்த யாத்திரையில் பங்கு கொள்ளும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், கட்சி கட்டுப் பாட்டை மீறியவர்களாக கருதப்படுவார்கள்' என, முதல்வர் ரோசய்யா எச்சரித்துள்ளார். வரும் 27ம் தேதி ஆந்திராவில் 12 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி கொண்டு வெற்றிக்கனியை பறிக்க காத்திருக்கின்றன தெலுங்கு தேசம் போன்ற எதிர்க்கட்சிகள். இந்த சங்கடத்தையும் காங்., உணர்ந்துள்ளது. கட்சி கட்டுப் பாட்டை மீறி ஜெகன்மோகன் யாத்திரையில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் மேலிடத் தின் நடவடிக்கையை எதிர் கொள்ள தயாராகி விட்டனர். பதவியை தூக்கியெறியவும் அவர்கள் துணிந்து விட்டனர். இதனால், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி டமாலென உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜெகன்மோகனின் ஆதரவாளரான ராம்பாபு என்ற காங்., தலைவர் குறிப்பிடுகையில், "இந்த யாத்திரை தனிப்பட்ட முறையிலானது. ஐதராபாத்தைச் சேர்ந்த சுதீர் ரெட்டி, ராஜி ரெட்டி, ஸ்ரீ சைலம் கவுடு மற்றும் கடப்பா தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.,க் கள் யாத்திரையில் பங்கேற்கின்றனர்' என்றார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள இச்சாபுரம் என்ற இடத்திலிருந்து ஜெகன்மோகன் இன்று யாத்திரையை துவக்குகிறார். உண்மையான காங்கிரஸ்காரர் தர்மத்தையும், கட்டுப்பாட்டையும் மீறக்கூடாது என, காங்., தகவல் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள் ளார். தொழிலதிபரான ஜெகன்மோகன் , சரத் பவாரை போல தனது செல்வாக்கை நிலைநாட்டவும், தேவைப்பட்டால் தனியாக கட்சியை துவக்கவும் துணிந்துள் ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக