செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களில் கவனத்தை ஈர்த்தவற்றில் ஒன்று அறிவியல் தமிழ் குறித்த அமர்வு. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் நாசா விஞ்ஞானி நா.கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அறிவியலை தமிழில் கற்பது எந்த விதத்திலும் தரம் தாழ்ந்தது அல்ல என்கிற கருத்தை இந்த அமர்வில் பேசிய அத்தனை பேருமே வலியுறுத்தி னார்கள்.
பொள்ளாச்சியில் பிறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வரும் விஞ்ஞானி நா.கணேசன் 1981-ல் இருந்து நாசா இதுவரை விண்வெளிக்கு அனுப்பி வைத்திருக்கும் 116 ராக்கெட்களில் 25 ராக்கெட்களின் வடிவமைப்பில் தலைமைப்பொறியாளராக இருந்தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்திற்காக புறநானூறு பாடல்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஜார்ஜ் ஹார்ட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்தவர். ஜார்ஜ் ஹார்ட்டும் இதை தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டு கணேசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் சாதிக்கும் ஒருவர் சங்க இலக்கியங்களுக்காகவும் கணினித் தமிழுக்காகவும் அதிக நேரம் ஒதுக்குகிறாரே என்கிற ஆச்சர்யத்தோடு அவரிடம் பேசினோம். “ ""என்னுடைய பணியில் எவ்வளவு ஈடுபாடு உண்டோ அதே அளவு என் தாய்த்தமிழ் மீதும் உண்டு. ஓலைகள், பிரபந்தங்கள் என எல்லாவற்றையும் ஒன்றிணைக் கும் ஒரு பெருந்திரட்டியை உருவாக்கி வருகிறேன். நாங்கள் உருவாக்கிய தமிழ்மணம் திரட்டியில் ஆரம்பத்தில் ஆயிரம் வலைப்பதிவுகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்றைக்கு 9 ஆயிரம் வலைப்பதிவுகள் வரை உள்ளீடாக வருகின்றன. இது வரும் ஆண்டுகளில் லட்சங்களைத் தொடும் வாய்ப்பிருக் கிறது. அந்த அளவுக்கு இணையத்தில் தமிழ் எழுதுபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலையில் செம்மொழி மாநாட்டோடு சேர்த்து இணைய மாநாடும் நடத்தப் படுவது பெரும் பயன் அளிக்கும்'' என்றவர்...
""எந்த ஒரு தொழில்நுட்பமும் நேரடியாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால்தான் வெற்றியடையும். அந்த வகையில் இணையத்தமிழின் வளர்ச்சி யை சராசரி தமிழனும் பயன்படுத்த வகை செய்யவேண்டும். தொடுதிரை உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்துவிட்ட நிலையில் கிராமங்கள் தோறும் இணையக்குடில் ஒன்றை தொடங்கி அதை கிராம மக்கள் பயன்படுத்த வகை செய்யவேண்டும்.
இதற்கான முயற்சிகளை தமிழக அரசே மேற்கொள்ளலாம். சாதி சான்றிதழ் பெறுவது, மின்னஞ்சலில் புகார் அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை உருவாக்குவதன் மூலம் இணையத்தமிழ் மேலும் பயனுள்ளதாக அமையும்''’என ஆலோசனை வழங்குகிறார்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிப்பதை வரவேற்கிறார் விஞ்ஞானி கணேசன்.
""அதேநேரத்தில் ஆங்கிலத்தை உலகத்தோடு தொடர்புகொள்வதற்கான ஒரு மொழியாக கற்றுக்கொள்வதும் அவசியம். தமிழில் அறிவியல் சொற் களஞ்சியத்தை உருவாக்கிட வேண்டும். நீண்டகால செயல்திட்டத்தோடு வேலை செய்தால் நிச்சயம் அறிவியல் தமிழ் முன்னேற்றம் அடையும். அதற்கான சரியான தருணம் இதுதான்'' என அழுத்தமாக சொல்கிறார் விஞ் ஞானி நா.கணேசன்.
-ச.கார்த்திகைச்செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக