செவ்வாய், 6 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் சாந்தகப்பை எடுத்தவன் மேசன் என்பதாக மாறிவிட்டது

யாழ்ப்பாணத்தில் தரமற்ற வேலைகள் தடுப்பது; தவிர்ப்பது எங்ஙனம்?
வில் எடுத்தவன் வில்லன் என்பது போல் யாழ்ப்பாணத்தில் சாந்தகப்பை எடுத்தவன் மேசன் என்பதாக மாறிவிட்டது.
ஈழத்தமிழ் மக்களின் துன்பங்கள் ஒன்றல்ல. இனப்பிரச்சினை, யுத்தப்பாதிப்புகள் என்பதற் கப்பால், எங்கள் மனப்பாங்கின் குறுக்கம் மிகப் பெரிய பிரச்சினையாகிவிட்டது.எதிலும் விசுவாசமில்லை. எந்தப்பணியிலும் பற்றுறுதியில்லை. எதற்கும் விமர்சனம், வியாக் கியானம் என்ற துன்பநிலை நீண்டு செல்கிறது. இதன் விளைவு தமிழினத்தின் எதிர்காலத்தை அதலபாதாளத்தில் விழுத்திவிடும்.

இத்தகைய குறுகிய மனநிலை கொண்ட சமூக உருவாக்கம் யாழ்ப்பாணத்தில் வேகமெடுத்துள்ளதென்பதை வேதனையோடு சொல்லித்தானாகவேண்டும்.இதற்குப் பல உதாரணங்களை முன்வைக்க முடியும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கட்டிடம் மற்றும் அதனோடு இணைந்த பணிகளை ஒரு கணம் எடுத்துப்பாருங்கள்.

எங்காவது அழகான கட்டிடவாக்கம் நடந் துள்ளதா? என்று. பரவாயில்லை அழகான கட்டிடம் வேண்டாம். உறுதியான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதா? இல்லவே இல்லை .வில் எடுத்தவன் வில்லன் என்பது போல் யாழ்ப்பாணத்தில் சாந்தகப்பை எடுத்தவன் மேசன் என்பதாக மாறிவிட்டது.

அவசரமான வேலை, ஒழுங்கற்ற வேலை, காலம் கடத்தும் சிந்தனை, வேலையில் விசுவாசமற்ற தன்மை போன்றவற்றை யாழ்ப்பாணத்தில் பலரிடம் காண முடிகின்றது. நேற்றுமுன்தினம் ஆலயமொன்றில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு வெள்ளோட்டம் என அறிவிக்கப்பட்டி ருந்தாலும், மாலை 4 மணிக்கும் வர்ணம் பூசி முடியவில்லை. எப்படியிருக்கிறது எங்கள் தொழிற் சிறப்பு. தனித்து பணத்தை மட்டும் கருத்தில் கொண்டு பாவ காரியம் நடந்தேறுகிறது.

இது மட்டுமல்ல, ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம், என்னே கொடுமை! கும்பம் வைத்த பின்பும் வர்ணம் பூசும் பணி நடக்கும். இந்த அவசரத்தால் தரமற்றவையும் தகுதியற்ற வையும், தகாதவையும் உருவாக்கப்படும்.

இது தொடர்பில் இத் தொழிற்றுறைகளை நடத்துபவர்கள் ஓரளவுக்கேனும் மனச்சாட்சி யுடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மேலாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள பஸ் தரிப்பு நிலையம், பொம்மைவெளி யிலுள்ள கூட்டுப்பசளை தயாரிக்கும் கட்டிடப் பகுதி என்பவற்றுக்குச் சென்று பாருங்கள் அவற் றின் கூரை சீற்றுகள் கழன்று, பறந்து, உடைந்து கிடக்கின்றன.

ஐயகோ! என்ன செய்வது பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மேற் பார்வையாளர்கள் இவர்கள் இருந்தென்ன பலன்?யாழ்ப்பாணத்தில் எந்தக் கட்டிடமாவது மழை காலத்தில் ஒழுக்கு இல்லாத கட்டிடமாக இருக்கிறதா? இதையாரேனும் நிரூபித்தால் நாங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்போம். அதை நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள்...?
- வலம்புரி தலையங்கம்

கருத்துகள் இல்லை: