தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள் (120). அவர்களுக்கு 10 குழந்தைகள். அதில், ஆறு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, முத்து (85), காளியப்பன் (65), சின்னசாமி (62) என்ற மகன்களும், மாதம்மாள் (60) என்ற மகளும் உள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 பேர்.காவேரியம்மாள் 120 வயதிலும் கைத்தடி ஏந்தி கிராமத்தில் சமையல் செய்து, தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளை கண்ட காவேரியம்மாள், இது வரையில் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது.அவருக்கு தற்போது புதிதாக பல் முளைத்திருப்பதை கண்ட அவரது உறவினர்கள், கிராம மக்கள், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காவேரியம்மாளுக்கு சடங்கு செய்து, அவரிடம் ஆசி பெற்றனர்.கிராமத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் காவேரியம்மாளிடம் முதல் ஆசி பெற்று செல்கின்றனர். இன்று வரையில் தனக்கு தேவையான சமையல், வீட்டு வேலைகள் வரை அவரே செய்து கொள்கிறார்.
அவரது மகன்கள், மகள் வீட்டுக்கு அழைத்த போதும், "தன்னால் முடியும் வரையில் சமைத்து சாப்பிடுவேன்' எனக்கூறி தனியாக குடித்தனம் நடத்தி வரும் காவேரியம்மாள், தனது கடந்த கால வாழ்க்கை குறித்து கூறியதாவது:எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது துரைசாமியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின் 14வது வயதில் பூப்படைந்தேன். ஆரம்பத்தில் எனது சொந்த ஊரான தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியில் குடியிருந்தோம். கோவிந்தாபுரம் வனப்பகுதியில் கட்டைகள் வெட்டும் கூலி வேலைக்கு நானும், என் கணவரும் வந்தோம். தொடர்ந்து வேலை இருந்ததால், கோவிந்தாபுரத்தில் குடியேறி விட்டோம்.சோளம், தினை, கேழ்வரகு ஆகியவற்றை உணவு செய்து சாப்பிட்டோம். தற்போது, சாதம், களி, மட்டன் சாப்பிடுகிறேன்.கடுமையான உழைப்பும், நல்ல உணவும் என் ஆரோக்கியத்துக்கு காரணம் என நினைக்கிறேன்.
இது வரையில் ஊசி போட்டதில்லை,மாத்திரைகள் சாப்பிட்டதில்லை. வீட்டில் நான் மூத்தவள் என்பதால், என் மகன்கள் முதல் உறவினர்கள் வரையில் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் காட்டி வருவது எனக்கு ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது.அரிசி சாதம் சமீபத்தில் தான் சாப்பிடுகிறேன். கம்பு, கேழ்வரகு கூழ் தான் எனக்கு முக்கிய ஆகாரம். கிராம மக்களும், உறவினர்களும் நான் மறு பிறவி எடுத்திருப்பதாக எனக்கு சடங்குகள் செய்து, நான் இன்னும் பல ஆண்டு வாழ பூஜைகள் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.முதியோர் உதவி தொகைக்கு விண்ணப்பம் கொடுத்தேன். எனக்கு அதிகம் வயதாகி விட்டது எனக்கூறி முதியோர் உதவி தொகை கொடுக்க மறுத்து விட்டனர். அரசு எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடல் நல பாதிப்பு: டாக்டர் கணிப்பு :காவேரியம்மாளுக்கு நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ""பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது கோளாறு இருக்கலாம். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை. ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல் முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,'' என்றார்."அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு' என, டாக்டர் கூறியதை காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம் வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக