மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றியமைக்கப்படும்போது திமுக சார்பி்ல் கனிமொழி கேபினட் அமைச்சராகலாம் என்று தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் மு.க. அழகிரி பதவி விலகலாம் என்று தெரிகிறது.
பணிச் சுமையைக் குறைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கோரியுள்ளதால், அவரது துறைக்கு இரு இணையமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
சரத்பவாரிடம் விவசாயத்துறையை மட்டும் விட்டுவிட்டு அவர் வசமுள்ள உணவுத்துறை மற்றும் பொது வழங்கல் துறைக்கு என தனியாக இரு இணையமைச்சர்கள் நியமி்க்கப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு பிரதீப் ஜெயின் (காங்கிரஸ்) சிசிர் அதிகாரி (திரிணாமூல் காங்கிரஸ்) ஆகியோரின பெயர்கள் அடிபடுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவும், அம் மாநில கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளத்தை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வரவும் அதன் தலைவர் அஜீத் சிங்கை மத்திய அமைச்சராக்க சோனியா முடிவு செய்துள்ளார். இதன்மூலம் ஜாட் இனத்தினருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்தது போலவும் இருக்கும். மேலும் இதன்மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
அதே போல பிகார் மாநிலத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதோடு, அம் மாநில தலித் மக்களின் வாக்குளைக் கவரவும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுவை மேலும் ஒடுக்கவும் லோக ஜனசக்தித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி தர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இதை பாஸ்வான் ஏற்க மறுத்துவிட்டார். பாஸ்வானை காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் லாலுவின் கூட்டணியை பலவீனப்படுத்தி அந்த மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு மாற்றான 2வது சக்தியாக உருவெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசில் சேர மாட்டேன் என்று பஸ்வான் அறிவித்துள்ளார். லாலுவின் கூட்டணியில் தொடர்வேன் என்று அறிவித்துவிட்டார். இதனால் பிகாரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி தரப்படலாம்.
மேலும் சசி தரூர் ராஜிநாமாவால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்பவும் புதிய இணை அமைச்சர் நியமிக்கப்படலாம்.
அழகிரிக்குப் பதில் கனிமொழி?:
அதே போல அடுத்த ஆண்டுக்குள் நடக்கவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மாநில அரசியலுக்குத் திரும்பிவிட ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் பதவி விலகிவிட்டு அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சரவையில் கனிமொழி இடம்பெறக் கூடும் என்று தெரிகிறது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அழகிரி முடிவு செய்துள்ளார் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யவும், கட்சியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தவும் அவர் மாநில அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.
அதே போல மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் மம்தா பானர்ஜி விலகிவிட்டு, அவருக்குப் பதில் அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் ரயில்வே அமைச்சராகவும் வாய்ப்புள்ளது..
நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், குமாரி செல்ஜா, பிரிதிவிராஜ் சவான் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அடுத்த வாரத்துக்குள்ளாகவே இந்த அமைச்சரவை மாற்றங்கள் நிகழலாம்.
காங்கிரஸை விட்டு ஜெகன்மோகன் நீக்கம்?:
இதற்கிடையே மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பியுமான ஜெகன்மோகன் காங்கிரஸ் தலைமையின் உத்தரவை மீறி ஆந்திராவில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இதன்மூலம் தனக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவு திரட்டவும், முதல்வர் ரோசய்யாவுக்கு எதிரான அலையை உருவாக்கவும் முயன்று வருகிறார்.
இந் நிலையில் அவரும், அவரது தாயார் விஜயலட்சுமியும் சோனியாவை டெல்லியில் சந்தித்து யாத்திரையைத் தொடர அனுமதி கேட்டனர். ஆனால், சோனியா அனுமதி தரவில்லை.
இருப்பினும் யாத்திரையை அவர் தொடர திட்டமிட்டுள்ளார். யாத்திரை சென்றால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக