நடேசன் (நகைச்சுவை)
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கிடையில் அதிகமாக பரவி இருக்கும் நோய்களில் முதன்மையானது இதய நோய். ஐரோப்பிய உணவு வகைகளை உண்டுவிட்டு அவர்கள்போல் உடற்பயிற்சி செய்யாததால் இந்நோய் வருகிறது. இதற்கு அடுத்ததாக முக்கியமான நோய் மற்றவர்களை அதிகம் புகழ்வதாகும். இதை சிலேடையாக கூறுவதானால் முதுகுசொறிதல் எனலாம். இதற்கு உதாரணம் சொல்வதானால் நீங்கள் ஒரு வானொலிஅறிவிப்பாளராக இருந்தால் உங்களை நாடு கடந்த ஈழத்திற்கு தகவல் தொடர்பு மந்திரியாக்கிவிட்டுத்தான் நம்மவர்கள் உறங்குவார்கள்.
நீங்கள் ஹோட்டல் நடத்தினால் உணவு மந்திரியாகலாம்.
இது மனிதர்களுக்கு மட்டும் உள்ள குணம் எனகூறமுடியது. குரங்குகள் ஒன்றுக்கு ஒன்று பேன் பார்ப்பதும் இப்படியான ஒரு பழக்கத்தைப்போன்றதுதான். ஆதியில் வேட்டையாடும் காலத்தில் இருந்து இது மனித குலத்தில் உள்ளது. நில ஆதிகாலத்தில் உச்சத்தை அடைந்து கைத்தொழிற்புரட்சியின் பின் மேற்கு நாடுகளில் இது குறைந்து விட்டது. தனிமனிதரின் ஆதிக்கம் குறைந்து முதலின் ஆதிக்கம் பெருகியதால் இது நடந்தது. ஆனால் நம் நாடுகளை சேர்ந்தவர்களில் இது சுவரில் பல்லி போல் பலரிடம் ஒட்டிக் கொண்டு;ள்ளது.
தமிழ்நாட்டில் சில காலம் இருந்த போது ‘தலைவா’ என சொல்லிவிட்டு சில்லறை கேட்பார்கள் இது தனது தேவையை நிவர்த்தி செய்வதற்கான கபடமான புகழ்ச்சியாகும். கிராமங்களில் பணம் உள்ளவர்களை சுற்றி புகழ்வதற்காக எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும் . இவர்களின் புகழ்ச்சி ஒரு சிறை போன்றது. வெளிவருவது கடினமானது. இந்த சிறைக்கம்பிகள் பொன்னாடைபோர்த்தல் கேடயம் அளித்தல் மற்றும் போஸ்டர் அடித்தல் என பல வடிவங்களில் இருக்கும் . இலங்கையில் இந்தக்கலாசாரம் ஆரம்பத்தில் அதிகம் இருக்கவில்லை. தளபதி அமிர்தலிங்கம் சொல்லின் செல்வர் இராஜதுரை என்ற பட்டங்களோடு சரி . எண்பதுகளில் உருவாகிய ஆயுத இயக்கங்கள் இந்தியாவில் இருந்து போஸ்டர் அடிப்பது கலண்டர் அடிப்பது போன்ற கலாசாரத்தை கொண்டுவந்தன. இதைப் பெரிதாக்கி விடுதலைப்புலிகள் தனிநபர் வழிபாட்டு அரசியல் நடத்தினார்கள்.
மேற்கு நாடுகளில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து தேவையை பூர்த்தி செய்யவேண்டியதில்லை. எல்லோரிடமும் தேவையான பணமும் வசதியும் உண்டு. இங்கு உள்ளவர்களுக்கு தேவைப்படுவது தன்னை மற்றவரிடத்தில் இருந்து Nவுறுபடுத்தி அடையாளம் காட்டுதல்தான். இது எல்லா சமூகத்துக்கும் உரியது. இதன்தன்மைகள்தான் வேறுபடுகின்றன புது வீடுகளைக் கட்டுதல் ஒருவர் புதுக் காரை வாங்குதல் சங்கங்களை உருவாக்கி தலைவராக்குதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.
நான் கூறும் இந்தப் புகழ்ச்சி மற்றவர் வாயால் வந்து ஒருவரை அடையும் போது மதுவாக அமைகிறது . இதற்கு மனிதர்கள்ஆடிமையாகிறார்கள்.
ஓரு மேடையில் பேசிய ஒருவரை ‘இவர் ஒரு தமிழ் அறிஞர்’ என புகழ்ந்தால் அவருக்கு உச்சி குளிர்ந்திருக்கும். பேசியவருக்கும் ஒன்றும் குறையவில்லை. இதன் விளைவு என்ன? பாரதியார் விபுலானந்தர் போன்றோரை எப்படி இளம் சந்ததிக்கு அறிமுகப்படுத்துவது?
இன்னும் ஒருவரை இவர்தான் தமிழுக்கு தொண்டாற்றியவர் என புகழ்ந்தால். இதே வேளையில் புகழப்படுகிறவர்கள் அடக்கமாக தனது ஆத்மதிருப்திக்காக உழைப்பதாக கூறினாலும் இந்த முதுகு சொறியும் கும்பல் விடாது.
இதைவிட சிலருக்கு முதுகு சொறிய யாரும் கிடைப்பதில்லை இவர்கள் தங்கள் புகழ்பாடி திருப்தி அடைவார்கள்- இவர்கள் ஒரு தனிரகம்
இதை ஆங்கிலத்தில்ரோடிங் (TOADYING) அல்லது ஆஸ் கிஸ்ஸிங் (ASS Kissing) என்பார்கள்.
இப்படி நான் எழுதுவதால் இவருக்கு மற்றவரை புகழ்வது பிடிக்காத எரிச்சல் பேர்வழி என முடிவுக்கு வந்துவிடாதீர்கள். எந்தவேலையையும் அழகாக கலை நயத்தோடு செய்யலாம் .அதே வேளையில் அலங்கோலமாகவும் செய்யலாம். ஒரு கசாப்பு கடைக்காரன் கத்திக்கும் அறுவைச் சிகிச்சைசெய்யும் மருத்துவரின் கத்திக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.
புத்திசாலித்தனமாக புகழ்வது எப்படி?
சிறந்த நடிகரான கமலஹாசனிடம் நீங்கள் சிறந்த நடிகர் என சொல்வதிலும் பார்க்க ராஜபார்வையில் உங்கள் நடிப்பு மிகவும் பிடித்தது என்பது இயற்கையாக இருக்கும்.
சாதாரணஅழகியான உங்கள் மனைவியிடமோ காதலியிடமோ ஐஸ்வர்யாராய் போல் இருக்கிறாய் என்றோ அல்லது உன்னைப்போல் அழகியை நான் கண்டது இல்லை என சொல்வதிலும் பார்க்க உனது கண்களின் அழகு மட்டுமே காலம் முழுவதும் என்னை கட்டிவைக்கும் என சொன்னால் புத்திசாலித்தனமாக இருக்கும்.
உங்கள் காதலி அழகியானால் அவளது அறிவைப்புகழுங்கள். இக்காலத்து பெண்களுக்கு உங்களில் மதிப்பு ஏற்படும்.
ஒரு நாடக ஆசிரியரிடம் சென்று ஓர் நாடகத்தை புகழ்ந்துவிட்டு சிறு விமர்சனத்தை கூறுங்கள். அவர், உங்களுக்கு நாடகத்தில் அனுபவம் உண்டு என நினைப்பார்
புகழப்படவேண்டியவர்கள்.
குழந்தைகளையும் சிறுவர்களையும் பாராட்டுவோம்- நல்லவிடயங்களை அவர்கள் செய்யும் போது.
மனைவிமாரைப் பாராட்டுவோம் – அவர்கள் தரும் கட்டில் சுகத்துக்காகவும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்காகவும்
எமது தாய்தந்தையரை புகழ்வோம்- வயதான காலத்தில் பேரன் பேத்திகளை போற்றிவளர்ப்பதற்காக . கடைசிக்காலத்தில் அதுவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் வேதனம்.. அதை அளவுக்கு அதிகமாகவே கொடுப்போம்.
நன்றி வீரகேசரி ஆனி 2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக