ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

டொமினிக்கன் குடியரசும் மிராபேல் சகோதரிகளும் - வரலாறு

 Neander Selvan :  டொமினிக்கன் குடியரசை 31 ஆண்டுகள் (1930 - 1961) தனது இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தவர் ரஃபேல் ட்ருஜிலோ. சுமார் 50,000 பேரின் கொலைகளுக்குக் காரணமான இவர், பயப்பட்டது இருவருக்கு மட்டுமே. ஒன்று கத்தோலிக்க திருச்சபை, இரண்டு மிராபெல் சகோதரிகள். 
டொமினிக்கன் ரிபப்ளிக்கின் சகல சக்திகளும் வாய்ந்த அந்தச் சர்வாதிகாரி ஒருமுறை, "எனக்கு இருக்கும் இரண்டு பெரிய பிரச்சினைகள் கத்தோலிக்க திருச்சபையும், மிராபெல் சகோதரிகளும்தான்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் பயந்தது போலக் கத்தோலிக்க சபை அவரை வீழ்த்தவில்லை, மிராபெல் சகோதரிகள் தான் வீழ்த்தினார்கள்.


யார் இவர்கள்? அமெரிக்காவின் அருகே உள்ள தீவுகளில் ஒன்று டொமினிக்கன் ரிபப்ளிக். இங்கே பிறந்த மிராபெல் சகோதரிகள் நால்வர், இவர்கள் ஒரு வசதியான மற்றும் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது தந்தை ஒரு வெற்றிகரமான வணிகர் என்பதால், அந்தப் பெண்களுக்கு அக்காலத்திலேயே உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, சகோதரிகளில் ஒருவரான மினர்வா மிராபெல், டொமினிக்கன் குடியரசில் சட்டம் பயின்று பட்டம் பெற்ற முதல் பெண்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வாதிகாரி ட்ருஜிலோவுக்கும் மிராபெல் சகோதரிகளுக்கும் இடையிலான அந்த முதல் நேரடி மோதல் 1949-இல் ஒரு நடன விருந்தில் தொடங்கியது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஆடம்பர விருந்துக்கு மிராபெல் குடும்பத்தினர் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது சர்வாதிகாரி ட்ருஜிலோ, மினர்வா மிராபெல்லுடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது அவரிடம் தவறாக நடக்க முயன்றார். சற்றும் அஞ்சாத மினர்வா, அந்த இடத்திலேயே அந்தச் சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியின் கையைப் பலமாகத் தட்டிவிட்டு, அவரை எதிர்த்துப் பேசினார்.
பொது இடத்தில் மானம் போனவுடன் கோபமடைந்த சர்வாதிகாரி, அதன்பின் தன் பழிவாங்கும் படலத்தைத் துவக்கினார். அவர்களை அதே இடத்தில் அவரால் கொன்றிருக்க முடியும். ஆனால் அதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது? முதலில் அந்தத் தந்தை மேல் பொய்க் குற்றச்சாட்டுச் சுமத்திச் சிறையில் போட்டார். அதன்பின் பேரம் தொடங்கியது. 
"என்னை அடித்த மினர்வா தானாக முன்வந்து என் ஆசை நாயகி ஆகவேண்டும், இல்லையெனில் தந்தை சிறையில் கடுமையாகச் சித்திரவதைக்கு உள்ளாவார், அதன்பின் அடுத்த குறி சகோதரிகளும், அவர்களது கணவர்களும், குடும்பத்தினரும்தான்" என்று மிரட்டினான்.
மினர்வா அப்போதும் பணியவில்லை. என் தந்தை இறப்பாரே தவிர, நான் உன்னிடம் அடிபணிய மாட்டேன் என்று உறுதியாக நின்றார். அதன்பின் சகோதரிகள் நால்வரும், அவர்களின் குடும்பத்தினரும், கணவர்களும் தலைமறைவாகினர். 
தம் சொத்துக்கள் அத்தனையையும் விற்று வெடிகுண்டு, துப்பாக்கிகளை வாங்கி, சர்வாதிகாரியால் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து "பட்டாம்பூச்சிகள்" என்ற கொரில்லா படையை உருவாக்கிப் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் ட்ருஜிலோவின் ரகசியப் போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு தகவல் தொடர்பு மையங்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர்.
இதனால் கோபமடைந்த சர்வாதிகாரி தந்தையைக் கொடூரமான முறையில் கொன்றான். அதன்பின் நடந்த கடும்போருக்குப் பின்னர், 1960-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மிராபெல் சகோதரிகள், அவர்களது கணவர்கள் மற்றும் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரைத் தேடிப் பிடித்துச் சிறையில் அடைத்தான். ஒரு விருந்தில் தொடங்கிய சண்டை இப்போது சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. 
மிராபெல் சகோதரிகள் உலகப்புகழ் பெற்றுவிட்டார்கள். அவர்களைக் கொல்லவும் முடியாது. சரி, மரியாதையாக மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டுப் போய்விடு, விட்டுவிடுகிறேன் என்றான் ட்ருஜிலோ.
அதற்கு மினர்வா, "நான் என் தனிப்பட்ட பிரச்சினைக்காகத்தான் உன்னுடன் போராட ஆரம்பித்தேன், ஆனால் இன்று மக்களைத் திரட்டி அது இயக்கமாக மாறிவிட்டது, அவர்களுக்கு நீ செய்த கொடுமைக்கெல்லாம் பதில் என்ன? உன்னைப் பதவியை விட்டு அகற்றுவதுதான் இனி என் நோக்கம்" என்றார்.
 மினர்வாவின் பேச்சால் ஆத்திரமடைந்த ட்ருஜிலோ, சகோதரிகள் மூவரையும் அவர்களது கணவர்களையும் தனித்தனி இருட்டறைகளில் அடைத்தான். அங்கு அவர்களுக்குக் கடுமையான மின்சார அதிர்வுகள் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகள் அளிக்கப்பட்டன. ஆனாலும், அவர்கள் ட்ருஜிலோவிடம் மன்னிப்புக் கேட்கவோ அல்லது போராட்டத்தைக் கைவிடவோ மறுத்துவிட்டனர்.
இந்தச் சகோதரிகளின் கைதுச் செய்தி உலகெங்கும் பரவியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ட்ருஜிலோவுக்கு அழுத்தம் கொடுத்தன. இதனால் உலக நாடுகளை ஏமாற்றுவதற்காகச் சகோதரிகளை மட்டும் சிறையிலிருந்து விடுவிப்பதாகத் ட்ருஜிலோ நாடகமாடினான். ஆனால் அவர்களது கணவர்கள் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டனர். இது ஒரு நயவஞ்சகத் திட்டம்; சகோதரிகள் தங்கள் கணவர்களைப் பார்க்கச் சிறைக்கு அடிக்கடி பயணம் செய்வார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.
1960-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று, தன் கணவர்களைச் சிறையில் சந்தித்துவிட்டு, ஒரு ஜீப் வண்டியில் மலைப்பாதை வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தனர் அந்த மூன்று சகோதரிகள் (ஒருவர் தப்பிவிட்டர்). ஆள்நடமாட்டமில்லாத ஒரு இடத்தில், ட்ருஜிலோவின் ரகசியப் போலீஸ் படை அந்த வண்டியை வழிமறித்தது. அந்த மூன்று சகோதரிகளையும்  அடித்துக் கொன்றனர். பின்னர் இது ஒரு கார் விபத்து போலக் காட்டுவதற்காகப் பிணங்களுடன் அந்த ஜீப் வண்டியை ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளினர்.
மூன்று இளம் தாய்மார்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது நாட்டு மக்களிடையே ஒரு பெரும் தீயைப் பரப்பியது. பட்டாம்பூச்சிகளின் மரணம், ட்ருஜிலோவின் 31 ஆண்டுக்கால ஆட்சிக்குச் சாவுமணியாக அமைந்தது. நாடெங்கும் பெரும் புரட்சி வெடித்தது. அது ஒரு போர்க்களமாக மாறியது. அவர்கள் கொல்லப்பட்ட ஆறே மாதங்களில், 1961 மே 30 அன்று, சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ ஒரு சாலைப் பயணத்தின்போது புரட்சிப்படை வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிராபெல் சகோதரிகள் கொல்லப்பட்ட தினமான நவம்பர் 25-ஆம் தேதியை, ஐக்கிய நாடுகள் சபை  "பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமாக" அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உலகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
ஜூலியா அல்வாரெஸ் எழுதிய " In the Time of the Butterflies" என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது.  இதே பெயரில் சல்மா ஹயக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம், இந்தச் சகோதரிகளின் தியாகத்தைச் சர்வதேச அளவில் பிரபலமாக்கியது.
#history_is_his_story
Her Story
~ நியாண்டர் செல்வன்

கருத்துகள் இல்லை: