Giri Sundar : தமிழ்நாட்டுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் ராகுல்???
2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்சின் அப்போதைய மாநிலதலைவர் கிருஷ்ணசாமி, ஆரணி தொகுதியில் போட்டியிட்டார். களநிலவரம் குறித்து சர்வே எடுத்தோம், செஞ்சிகோட்டையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் ஒருகிராமத்தில் ஒரு 45 வயது பெண்மணியிடம் பேசியபோது, அவருக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான் ஒன்று உதயசூரியன், மற்றொன்று இரட்டை இலை. காங்கிரஸ் பத்தி தெரிந்ததே தவிர அதன் சின்னம் கூட தெரியவில்லை. சுதந்திரத்துக்காக பாடுப்பட்ட கட்சி, சுதந்திரத்துக்கு பின்பு 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த கட்சி, அந்த தேர்தலின்போது ஒன்றியத்தில் ஆளும்கட்சியாக இருந்த கட்சியின் சின்னம் குறித்து தெரியவில்லை. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. பல கிராமங்களில் பயணம் செய்தபோது காங்கிரஸ் கட்சின் ஒன்று இருக்கான்னு கேட்டவர்கள் பலர்.
இத்தனைக்கும் அதே தொகுதியில் ஏற்கனவே ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுயிருந்தார் காங்கிரஸ் கிருஷ்ணசாமி.
கடந்த 50 ஆண்டுகளில் கட்சியை வளர்க்க இதுவரை எந்த முயற்சியும் தமிழ்நாட்டில் காங்கிரஸார் செய்யவில்லை, டெல்லி தலைமையும் முயற்சிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலின்போது மட்டும் நாங்களும் இருக்கிறோம், அதிகம் சீட் வேண்டும் என கூச்சல் போடுபவர்களாகவே இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது இப்படி மிரட்டுவார்கள். இப்போது ஒன்றியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருக்கும்போது மாநிலகட்சிகளை மிரட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது. இதனால்தான் அதோடு கூட்டணி அமைக்கும் கட்சிகள் பின்பு போடான்னு கழட்டிவிடுகிறார்கள்.
நாங்கள் கூட்டணியை விட்டு போனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்கிறார்கள் காங்கிரஸில் சிலர். அது அதீத கற்பனையாகவே எனக்கு தோன்றுகிறது. தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி உடையும்போது இனிமேலும் காங்கிரஸ் ஒன்றியத்தில் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதே எதார்த்தம். நம்பகமான பாட்னரின் நட்பை இழக்கும்போது அதன்பின் காங்கிரஸ்சை நம்பி யாரும் வரமாட்டார்கள்.
பிரதமர் பதவிக்காக இலவு காத்த கிளியாக இருக்கும் ராகுல்காந்தி, 2029ல் பிரதமர் பதவியை பிடித்துவிடலாம் என நம்பி அரசியல் செய்கிறார். அதற்கு சாதகமான சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா எனக்கேட்டால் கண்ணுக்கு எட்டியதூரம் வரை இல்லை. பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்வதுப்போன்று காட்டிக்கொண்டாலும் தீவிரமான அரசியல் செய்யவில்லை. ஆளும் பிசேபியின் ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகத்தை மக்கள் மன்றத்துக்கு கொண்டுவந்து தீவிரமான போராட்டம் செய்யவேயில்லை. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்தான் சாப்பிடுவேன் என்கிற நிலையிலேயே உள்ளார் ராகுல்.
மாணிக்கம்தாகூர், பிரவீன்சக்கரவர்த்தி பேசுவதுயெல்லாம் ராகுல்காந்தியின் உத்தரவுப்படிதான் என்பது திமுக தலைமைக்கு தெரியாமல் இல்லை. காங்கிரஸ்சை கை கழுவினால் திமுகவுக்கு பல வழிகளில் அனுகூலம். சிலவழிகளில் பாதிப்பு. அந்த சிலபாதிப்பும் வரக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸ்சின் கைகளை பிடித்துக்கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதனை திமுகவின் வீக் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது.
காங்கிரஸ்சை வழிநடத்த தெரியாமல் நடத்திக்கொண்டு இருக்கிறார் ராகுல். பாஜக பொருளாதார ரீதியாக, கட்டமைப்பு ரீதியாக இந்தியாவில் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது, காங்கிரஸ் தேய்ந்துவிட்டது. அதற்கான காரணம் என்னவென்பதை 12 ஆண்டுகாலமாக எதிர்கட்சியாக இருந்தும் இன்னும் ராகுல்காந்தி உணரவில்லை. இப்போதுவரை சோசியல்மீடியா அரசியலே செய்துக்கொண்டு இருக்கிறார். அவரின் பதிவுகளுக்கு கிடைக்கும் ஃலைக்ஸ் பார்த்து குதுகலமாகிவிடுகிறார் போல. அவரை சுற்றியிருப்பவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இல்லையென்றால் நடிகர் விஜய்யோடு கூட்டணி வைக்கலாம், அறுத்துதள்ளிடலாம் என ஆலோசனை சொல்வார்களா? இணையத்தில் தேர்தல் நடத்தினால்கூட ராகுல் பிரதமராக முடியாத நிலையிலேயே உள்ளார்.
சோசியல்மீடியா தவழ்ந்த காலத்தில் இணையத்தில் தேர்தல் நடத்தினால் வை.கோ, அதன்பின் சீமான் முதல்வராகும் அளவுக்கு “செல்வாக்காக“ இருந்தார்கள். அவர்களும், அவர்களது கட்சியும் மக்கள் மன்றத்தில் அதாவது நிஜ களத்தில் வெத்துவேட்டுகள் என்பதை மக்கள் உணர்த்தினார்கள். நடிகர் விஜய்யும் அப்படித்தான். அவருக்கு பெரியளவில் பில்டப் தரப்படுகிறது. அவர் தமிழ்நாட்டில் நட்சத்திர நடிகர் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவரோ, அவரது கட்சியோ இதுவரை தேர்தலில் நின்று தங்களது செல்வாக்கு இதுதான் என உறுதிப்படுத்தவில்லை. அதுமட்டும்மல்ல, தன் படத்துக்கு சிக்கல் தரும் பாஜகவை எதிர்த்து பேசாத தொடைநடுங்கியாக அரசியல் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய்யின் நடுக்கத்தால் பெரும்பான்மை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்டவருக்கு மக்கள் எப்படி அதிகாரம் தருவார்கள் என்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல், நடிகர் விஜய் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என காங்கிரஸ் மிரட்டுகிறது. அதோடு, எதிர்கட்சிகளும், மீடியாவும் கட்டமைக்கும் அளவுக்கு ஆளும்கட்சியான திமுக மீது மக்களிடம் எதிர்ப்பில்லை.
இதையெல்லாம் அறிந்துக்கொள்ளாமல் ப்ரவீன்சக்கரவர்த்தி, தனித்து நின்றால் டெப்பாசிட் வாங்கமுடியாத மாணிக்கதாகூரை பேசவைத்து வேடிக்கை காட்டுவதை திமுக தலைமை சகித்துக்கொள்ளலாம், மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள் தான் காங்கிரஸ்சுக்கு கை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ராகுல்காந்தியின் செயல்பாடு, அவரின் மவுனம் தமிழ்நாட்டில் அவரின் நாயக பிம்பம் சரிந்துக்கொண்டு இருக்கிறது என்பதை அவர் உணரவேண்டும். உணரவில்லை என்றால் பாசக போல் ராகுலும் தமிழ்நாட்டுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகிவிடுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக