செவ்வாய், 11 ஏப்ரல், 2017

இலுமினாட்டி என்பது ஒரு கற்பனை .. முதலாளி வர்க்கம் கைகாட்டும் மாயமான்தான் அது

இலுமினாட்டி" என்று யாரும் இல்லை. தெரிஞ்சுக்கோங்க மக்களே! முதலாளித்துவம் எனும் மக்கள் விரோத அமைப்பை புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான், இலுமினாட்டி எனும் கட்டுக்கதைகளை பரப்பி விடுகிறார்கள். "இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகள்" என்று அவர்கள் கூறுவன எல்லாம், முதலாளிகளின் வழமையான அராஜகங்கள் தான். இந்த சிக்கலான முதலாளித்துவ சமுதாயத்தில், உச்சியில் இருக்கும் ஆளும் வர்க்கம் எவ்வாறு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை பயன்படுத்தி சொத்துக்களை குவித்து வருகின்றது என்ற உண்மை பலர் கண்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, இலுமினாட்டி கதைகளை பரப்புவோரிடம், முதலாளித்துவம் பற்றிய எந்த ஆய்வும் கிடையாது. ஏனென்றால், முதலாளித்துவம் ஒரு நல்ல விடயம் என்று அவர்கள் நம்புகிறார்கள். (முதலாளித்துவ அமைப்பில் தனது வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.) அதனால், தாம் சிறந்தது எனக் கருதும் ஓர் அமைப்பு தீமைகளுக்கு காரணியாக இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. அதற்காக உருவாக்கப் பட்ட கற்பனைப் பாத்திரம் தான் "இலுமினாட்டி".

உலகில் நடக்கும் தீமைகளுக்கு எல்லாம், சில தனி நபர்களே காரணம் என்று நம்புகிறார்கள். ஆட்சியில் இருக்கும் சில கருப்பாடுகளை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள். தற்போதுள்ள அரசு மற்றும் பொருளாதார கட்டமைப்பு முழுவதும் தவறானது என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது. இலங்கை தேர்தலில் ராஜபக்சவுக்கு பதிலாக மைத்திரியை, இந்திய தேர்தலில், காங்கிரசுக்கு பதிலாக பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்பும் அப்பாவிகள் அவர்கள்.
அதே மாதிரி, இலுமினாட்டி சதிகாரர்களை இனங்கண்டு நீக்கி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக வரும் ஆட்சியாளர்கள், அந்தப் பதவியில் இருந்த முந்திய ஆட்சியாளர்களைப் போன்றே நடந்து கொள்வதை வரலாறு முழுவதும் கண்டு வந்துள்ளோம். முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதின் ஊடாகத் தான், அவர்கள் எல்லோரையும் அப்புறப் படுத்தலாம்.
ஏனென்றால், முதலாளித்துவம் என்பது ஒரு பொருளாதார உற்பத்தி முறை. அது தானாகவே சமூக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகின்றது. ஒரு சில தனி நபர்கள், அல்லது குழுக்கள் இங்கே பிரச்சினை அல்ல. இந்த உற்பத்தி முறையானது, சொத்துடமையாளர்களையும் உழைப்பாளிகளையும் பிரித்து வைக்கின்றது. இந்த சமூக உறவானது, ஒவ்வொரு நாளும் நடக்கும் பொருள் உற்பத்தியில், பல ஆயிரம் தடவைகள் மறு வார்ப்புச் செய்யப் படுகின்றது. 
அநேகமாக எல்லா வர்த்தகத் துறைகளிலும், ஒன்று திரட்டப்படும் மூலதனமானது ஒரு சிறிய சமூகப் பிரிவினரின் கைகளில் செல்வமாக சேர்கின்றது. அதுவே அதிகாரமாகவும் இருக்கின்றது. கணிதத்தில் நமக்குத் தெரியாத ஒன்றை "x" என்று குறிப்பிடுவோம். அதே மாதிரி, முதலாளித்துவ உற்பத்தி முறை, மூலதன திரட்சி பற்றி அறியாதவர்கள்; செல்வமும், அதிகாரமும் படைத்த அந்த சிறு பிரிவினரை "இலுமினாட்டிகள்" என்று அழைக்கிறார்கள்.  kalaiy.blogspot.com

கருத்துகள் இல்லை: