வியாழன், 13 ஏப்ரல், 2017

‘வசூல்ராணி’ துணைவேந்தர்! -பொறிவைத்த வருமானவரித்துறை! விரிவான ரிப்போர்ட்!

தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்காக, டாக்டர் கீதாலட்சுமி ஐந்துகோடி ரூபாய் கொடுத்து முயற்சித்துக்கொண்டிருக்கிறார் என்று ‘சொன்னா நம்பமாட்டீங்க’ பகுதியில் கடந்த 2013 செப்டம்பர் மாதம் நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந்தோம். அதே, டாக்டர் கீதாலட்சுமிதான் தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி இயக்குனருமாகி, தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமாகி  ‘வசூல்ராணி’ படத்தைப்பெற்று வருமானவரி ரெய்டிலும் சிக்கியிருக்கிறார். யார் இந்த கீதா லட்சுமி?
;சென்னை மருத்துவக்கல்லூரியில் மைக்ரோபயாலஜி பேராசிரியராக  பணியாற்றிக்கொ ண்டிருக்கும்போதே வைஸ் பிரின்ஸ்பல் பதவியை பிடிக்கிறார். பிறகு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஸ்பெஷல் ஆஃபிஸராக போனவர், சென்னை ஸ்டேன்லி மருத்துவனையின் டீனாக பொறுப்பேற்றார். இவரைவிட சீனியர்களாக ஐந்து டீன்கள் இருந்தும் அவர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குனருக்கான சம்பளத்தைக்கொடுத்துவிட்டு… சிறப்பு அரசாணையின் மூலம் மிக மிக ஜூனியரான டாக்டர் கீதாலட்சுமி மருத்துவக்கல்வி இயக்குனர் ஆகிறார். 


அப்போது, சீனியர் பட்டியலில் இருந்த ஃபொரன்ஸிக் டாக்டர் வள்ளிநாயகம் இவரது பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும்கூட   “கோப்புகளை காணவில்லை” என்று கீதாலட்சுமிக்கு சாதகமாக, நீதிமன்றத்திலேயே  பொய்ச்சொல்லி ஃபைலை க்ளோஸ் பண்ணிவிட்டது சுகாதாரத்துறை. டி.எம்.இ.யாக இருக்கும்போதே, ‘சி’க்களை வசூல் செய்யும் ராணியாக திகழ்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் டாக்டர் கீதா லட்சுமி.  இப்படி, குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வரக்காரணமானவர் ஜெயலலிதாவின் செகரெட்டரியாகவும் தலைமைச்செயலாளராகவும் இருந்த ராமமோகன் ராவ் ஐ.ஏ.எஸ்.தான்.  
இன்னும், சொல்லப்போனால் டாக்டர் கீதாலட்சுமி, ராமமோகன் ராவின் பினாமி என்றே மருத்துவ வட்டாரத்தில் இன்னொரு பெயர் உள்ளது.ஒரு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வாங்கவேண்டுமென்றால் முதலில் அத்தியாவசியச் சான்றிதழை (Essentiality Certificate) வாங்கிவிடுகிறார்கள். டி.எம்.இ. தலைமையில் ஆய்வு செய்து சுகாதாரத்துறை செயலாளர் கொடுத்துவிடுவார். பிறகுதான், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கான(Consent of Affiliation) சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. 

இரண்டையும் வைத்து எம்.சி.ஐ. எனப்படும் இந்திய மருத்துவக்கழகத்துக்கு(Medical Council of India) மருத்துவக்கல்லூரியின் உரிமையாளர் விண்ணப்பிப்பார். ஐந்து வருடங்களுக்குப்பிறகு ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து அப்ரூவல் வழங்குவார்கள். ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைகழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான டீம் ஆய்வு என்கிற பெயரில் ஒவ்வொரு வருடமும் விசிட் அடித்து கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது.

 உண்மையிலேயே கல்லூரியின் கட்டமைப்புவசதி சரியாக இருக்கவேண்டும் என்றும் மாணவர்கள் மீது அக்கறையும் இருந்தால் சர்ப்ரைஸ் விசிட் அடிக்கவேண்டிதானே? முதல் முதலில் டி.எம்.இ. தலைமையிலான டீமே வில்லங்கச்சான்றிதழை ஆய்வு செய்துதான் தடையில்லா சான்றிதழ் கொடுக்கிறது. 

ஆனால், டாக்டர் கீதாலட்சுமி துணைவேந்தரான பிறகு பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் கல்லூரிகளுக்கூட வில்லங்கச்சான்றிதழ் வேண்டும் என்று கேட்டு அதிலும் கல்லாக் கட்டிக்கொண்டிருந்தார். 

மருத்துவக்கல்லூரி நூலகங்களுக்கு மருத்துவப்புத்தகங்கள், ஜர்னல்கள் எல்லாம் பிரிண்டட் காப்பியாக இருக்கவேண்டும் என்பது எம்.சி.ஐ. ரூல்ஸ். ஆனால், ஒரு கல்லூரிக்கு ஐந்து லட்ச ரூபாயை வசூலித்துக்கொண்டு தனியார் ஏஜன்சியிடம் கூட்டுசேர்ந்துகொண்டு ஆன்லைனில் படித்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டார் கீதாலட்சுமி. தேர்வுகளிலும் பணம் கொடுப்பவர்களை பாஸ் செய்யவைத்த முறைகேடுகளும் நடந்துள்ளது.

    கல்லூரி அனுமதிக்கு 30 லட்ச ரூபாய் வசூல்!

ஒரு கல்லூரிக்கு இணைப்புச்சான்றிதழ் வழங்க 20 லட்சத்திலிருந்து சுமார் 30 லட்ச ரூபாய் வசூலித்துவிடுவார். அதுவும்,  ஆழ்வார் பேட்டையில் சேகர் ரெட்டியிடம்தான் பணத்தை கொடுக்கவேண்டும். அவரிடமிருந்து, துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு தகவல் போனதும் அனுமதி கிடைத்துவிடும். சென்னை பெருவெள்ளத்தின்போது கோவை கற்பகா விநாயகல்லூரிக்கு Continuation of affiliation  வழங்க சேகர் ரெட்டியிடன் 20 லட்சரூபாய் கொடுத்தபிறகுதான் ஓ.கே. சொல்லியிருக்கிறார் கீதாலட்சுமி. இதைவிடக்கொடுமை, 5,000 போர்வைகளையும் வாங்கித்தரச்சொல்லி அதை அமைச்சர் ஜெயக்குமார் மூலம் இவர்களே சொந்தக்காசில் வாங்கியதுபோல விநியோகித்திருக்கிறார்கள்.

       சைரன் வைத்த சொகுசு கார்!

அமைச்சர்கள்கூட வாய்பிளக்கும் அளவுக்கு விலையுயர்ந்த  ‘ஃபார்ச்சுனர்’ சொகுசுக்காரை சமீபத்தில் அரசு செலவில் வாங்கியிருக்கிறார் கீதா லட்சுமி. இதன், விலைமட்டுமே சுமார் 40 லட்ச ரூபாய் என்கிறார்கள். இதை, பல்கலைக்கழகத்தின் அக்கவுண்ட்ஸ் ஆஃபிஸர் கேட்க, அவர் பதவி அதிகாரத்தால் நசுக்கப்பட்டிருக்கிறார். இதைவிடக்கொடுமை, இவருக்கு சைரன் வைத்துக்கொள்ள அனுமதியே இல்லை. ஆனால், சைரன் வைத்தக்காரில் வலம் வந்திருக்கிறார். மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமல்ல, மருத்துவத்துணைப்படிப்புகளான பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூஷன்கள், நர்சிங் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள் என எதற்கெடுத்தாலும் வசூல்தான்.

 விசாரணை கமிஷனில் தப்பவைக்கப்பட்ட வசூல் ராணி!

எம்.எம்.சி.யில் வைஸ் பிரின்ஸ்பலாக இருக்கும்போது வெளிநாட்டில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு ட்ரான்ஸ்கிரிப்ட் ஃபார்மை வழங்கவே ஒவ்வொரு மாணவரிடமும் 1 லட்ச ரூபாய் வசூல் செய்தவர். மேலும், இவர் பி.ஹெச்.டி. செய்யும்போது முறைகேடு செய்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக டாக்டர் எஸ்.கே. ராஜன் தலைமையிலான விசாரணை கமிஷனை அமைத்து விசாரித்தது. இதில், அவர் மோசடி செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணை என்ன ஆனது என்று இன்னமும் வெளியில் சொல்லப்படவில்லை. இதேபோல், ஐ.ஏ.எஸ். தலைமையிலான விசாரணையும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. பல்கலைக்கழகத்தின் சி.சி.சி.டி. கேமராக்கள் பொறுத்துவதில்கூட ஊழல்தான். மாணவர்கள் ஒரு விலையுயர்ந்த ஃபோன் வைத்திருந்தால்கூட,  “வாவ் சூப்பரா இருக்கே… அதை எனக்கு கொடுத்திடேன்” என்கிற அளவுக்கு பேராசை பிடித்த துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீட்டில்தான் வருமான வரி சோதனை நடந்திருக்கிறது. இவரை, நன்றாக விசாரித்தாலே ராமமோகன் ராவ் ஐ.ஏ.எஸ்ஸின் ஊழல்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரும்”என்று நம்மை கிறு கிறுக்க வைக்கிறார்கள் மருத்துவத்துறையிலுள்ளவர்கள்.

      மாநில அரசை பயமுறுத்தவோ பணியவைக்கவோ… ரெய்டுகள் நடத்தினாலும் ஊழலுக்கு தொடர்பில்லாதவர்களை மிரட்டிவிடமுடியாது என்பதற்கு வசுல் ராணி துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமியும் ஓர் உதாரணம். உயிர்காக்கும் துறையில் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ஊழலை புரிந்திருக்கிறார் டாக்டர் கீதாலட்சுமி. ஆனால், அப்பேற்பட்டவருக்குத்தான் சமீபத்தில் உயரிய விருதான பி.சி.ராய் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறார்கள். மேலும், சிறந்த டாக்டருக்கான விருதை தமிழ்நாடு மருத்துவக்கவுன்சிலின் தலைவர் செந்தில் கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கிறார்.

                    -மனோசெளந்தர்  .. நக்கீரன்

கருத்துகள் இல்லை: