சனி, 15 ஏப்ரல், 2017

நானோ கார்களால் டாடாவுக்கு ரூ.6,400 கோடி இழப்பு ... குஜராத்தில் மோடி அரசு வழங்கிய மக்கள் பணம் கோவிந்தா!

அழிவுப் பாதையில் நானோ கார்கள்!கடந்த 2009ஆம் ஆண்டு, டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் உலகின் மிகவும் குறைந்த விலைகொண்ட காராக ’நானோ’ அறிமுகப்படுத்தப்பட்டது. வெறும் 1 லட்ச ரூபாய் மதிப்பில் வெளியான இந்தக் கார்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை இக்கார்கள் பெற்றிருந்தாலும், பின்னாட்களில் பெரும் பின்னடைவையே சந்தித்தது. குறிப்பாக, கடந்த 2012ஆம் நிதியாண்டில் 6.5 லட்சம் கார்களும், 2013ஆம் நிதியாண்டில் 7 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் அதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நானோ கார்களின் விற்பனை சரிவை நோக்கிப் பயணித்தது. சரிவிலிருந்து மீள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ கார்களில் சில மாற்றங்களை மேற்கொண்டது. இருப்பினும், அது மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டது. இந்நிலையில், டாடா நிறுவனம் நானோ கார்களின் உற்பத்தியை நிறுத்த முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா மோட்டார்ஸ் தனது நிறுவனத்தின் வாகன எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது. ஆனால் நானோ கார்களின் எதிர்காலம் குறித்து டாடா மோட்டார்ஸ் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து, நானோ கார்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாகி கூறுகையில், ‘நானோ கார்கள் குறித்து டாடா மோட்டார்ஸ் எந்த முடிவையும் எடுப்பதில்லை. நானோ கார்களுக்குத் தேவையான உதிரி பாகங்களுக்கான ஆர்டர்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வருவதில்லை’ என்றார்.
மக்களிடம் வரவேற்பு இல்லாததாலும், நானோ கார்களின் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனமே உரிய முயற்சியை எடுக்காததாலும், கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 174 நானோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அழிவின் விளிம்பில் சென்றுகொண்டிருக்கும் நானோ கார்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்தாமல் மெல்லமெல்ல சந்தையிலிருந்து அப்புறப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
முன்னதாக, டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிரஸ் மிஸ்ட்ரி, நானோ கார்களால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ.6,400 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: