வியாழன், 13 ஏப்ரல், 2017

BBC :அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு .. தமிழக விவசாயிகளின் பிரச்சனை குறித்து...

தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தில்லியில் விவசாயிகள் போராடி வருவதை சுட்டிக்காட்டியிருக்கும் திமுக, இந்தப் பிரச்சனையை மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லையென குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் மாநிலம் முழுவதும் இந்தப் பிரச்சனைக்காக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து, மத்திய - மாநில அரசுகளிடம் கோரிக்கைகளை எடுத்துச்செல்ல அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி கூட்டவுள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக காவிரி பிரச்சனைக்காக திமுக இப்படியான ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியபோது, மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள், பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அதனைப் புறக்கணித்தன.


கருத்துகள் இல்லை: