வெள்ளி, 14 ஏப்ரல், 2017

2000 மேற்பட்ட சி பி எஸ் இ பள்ளிகளுக்கு விளக்கம் கோரி கடிதம்

புதுடில்லி: தங்களை பற்றிய தகவல்களை வழங்காத, 2,000க்கும் அதிகமான பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ., என்கிற மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ், நாடு முழுவதும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகள், தங்கள் வளாகத்தில் உள்ள குடிநீர் வசதிகள் உட்பட, அனைத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. அத்துடன், வை - பை வசதி, ஒவ்வொரு வகுப்புக்கான மாதாந்திர கட்டணம், மாணவர் சேர்க்கை, முடிவுகள், கையிருப்பு நிதி மற்றும் வரவு - செலவு அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது.

இந்த விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின் இணையதளத்திலும், பள்ளியின் இணையதளத்திலும் கடந்த ஆண்டு அக்டோபருக்குள் வெளியிட வேண்டும் என கூறியிருந்தது.
ஆனால், 2,000க்கும் அதிகமான பள்ளிகள், இந்த விபரங்களை வெளியிடவில்லை. இதையடுத்து, இந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, சி.பி.எஸ்.இ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஒரு மாதத்துக்குள், இந்த விபரங்களை இணையதளங்களில் வெளியிடாவிட்டால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கட்டணம் குறித்து, சி.பி.எஸ்.இ., பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, மாணவர்களிடம், பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: