வியாழன், 13 ஏப்ரல், 2017

கத்திப்பாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதவரவாக போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கெளதமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வறட்சி காரணமாக 350 விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு போதிய நிவாரணமும் அரசு வழங்கவில்லை. எனவே வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 31 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இன்று ஏப்ரல் 13ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கெளதமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கத்திப்பாரா பாலத்தின் இருபுறங்களிலும் இரும்புச் சங்கிலியைக் கட்டி காலை 9 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்காக கத்திப்பாராவில் போராட்டம் நடத்தியவர்கள்  ...கத்திப்பாரா மேம்பாலம் வழியாகத்தான் சென்னையில் பல முக்கிய இடங்களுக்குச் செல்ல முடியும் என்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து செல்லக்கூடிய அனைத்துப் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகம், கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். விவசாயிகள் நிர்வாணமாக நின்றபோதும் அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்காக நாங்கள் இறந்தோம் என்றாவது வரலாறு சொல்லட்டும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கெளதமன் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்டுவரும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. எனவே, இயக்குநர் கெளதமன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சுத்தியலால், சங்கிலியில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: