தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலவிதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் இதயம் உடைந்து நொறுங்கிய நிலையிலும் தொடர்ந்து போராடத் தீர்மானித்துள்ளார்கள். ‘குடியரசுத்தலைவர்கூட எங்களைச் சந்திக்கும்போது, பிரதமர் மட்டும் எங்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? நாங்கள் தீண்டத்தகாதவர்களா? ஏன் எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றனர்?’ என்று போராட்டக் குழுவினர் கேட்கின்றனர். ‘வீணாக ஐந்து முறை பிரதமருக்கு மனு கொடுத்துவிட்டோம்’ என்று ஒரு விவசாயி கூறுகிறார்.
டெல்லியில் உயர்ந்து வரும் வெப்ப நிலையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டத்துக்குத் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்றைய முன்தினம் (13.04.2017) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் ஆதரவு கொடுத்து போராட்டக்காரர்களுக்கு 80 தண்ணீர் பாட்டில்கள், 50 டஜன் வாழைப்பழங்கள், 30 கிலோ ஆப்பிள்கள், 75 கிலோ ஆரஞ்சு பழங்கள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர். மேலும் மேற்கொண்டு பண உதவியும் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், போராட்டக் குழுவினர் பண உதவி வேண்டாம் என்று மறுத்து விட்டனர். போராட்டக் குழுவில் உள்ள ஒரு விவசாயி, தான் ஒரு பரம்பரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் எங்களை மத்திய அரசு அவமதித்துவிட்டது என்றும் கூறினார்.
தமிழக விவசாயிகள் முக்கியமாக நெல், தக்காளி, சோளம், கரும்பு ஆகியவற்றையே அதிகம் விளைவிக்கின்றனர். வறட்சி காரணமாக ரூ.40,000 கோடி கடனை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விளைநில பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும்; நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது.
இதுகுறித்து தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறியதாவது, “இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தைக் காட்டிலும் தமிழகத்தில் வறட்சி கூடுதலாக உள்ளது. விளைநில பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுத்தால் கடன் தொகையை ரத்து செய்ய கேட்க மாட்டோம்.
தமிழகம் 140 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இத்தகைய வறட்சியைக் கண்டது. அதற்குப் பின் இப்போதுதான் இவ்வளவு பெரும் வறட்சியைக் கண்டுள்ளது. 100-க்கு 98 கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது. உத்தரப்பிரதேசத்திலாவது கங்கை, யமுனை ஆகிய இரண்டு நதிகளில் தண்ணீர் பாய்கின்றன. ஆனால் தமிழகத்தில் பாய்கின்ற காவிரியில் இருந்து எங்கள் பகுதிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.
கடந்த ஆண்டு 100 ஏக்கர் விளைச்சல் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 28 ஏக்கர் மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. மாநில அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7,000 கோடி கடன் அளிப்பதாகக் கூறியுள்ளது.
விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. இந்தியா விவசாய நாடு என்றெல்லாம் கூறுகிறோம். பிறகு ஏன் மத்திய அரசு எங்கள் குரலை கேட்டு எங்களுக்கு உதவ மறுக்கிறது?” என்று கவலையுடனும், கண்ணீருடனும் கேட்கிறார் போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணு./minnambalam.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக