ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஈழத்தமிழருக்காக போராடுவதாகக் கூறும் எந்தவொரு தமிழகத் தலைவரிடமும் துளியளவும் நேர்மை கிடையாது

http://salasalappu.com/
புலிகளின் ஆயுதப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை : பிள்ளைகளுக்காக உயிர் வாழும் முன்னாள் பெண் போராளி ஆவேசமான பேட்டி: எப்போது உங்களது அடுத்த போராட்டம் என்று என்னிடம் யாராவது கேட்டால் அவர்களை விளக்குமாறால் அடிப்பேன். உள்ளூர் தமிழகக் கட்சிகள் தமிழருக்காக அல்லாது தமக் காகவே அரசியல் செய்வதாகவும் சாடுகிறார் வித்தியாராணி.
இந்தியா, தமிழ் நாட்டிலிருந்து கொண்டு இலங்கைத் தமிழரின் விடுதலை வேண்டி ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தமிழக தமிழ்த் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வு துளியளவும் கிடையாது. இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் ஆயுதப் போராட்டத்தில் தோற்றுவிட்டோம் என்கிற உண்மையான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.அதானால்தான் இன்றும் இனி ஓர் ஈழப் போர் வெடிக்கும், பிரபாகரன் திரும்பி வருவார் என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போட்டுத் தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எமது போராட்டம் வேரோடும் வேரடி மண்ணேடாடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்தவேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, எப்போது உங்கள் அடுத்த போராட்டம் என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் என்று முன்னாள் பெண் போராளியான வித்தியாராணி என்பவர் இந்திய சஞ்சிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். வித்யாராணி 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி.
ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ஜெயசிக்குறு எதிர் சமர் என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன சோதியா படையணியின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யாராணி கால வெள்ளச் சுழலில் இன்று தானொரு பாலியல் தொழிலாளியாக்கப்பட்டுள்ளதாக அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டுத் தலைவர்களே உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன். எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும். உங்குளுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும். ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்கமாட்டீர்கள்!
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்……..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம்.
பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு பால் பால் என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை.
ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?
எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன். எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னை தன் தேவைக்கு அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் இப்படி ஆனேன்.
யாரெல்லாம் உங்கள் வாடிக்கையாளர்?
பெரும்பாலும் வயதானவர்கள். யாழ்ப்பாணத்திற்குச் சுற்றுலாவரும் சிலரும் என்னிடம் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?
வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் தமிழ் மக்களுக்காக அல்ல. தமக்காகவே அரசியல் செய்கின்றனர் என்றும் வித்தியாராணி என்ற அந்த முன்னாள் போராளி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: