வெள்ளி, 9 நவம்பர், 2012

உச்ச நீதிமன்றம்: உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு ஏன் தர முடியாது?

புதுடெல்லி : டெல்லி அரசு ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு ஏன் தர முடியாது? என்று மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தின் மின்சார தேவை 12,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், 8,000 மெகாவாட் மின்சாரமே கிடைப்பதால் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை டெல்லி அரசு 1,721 மெகாவாட் மின்சாரத்தை தேவையில்லை என்று மத்திய மின்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்க உள்ளது.


இந்த மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால், மின்பாதை தொடர் அமைப்பில் உள்ள நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு மின்சாரத்தை அளிக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு இந்த மின்சாரத்தை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ம் தேதி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அதில், ‘வெளி மாநிலங்களில் இருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசின் நிறுவனமான மின்சக்தி தொடர் அமைப்பு, மின் தொடர் கட்டமைப்பின் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற இயலவில்லை. தமிழகத்துக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கான உள்கட்டமைப்பு வசதியை அளிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கவும் நெருக்கடி இல்லாத மின்பாதை அமைப்பை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி அரசு ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கவும் மின் வழித்தடத்தை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு வக்கீல் முகுல் ரோகித் வாதிட்டார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, ‘‘உபரி மின்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் திறன் மாநில மின்தொகுப்புக்கு இல்லை. எனவே, உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்குவது சாத்தியமல்ல’’ என்றார்.

இதையடுத்து, உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு ஏன் தர முடியாது? என்று அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மின்சார ஆணையம் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: