நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் ராஜா (23). இவரும் லதாவும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி காதலர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். மறுநாள் சேலம் டிஐஜி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். பின்னர் லதா, கணவர் ராஜாவின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் லதாவின் பெற்றோர், மகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ராஜா தரப்பினரிடம் கேட்டு வந்தனர்.
இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. அப்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு அளிக்கும்படி எஸ்.பி.யிடம் ராஜா மனு அளித்தார். அதன் பேரில் நேற்று காலை 30க்கும் அதிகமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் லதாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் நாகராஜன் சடலத்தை தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஊர் எல்லையில் மரங்களை வெட்டிப் போட்டு சாலையில் தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. நாகராஜனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால், மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆம்புலன்சை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. மறியல் காரணமாக செல்லங்கொட்டாய் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. முன்பாகவே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் நடந்தே சென்றனர். இதற்கிடையே, செல்லங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 1500 பேர் நத்தம் காலனிக்கு திரண்டு சென்றனர்.
இதை பார்த்ததும் காலனியில் இருந்த ஆண்கள் அனைவரும் உயிருக்கு பயந்து தப்பியோடி விட்டனர். ஆத்திரமடைந்த கும்பல், நத்தம்காலனியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து சூறையாடினர். பொருட்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். 119 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. துணிகள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்தும் சாம்பல் ஆனது. மேலும் 4 கார், 50க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வழியில் வந்தவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கியுள்ளனர். குழந்தைகளையும் அடித்து உதைத்துள்ளனர். ஆத்திரம் அடங்காத கலவரக்காரர்கள், நத்தம் காலனிக்கு அருகில் உள்ள அண்ணாநகரில் வசிக்கும் ராஜாவின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளையும் சூறையாடி 29 வீடுகளுக்கு தீ வைத்தனர்.
கொண்டம்பட்டி கிராமத்தில் 30 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. கலவரத்தையடுத்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இரவு முழுவதும் கிராமத்தில் பதற்றம் நிலவியது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வண்டிகளையும், செல்லங்கொட்டாய் மக்கள் உள்ளே விடவில்லை. சேலம் டிஐஜி சஞ்சய்குமார் தலைமையில் 4 எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரக்காரர்கள் வைத்த தீயில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால், மாற்று உடை இன்றியும் உணவு சமைக்க முடியாமலும் 3 கிராம மக்கள் தவித்தனர். தர்மபுரி கலெக்டர் லில்லி, டிஆர்ஓ ராமர், தாசில்தார் மணி மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நத்தம்காலனி உள்பட 3 கிராமங்களை இன்று காலை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து கலெக்டர் ஆறுதல் கூறினார். அப்போது பெண்கள் அவரது காலில் விழுந்து கதறி அழுதனர். அவர்களிடம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிரான்ஸ்பார்மர் உடைப்பு
நத்தம் காலனிக்குள் புகுந்த கும்பல், முதலில் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்தது. இதனால் காலனி உள்பட சுற்றுப்புற பகுதிகள் மாலை 5 மணி முதல் இருளில் மூழ்கின. இன்று காலையில்தான் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் வினியோகத்தை சரி செய்தனர். ஆனால் நத்தம் காலனிக்கு இன்னும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. காலனியில் உள்ள நூலகம், அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் கலவரக்காரர்கள் சூறையாடினர்.
மாயமான 4 சிறுவர்கள் மீட்பு
கலவரக்காரர்கள் காலனிக்குள் புகுந்ததால் ஆண்கள் உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடிவிட்டனர். வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்களையும் கலவரக்காரர்கள் தாக்கி அடித்து உதைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த நேதாஜி (6), அகல்யா (8), சதாசிவம் (15), தேன்மொழி (9) ஆகிய 4 பேரை காணவில்லை. கலவரக்காரர்கள் அவர்களை அடித்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டதால் இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் உயிருக்கு பயந்து பக்கத்து கிராமத்தில் தஞ்சம் அடைந்திருந்த 4 பேரும் இன்று காலை பத்திரமாக வீடு திரும்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக