புதுடில்லி: ""ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும்,'' என, ரயில்வே
அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறினார். டில்லியில் நேற்று நிருபர்களிடம்
பேசிய அவர், மேலும் கூறியதாவது: ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது
எங்கள் நோக்கமல்ல; ஆனால், பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணம் மற்றும் சிறந்த
சேவையை வழங்குவதே எங்களது இலக்கு. தவிர்க்க முடியாத சில காரணங்களால்,
ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை
உயர்த்தா விட்டால், ரயில்வே துறைக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும். மக்கள்
என்னை சந்திக்கும்போதெல்லாம், கட்டணத்தை உயர்த்துவதில் ஆட்சேபனையில்லை,
அதே நேரத்தில், சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்றே கேட்கின்றனர். ரயில்
கட்டணத்தை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு,
பவன்குமார் பன்சால் கூறினார். சமீபத்தில், மத்திய அமைச்சரவை மாற்றப்பட்ட
பின், ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே, "தேவைப்படும் பட்சத்தில்,
ரயில் கட்டணம் உயர்த்தப்படும்' என, பவன்குமார் பன்சால் கூறினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக