சனி, 10 நவம்பர், 2012

மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க கோரிக்கை

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பெண் கல்வி மற்றும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர் 15 வயது சிறுமி மலாலா. பெண் கல்வி குறித்து தைரியமாக கருத்து தெரிவித்த அவரை மிங்கோரா நகரில் தலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய அவர், இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது ஓரளவு தேறி வருகிறார்.


மலாலா மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. பெண்கள் உரிமையை நசுக்கும் தலிபான்களின் முயற்சியை எதிர்க்கும் சக்திவாய்ந்த அடையாளமாக மலாலா உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில், மலாலாவின் துணிச்சல் மிக்க நடவடிக்கையை பாராட்டி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இன்று ஏராளமானோர் பேரணியாகச் சென்று, பிரதமர் டேபிட் கேமரூன் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்காக சுமார் 30,000 பேர் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தனர்.

இதேபோல் கனடா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நோபல் கமிட்டி விதிகளின்படி, அரசு மற்றும் தேசிய சபைகளின் உறுப்பினர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் தான் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய முடியும்

கருத்துகள் இல்லை: