செவ்வாய், 6 நவம்பர், 2012

நாட்டின் பல்கலை.கல்விமுறை மோசம்: சசி தரூர் கடும் எதிர்ப்பு

புதுடில்லி: ""நமது பல்கலைக்கழக கல்வி திட்டத்தால், சிறந்த பட்டதாரிகள் உருவாகவில்லை. படித்தும் வேலையில்லாதவர்கள் அதிகரித்துள்ளதால், தீவிரவாதிகள் மற்றும் நக்சல்கள் வலையில் அவர்கள் வீழ வாய்ப்பு உள்ளது,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், சசி தரூர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த, உயர்கல்வி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர், சசி தரூர் பேசியதாவது:
நம் நாட்டில், 621 பல்கலைக்கழகங்கள், 33 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. உலக அளவில், இரண்டாவது பெரிய கல்வி நாடாக இந்தியா இருந்தபோதிலும், கல்வி சிறப்பாக இல்லை; கல்வி கற்றவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.இதற்கு காரணம், நாம் பின்பற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டம். நாம் முன்னர் பின்பற்றிய, தேசிய கல்விக் கொள்கை, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் பின்தங்கியுள்ளது. சீனாவைப் பாருங்கள்...மத்திய கிழக்கு நாடுகளைப் பாருங்கள்... அவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர்.
ஆனால், நாம் இன்னும் பின்தங்கியே உள்ளோம்.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க விருப்பம் தெரிவித்தபோது, மறுத்து விட்டோம். இந்தியாவின் தேவைக்கு ஏற்ப, இந்திய நிறுவனங்களுக்கு தேவையான வகையில், பட்டதாரிகள் உருவாக்கப்படுவதில்லை.நம் நாட்டில் கல்வி சிறப்பாக இருந்தால், வெளிநாடு போய் படிக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே, நாட்டின் கல்வி முறையை சீர்படுத்த, நாராயணமூர்த்தி மற்றும் ககோத்கர் கமிட்டி அறிக்கை பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.
படித்தும், சரியான வேலை கிடைக்காததால், ஏராளமான இளைஞர்கள், தீவிரவாதிகள் மற்றும் நக்சல்கள் மாயவலையில் வீழும் அவலம் ஏற்படுகிறது. அது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு, சசி தரூர் பேசினார்.இவர், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், படித்ததெல்லாம், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தான்.
துவக்க பள்ளிப்படிப்பை, ஏற்காடு, மான்ட்போர்டு, மும்பை, சாம்பியன் ஸ்கூல் பள்ளிகளிலும், மேல்நிலை படிப்பை, கோல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியிலும், பட்டப்படிப்பை, டில்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலும், எம்.ஏ., படிப்பை, அமெரிக்காவின், டுப்ட்ஸ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: