செவ்வாய், 6 நவம்பர், 2012

தே.மு.தி.க.வை உடைக்க அ.தி.மு.க. அனுப்பிய உளவாளி, இன்னும் விஜயகாந்த் அருகேதான் இருக்கிறார்!

Viruvirupu
கேப்டனின் தே.மு.தி.க. மிகவும் பேட்-ஷேப்பில் இருப்பதை, அக் கட்சியின் முக்கியஸ்தர்களே ஒப்புக்கொள்கிறார்கள். “இருந்து பாருங்கள், என்ன நடக்கப் போகிறது என்பதை” என்று மர்மச் சிரிப்புடன் கூறுகிறார்கள், அ.தி.மு.க. உயர் மட்டத்துடன் நெருக்கமானவர்கள்.
நிஜமாக என்னதான் நடக்கிறது என்று இரு கட்சிகளையும் சேர்ந்த சிலரை விசாரித்தோம்.
“தே.மு.தி.க.-வில் இருந்து நாலு பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்கள் அல்லவா? எமது முக்கிய ஆட்டக்காரர்கள் அவர்கள் அல்ல.
தே.மு.தி.க.வை உடைக்கும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்ட முக்கிய புள்ளி, இன்னமும் தே.மு.தி.க.-வுக்கு உள்ளேதான் இருக்கிறார். அவர் அனுப்பி வைத்த முதல் செட் ஆட்கள்தான், அந்த நாலு பேரும்” என்று எம்மிடம் கூறி அதிர வைத்தார், அ.தி.மு.க. முன்னணி தலைவர் ஒருவர்.
அடுத்த செட் ஆட்களை இந்தப் பக்கம் அனுப்பும் முயற்சிகள் மும்மரமாக நடக்கின்றன. மொத்தம் 15 பேரை தே.மு.தி.க.-வில் இருந்து இழுக்கும் ப்ராஜெக்ட் இது. 4 பேர் வந்துவிட்டார்கள். 9 பேர் தயாராக உள்ளார்கள். ஒருவருடன் பேச்சுக்கள் நடக்கின்றன” என்றார் எமக்கு தகவல் கொடுப்பவர்.
இவர் கூறும் எண்ணிக்கையை கூட்டினால், கணக்கு 14 அல்லவா வருகிறது?
எமது சந்தேகத்தை கேட்டதும் கபகபவென்று சிரித்தார் அவர். “15-வது நபர்தான், தே.மு.தி.க.-வுக்குள் உள்ள எங்களது ஆள். இந்த 14 பேரும் இந்தப் பக்கம் வந்தபின் 15-வது ஆளாக அவரே வந்து சேர்வார்”
நாம் வேறு சோர்ஸ் ஒன்றில் விசாரித்தபோது, இந்தக் கதை உண்மைதான் என்று தெரிகிறது.தே.மு.தி.க.வுக்குள் அ.தி.மு.க. உளவாளியாக இந்த நபர் இருக்கிறார். அதுவும், கேப்டன் அருகேயே இருக்கிறார்!
எமக்கு கிடைத்த தகவல்களின்படி, இது பணத்தை காட்டி நடத்தும் ‘உடைப்பு’ அல்ல. தே.மு.தி.க.-வில் இருந்து வெளியே செல்பவர்களுக்கு வேறு சில அரசியல் லாபங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பெரிய தமாஷ், கேப்டன் கட்சிக்குள் இருந்து, ‘ஹாய், ஹூய்’ என்று குரல் கொடுக்கும் எம்.எல்.ஏ. ஒருவரும், இவர்களது விஸ்டில் உள்ளார். ஏற்கனவே போய் முதல்வரை சந்தித்த நால்வர் அணியில் அவரும் போவதாக இருந்தது. ஆனால், அந்த நால்வரில் ஒருவருக்கும், இவருக்கும் தொழில் ரீதியான முறுகல் ஒன்று உண்டு. அதனால், அந்த பேட்சில் இவர் போக விரும்பவில்லை.
தே.மு.தி.க.-வில் இருந்து வெளியே வரும் ஆட்களை, தனியே ஒரு குழுவாக (போட்டிக் கட்சி?) இயங்க விடுவதே அம்மாவின் திட்டம் என்று தெரியவருகிறது. அப்படியொரு குழு இயங்கும்போது, அதற்கு ‘நன்கு அறியப்பட்ட’ ஒருவர் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்பது அம்மாவின் அபிப்பிராயமாம்.
அப்படி ஒருவர், ‘தலைவர் தம்பி’யை கைவிட்டு இந்தப் பக்கம் வந்தால், அரசியல் சுவாரசியமாகத்தான் இருக்கும்!

1 கருத்து:

வெற்றித்திருமகன் சொன்னது…

அடப்பாவிகளா என்னவெல்லாம் பண்றாங்கய்யா..