செவ்வாய், 6 நவம்பர், 2012

புதிய தொழில் ஒப்பந்தங்கள் தென்மாவட்டங்களுக்கு கிடையாது

தென் தமிழகம் வளர கூடாது என்பதற்காகத்தானே சேது சமுத்ர திட்டத்திற்கு கடவுளின் பெயரால் எதிர்ப்பு?
தமிழகத்தில், 12 முன்னணி நிறுவனங்கள், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய்முதலீட்டில், தொழில் துவங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நேற்று கையெழுத்தாகின.
வழக்கம் போல், புதிய தொழிற்சாலை துவங்குவதற்கான திட்டங்களில் பெரும்பான்மையானவை, சென்னையை சுற்றியே அமைகின்றன. புதிய தொழில் முதலீடுகள், தென்மாவட்டங்களுக்கு கிடைக்காமல், இம்முறையும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில், சென்னையை சுற்றி, பல ஆயிரம் கோடி ரூபாய்முதலீட்டில், கார், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட, பல்வேறு தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. புறக்கணிப்புஇதன் காரணமாக, மாநிலத்தின் இதர பகுதிகளில், தொழில் வளம் பரவலாகாத நிலை தொடர்கிறது.குறிப்பாக, தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த, அரசின் சார்பில், அக்கறை காட்டாத நிலை உள்ளது.
தூத்துக்குடியில் மிகப் பெரிய துறைமுகம், வெளி மாநிலங்களுக்குச் செல்ல ரயில் வசதி, மதுரையில் சர்வதேச விமான நிலையம் என பல்வேறு வசதிகள் இருந்தும், தென் மாவட்டங்கள் தொழில் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையவில்லை. சிவகங்கை கிராபைட் தொழிற்சாலை, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட சில திட்டங்களாலும், குறிப்பிடத்தக்க அளவு பலன் கிடைக்கவில்லை. தென் மாவட்டங்களில் விவசாயமும் பொய்த்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள், பிழைப்புக்காக சென்னையை தேடி வருவது அதிகரித்துள்ளது.
தென் மாவட்ட ஜாதி கலவரங்கள் குறித்து ஆராய, 1997ல், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான குழு, அரசிடம்தாக்கல் செய்த அறிக்கையில், "வேலை வாய்ப்பு இல்லாதது தான் ஜாதி கலவரங்களுக்கு காரணம்; எனவே, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தொழில்களை துவங்க வேண்டும்' என, அரசுக்கு பரிந்துரைத்தது.
ஆனால், அடுத்தடுத்து அமைந்த அரசுகள், இந்த பரிந்துரையை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை. நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகளும், சென்னையை சுற்றியே அமைய உள்ளன; தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், நேற்று கையெழுத்தான, 12 தொழிற்சாலைகளில், ஐந்து தொழிற்சாலைகள், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஒரு தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டத்திலும் அமையவுள்ளது.

கோரிக்கை


சென்னை எண்ணூரில் ஒரு தொழிற்சாலையும், கோவையில் மூன்று தொழிற்சாலைகளும், கிருஷ்ணகிரியில் ஒரு தொழிற்சாலையும் அமையவுள்ளது. "ஆம்வே' நிறுவனத்தின் தொழிற்சாலை மட்டும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், 300 கோடிரூபாய்மதிப்பீட்டில் அமையவுள்ளது. இதன் மூலம், 475 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. மொத்தம், 1.36 லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் திட்டங்களில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த, சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கவுள்ளது.

இந்த விழாவில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, "2012ம் ஆண்டுக்கான, தமிழக அரசின் தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.இதிலாவது, தென் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், அங்கு தொழில் துவங்குபவர்களுக்கு, முன்னுரிமை அளித்து, சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- நமது நிருபர்-

கருத்துகள் இல்லை: