செவ்வாய், 6 நவம்பர், 2012

சட்டம் ஒழுங்கு யார் கையில் அகப்பட்டு கெட்டுப் போயிருக்கிறது பாருங்கள்...


சென்னை: முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம் இவற்றின் காரணமாகத்தான் தேவர் குருபூஜை சமயத்தில் அத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொலை, கொள்ளைகள் நாளும், நாளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன இந்த ஆட்சியில் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பதாகத் தான் செய்திகள் வந்தன. ஆனால் 30ம் தேதி காலை 10.30 மணி அளவில், பரமக்குடி அருகேயுள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிவக்குமார் என்ற வேன் டிரைவர் கல்லாலும் கட்டையாலும் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி பரவியிருக்கிறது.  http://tamil.oneindia.in/

மதியம் 1 மணி அளவில் பொன்னையாபுரம் அருகில், அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இது தவிர, மதுரை அருகில் உள்ள எஸ். புளியங்குளத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் ஒரு சுமோவில் கோரிப்பாளையம் தேவர் சிலைக்குச் சென்ற போது, சுமோ வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் குண்டுகள் சுமோவுக்குள் வீசப்பட்டு, வண்டிக்குள் இருந்தவர்கள் கீழே இறங்குவதற்குள் அத்தனை பேரையும் தீப்பற்றிக் கொண்டுவிட்டது.
தீக்காயம்பட்டதில் 3,11,2012ல் ஜெயபாண்டி என்பவரும், சுந்தரபாண்டி மற்றும் வெற்றிவேல் ஆகியோர் 4,11,2012லும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 31,10,2012ல் விருதுநகர் மாவட்டத்தில் சிலர் தாக் கப்பட்டதில் கருப்பன் உயிரிழந்திருக்கிறார்.
அது போலவே அ.முக்குளம் குறுவட்டம், பூம்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரை சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார். முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம் இவற்றின் காரணமாக இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொலை, கொள்ளைகள் நாளும், நாளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
14,10,2012 ஆங்கில நாளிதழில் அதிமுக ஆட்சியில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 9 அரசியல் கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார் என்றும் பட்டியலையே வெளியிட்டிருந்தார்கள். முக்கிய கொலைகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் இந்த அரசு திறமையாகச் செயல்படவில்லை.
அதற்கு உதாரணம் தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. திருச்சியில் நேரு தம்பி ராமஜெயம் கொலை நடைபெற்று எத்தனையோ மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இதெல்லாம் இந்த ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும், அரசுத்துறை அலட்சியத்துக்கும் உதாரணம் என்ற போதிலும், சிவகங்கை அருகே ரவுடி கும்பலை பிடிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர், ஆல்வின் சுதன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு யார் கையில் அகப்பட்டு கெட்டுப் போயிருக்கிறது என்பதற்குக் கடந்த சில நாட்களில் நடைபெற்ற இந்த சம்பவங்களும் உதாரணங்களாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: