புதன், 7 நவம்பர், 2012

பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இஸ்லாமாபாத்: ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினையை தூண்டி விடும் எந்த செயலையும் பொறுத்து கொள்ள முடியாது. ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு ராணுவ தளபதி அஷ்பக் கயானி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் மற்றும் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ.யின் தலையீடு அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. ராணுவ புரட்சி மூலம் நாட்டின் அதிகாரத்தை பலர் பிடித்த வரலாறும் உண்டு. ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரசியலில் தலையிட வேண்டாம். அரசியலில் தலையிடுவதை ராணுவ அதிகாரிகள் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ராணுவத்துக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உத்தரவிட்டார்.


இதுகுறித்து ராணுவ தளபதி அஷ்பக் கயானி  நேற்று கூறுகையில், தேசிய நலனை பொறுத்த வரை ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது என்று கூறினார். எனினும், அவர் நீதிமன்றம் அல்லது நீதிபதிகள் பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எனினும், உச்ச நீதிமன்றத்தை தான் அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்று பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எந்த ஆதாரமும் இல்லாமல், விசாரணை இல்லாமல் தீர்ப்பளிக்க கூடாது. அது பொதுமக்களாக இருந்தாலும் ராணுவத்தினராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கயானி கோபமாக கூறியுள்ளார். ஆனால், அரசியலில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்று கோரி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் எதிரொலியாகவே கயானி நேற்று கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறுகின்றனர். ராணுவத்துக்கும் நீதித்துறைக்கும் பனிப்போர் முற்றி வருவதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://www.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: